Friday, 27 March 2026

சேலஞ்ச் ஓட்டு (Challenge Vote) என்றால் என்ன?

சேலஞ்ச் ஓட்டு (Challenge Vote) என்றால் என்ன?

இது ஒரு விறுவிறுப்பான 'கோர்ட் சீன்' மாதிரி. பூத்துக்குள்ளேயே நடக்கும் ஒரு மினி விசாரணை.

ஓட்டுப் போட. ஒருத்தர் வருகிறார். "ஐயா! என் பெயர் சுந்தர் பிச்சை. இது என் வாக்காளர் அடையாள அட்டை" என்று நீட்டுறார். ஆனால் அங்கே உட்கார்ந்திருக்கும் பூத் ஏஜென்ட்டுக்கு ஒரு சந்தேகம். "நிஜமான சுந்தர் பிச்சை எப்பவோ அமெரிக்காவுக்கு ஷிப்ட் ஆயிட்டாரே, இவன் யார்?"

அப்போது அந்தப் பூத் ஏஜென்ட் எழுந்து, "ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்!" என்று சொல்வதான் இந்த 'சேலஞ்ச்'.

அதன் பிறகு ஸ்கிரிப்ட் இப்படித்தான் நகரும்.

பூத் ஏஜென்ட் சும்மா வாயால் சொல்ல முடியாது. வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் 2 ரூபாய், ஆமாம், வெறும் இரண்டு ரூபாய்தான் கட்ட வேண்டும். "இவன் போலி ஆசாமி, நான் சொல்வது பொய் என்றால் இந்த இரண்டு ரூபாயை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஒரு சவால்.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அந்த ஆசாமியிடம் விசாரணை நடத்துவார். "உங்கள் அப்பா பெயர் என்ன? தெரு பெயர் என்ன? வீட்டு எண் என்ன?" என்று குடைவார். ஒருவேளை அந்த ஆசாமி சரியான ஆதாரம் காட்டி, தான்தான் ஒரிஜினல் என்று நிரூபித்தால், அவருக்கு ஓட்டுப் போட அனுமதி உண்டு.

ஆக, இதன் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்றால்,

அந்த ஆள் உண்மையானவர் என்றால், பூத் ஏஜென்ட் கட்டிய 2 ரூபாய் அரசாங்க கஜானாவுக்குப் போயிடும்.

அந்த ஆள் போலி என்று தெரிந்தால், அவரை உடனே போலீஸ் இடம் ஒப்படைப்பார்கள். பூத் ஏஜென்ட் கட்டிய 2 ரூபாய் அவருக்கே திரும்பக் கிடைத்து விடும்.

இப்போது ஒரு கேள்வி.

டெண்டர் ஓட்டுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?

டெண்டர் ஓட்டு என்றால் ஒருவர் ஓட்டை வேறு யாரோ போட்டு விட்டுப் போய் விட்டால், அவருக்கு வழங்கப்படும் ஜனநாயக உரிமை.

சேலஞ்ச் ஓட்டு என்றால், ஒருவரை இவன் அவன் இல்லை என்று பூத் ஏஜென்ட் செய்கின்ற கம்ப்ளைன்ட். மொத்தத்தில், ஜனநாயகம் என்கின்ற மெஷினில் எந்தப் போலியான உதிரிபாகமும் உள்ளே நுழைந்து விடக் கூடாது என்று வைக்கப்பட்டிருக்கும் ஒரு செக் போஸ்ட்தான் இந்தச் சேலஞ்ச் ஓட்டு.

*****

No comments:

Post a Comment