செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய முடியுமா?
கேட்பதற்கு
எளிதாக இருந்தாலும், செவ்வாயில் விவசாயம் என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம்.
காரணம்
அங்கே நிலம் கிடையாது. முழுக்க சிவப்பு கலர் மணல். பார்க்க அழகாக இருக்கும். அதில்
செடி கிளம்புவது நம் பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்புவது போல. அப்படியே கிளப்பினாலும்
அதில் பெர்குளோரேட் என்ற நச்சு இருக்கிறது. அந்த மண்ணில் விளைந்த தக்காளியைச் சாப்பிட்டால்,
அடுத்த நிமிடம் செவ்வாய் கிரகத்தைத் தாண்டி பரலோகம் போக வேண்டியிருக்கும்.
இதை
எப்படியோ சமாளித்துவிட்டால், அப்புறம் தண்ணீர்?
நமது
ஊர் காவிரித் தண்ணீர், தாமிரபரணித் தண்ணீர் போல பாய்வதற்கு அங்கே வாய்க்கால், வரப்புகள்
எல்லாம் கிடையாது. எல்லாம் ஐஸ் கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. அதை உருக்கி, சுத்தம்
செய்து, அப்புறம்தான் செடிக்கு ஊற்ற வேண்டும். அதுவும் தண்ணீரிலேயே எல்லா சத்துகளையும்
கலந்து ஊற்ற வேண்டும். அதற்குப் பெயர் ஹைட்ரோபோனிக்ஸ். செவ்வாயில் அதுதான் எடுபடும்.
இதைச்
சமாளித்து விட்டால், அடுத்து அங்கே வெயில் ரொம்ப கம்மி. மங்கலான பல்பை எரியவிட்டது
போல இருக்கும். அதனால் குறைமாதக் குழந்தைகளை இன்குபேட்டரில் வைப்பதைப் போல வைத்து,
ஸ்பெஷல் எல்இடி விளக்குகளை எரிய விட வேண்டும்.
இதையும்
சமாளித்து விட்டால், வளிமண்டல ஓட்டையைச் சமாளிக்க வேண்டும். சூரியனின் கதிர்வீச்சு
நேராக வந்து மண்டையைப் பிளக்கும். அதனால் விவசாயத்தை நிலத்தடியில் அல்லது தடிமனான கண்ணாடி
அறைகளுக்குள் தான் செய்ய முடியும்.
மற்றபடி
செவ்வாயில் 95 சதவீதம் கார்பன்-டை-ஆக்சைடுதான். தாவரங்களுக்கு இது ஜாலிதான், ஆனால்
விவசாயம் பண்ண நினைக்கும் விவசாயிக்கு மூச்சுத் திணறிவிடும்.
இவ்வளவையும்
சரி பண்ணினால் அங்கே என்ன விளையும் என்றால், உருளைக் கிழங்கு, தக்காளி, கீரை வகைகள்தான்.
பொன்னி
அரிசியையும், துவரம் பருப்பையும் பேக் பண்ணிக் கொண்டு போனால், அங்கே விளைந்த அவற்றைச்
சாம்பார் வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குப் பூமியிலேயே விவசாயம் செய்து இங்கேயே
சாம்பார் வைத்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்கிறீர்களா?
ஆக அங்கு
விவசாயம் பண்ண முடியாது என்பதல்ல, பண்ணுவதற்கு இன்னும் சில பல வருடங்கள் ஆகும். ஆராய்ச்சிகள்
நடந்து கொண்டிருக்கின்றன.
மொத்தத்தில்
மேலே நாம் சொன்ன அவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன செவ்வாயில் விவசாயம் செய்வதில். பூமியில்
மட்டும் பிரச்சனைகளே இல்லையா, அதற்கு செவ்வாயில் விவசாயம் பண்ணப் புறப்படுவதே மேல்
என்று அங்கு கிளம்பி விட்டால், அங்கும் நம் அரசியல்வாதிகள் வந்து உங்களை டிராக்டரோடும்,
கோவணத்தோடும் அங்குள்ள கிரகாளுமன்றத்தின் முன்னால் போராட விட்டாலும் விட்டு விடுவார்கள்.
*****

No comments:
Post a Comment