Saturday, 28 March 2026

ஏலியன்ஸ் இருக்கிறார்களா? இல்லையா?

ஹலோ! ஏலியன் யாராவது இருக்கிறீர்களா?

கான்டாக்ட் என்பது கார்ல் சகன் நாற்பது வருடங்களுக்கு முன் எழுதிய நாவல். வானத்தில் இருந்து ஒரு ரேடியோ சிக்னல் வரும், அதில் ஏலியன்ஸ் அனுப்பிய ஒரு விண்கலத்திற்கான ப்ளூ பிரிண்ட் இருக்கும். இதுதான் கதை. சயின்ஸ் பிக்சன்தான், ஆனால் கார்ல் சகன் ஒரு வானியல் அறிஞர் என்பதால், அதில் ஒரு டெக்னிக்கல் நிஜம் ஒட்டியிருக்கும்.

ஆனால் நிஜத்தில்? நூறு வருடமாகக் காதைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம். பிரபஞ்சத்தில் இருந்து ஒரு மிஸ்டு கால் கூட வரவில்லை. நாம் இன்னும் அனாதையாகவே சுற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்பிக்கை இன்னும் சாகவில்லை. ஏனென்றால் நாம் இதுவரை தேடியது ஒரு துளி அளவுதான். இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம்.

ரேடியோ அஸ்ட்ரானமியில் ஒரு முக்கிய எண் இருக்கிறது. 1420.4 MHz. இது ஹைட்ரஜன் அணுக்கள் வெளியிடுகின்ற அதிர்வெண். பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் கொட்டிக் கிடக்கிறது. ஒருவேளை ஏலியன்ஸ் நம்மைத் தொடர்பு கொள்ள நினைத்தால், இந்த யுனிவர்சல் ஹேய்லிங் சேனலைத்தான் பயன்படுத்துவார்கள் என்பது ஒரு கணிப்பு.

1924 இல் செவ்வாய் கிரகத்தில் இருந்து யாராவது பேசுகிறார்களா என்று மிலிட்டரி ரேடியோ மூலமாக ஒட்டுக் கேட்டார்கள்.

அப்புறம் 1960 இல் பிராங்க் டிரேக் என்பவர் ப்ராஜெக்ட் ஓஸ்மா என்ற ஒன்றை ஆரம்பித்தார். இரண்டு நட்சத்திரங்களை குறி வைத்து இந்த 1420 MHz இல் கேட்டார். அப்போது அது ஒரே ஒரு சேனல். இப்போது கிரீன் பேங்க் டெலஸ்கோப்பில் ஒரே நேரத்தில் ஒன் பில்லியன் அதாவது 100 கோடி சேனல்களைக் கவனிக்க முடியும்!

பிராங்க் டிரேக் ஒரு சிம்பிள் ஈக்வேஷன் போட்டார். அதன்படி நம் பால்வெளி மண்டலத்தில் மட்டும் குறைந்தது சில டஜன்களில் இருந்து 5 கோடி நாகரிகங்கள் இருக்க வேண்டும். ஆனால் எல்லாரும் எங்கே போனார்கள்? இதுதான் புகழ்பெற்ற பெர்மி முரண்பாடு. ஒன்று அவர்கள் ரொம்ப தூரத்தில் இருக்க வேண்டும். அல்லது அவர்களுடைய டெக்னாலஜி இன்னும் வளர வேண்டும். அல்லது நாம் இன்னும் சரியாகத் தேட வேண்டும்.

இப்போது இருக்கின்ற டெக்னாலஜி மூலம் லீக்கேஜ் ஆகும் சிறு சிக்னல்களைக் கூட நாம் பிடித்து விட முடியும். அதாவது, ஏலியன்கள் நமக்குச் செய்தி அனுப்ப வேண்டாம், அவர்கள் உலகில் டிவி சிக்னலோ அல்லது ரேடாரோ விண்வெளியில் கசிந்தால் கூட போதும், அவர்களை நாம் பிடித்து விடலாம்.

2030 இல் வர இருக்கின்ற ஸ்கொயர் கிலோமீட்டர் அர்ரே அப்சர்வேட்டரி என்பது ஒரு கேம் சேஞ்சர். தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டெனாக்களை இதற்கென நட்டு வைக்கப் போகிறார்கள். இது 12,000 ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கின்ற ஒரு சிக்னலை கூட மோப்பம் பிடித்து விடும்.

இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் புரிகிறது. நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இல்லை. ஆனால் அந்தப் பக்கம் இருந்து ஹலோ சொல்லப் போகும் ஏலியன் யார்? எப்போது சொல்லப் போகிறார்கள் என்பதுதான் இப்போதைக்கு விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

கூடிய சீக்கிரம் அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும் என்று நம்புவோம். ஆகக் காத்திருப்போம். சிக்னல் கிடைக்காமலா போய் விடும்?

வெய்ட் அன்ட் வாட்ச்.

இங்கே காத்திருக்காமல் கதை நகராது. அது இனிமேலும் பிக்சன் கதையாக இருக்காது. ஆம் நிஜக்கதையாகவும் இருக்கக் கூடும்.

*****

No comments:

Post a Comment