Friday, 6 March 2026

வெடிக்கின்ற எரிமலை மேல் தண்ணீர் ஊற்றினால் என்னவாகும்?

வெடிக்கின்ற எரிமலை மேல் தண்ணீர் ஊற்றினால் என்னவாகும்?

எரிமலை மேல், அதுவும் வெடிக்கின்ற எரிமலை மேல் தண்ணீர் ஊற்றுவது செல்லூராருக்குத் தோன்றியது போல பலே ஐடியா! ஆனால் நிஜம் எப்படி இருக்கும்?

வெடிக்கிற எரிமலை மேல் பத்து லாரி தண்ணீரை ஊற்றி அணைக்க நினைப்பது, கொழுந்து விட்டு எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவதற்குச் சமம். அப்படிச் செய்தால் ஊற்றுகிற தண்ணீர் வெடிகுண்டாக மாறும்.

தண்ணீர் நெருப்பை அணைக்கும். ஆனால் நெருப்பு வேறு, லாவா வேறு. எரிமலை வெடிக்கும் போது வெளியே வருவது லாவா. அது ஆயிரம் டிகிரி செல்சியஸ்க்கு மேல் நெருப்புக் குழம்பாக இருக்கும் பாறை. அதனால் அதன் மீது தண்ணீரை ஊற்றினால், அது சடார் என்று ஆவியாகும். அந்த ஆவிக்கு பயங்கரமான அழுத்தம் இருக்கும். அது எரிமலையை அணைக்காது, இன்னும் வேகமாக வெடிக்க வைக்கும், அதாவது ஒரு பிரஷர் குக்கர் வெடிக்கிற மாதிரி.

இங்கு என்ன அறிவியல் நடக்கிறது என்றால், ஒரு துளி தண்ணீர் நீராவியாக மாறும்போது அதன் கனஅளவு சுமார் 1,600 மடங்கு அதிகமாகும். இதனால் லாவாவின் மேல் பகுதி திடீரெனக் குளிர்ந்து இறுகும். ஆனால் உள்ளே இருக்கும் அழுத்தம் அந்தப் பாறையைத் துண்டு துண்டாகச் சிதறடிக்கும். இது பாறைச் சிதறல்களை வெடிகுண்டு போல நாலாபுறமும் சிதறச் செய்யும். சுருக்கமாகச் சொன்னால் இது ஹைட்ரோ எக்ஸ்புளோஷன். அதாகப்பட்டது, நீங்கள் ஊற்றும் தண்ணீர் ஒரு பெரிய வெடிகுண்டாக மாறி எரிமலையை இன்னும் மோசமாக வெடிக்கச் செய்யும்.

இதை இன்னும் உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், எரிமலை மேல் தண்ணி ஊற்றுவது என்பது, கொதிக்கின்ற தாளிப்புச் சட்டியில் ஒரு சொட்டுத் தண்ணீர் விழுந்தால் எப்படித் தெறிக்குமோ, அதனுடைய மெகா சைஸ் வெர்ஷனாக இருக்கும்.

அதனால் எரிமலை வெடிக்கின்ற போது அதன் மேல் தண்ணீர் ஊற்றுகின்ற தீப்பொறி திருமுகம் பாணி வேலைகள் இங்கு வேலைக்கு ஆகாது.

*****

No comments:

Post a Comment