Monday, 30 March 2026

அரோரா என்றால் என்ன? - வானில் ஒரு மேஜிக் ஷோ!

வானத்தில் ஒரு மேஜிக் ஷோ!

ஜனவரி மாதம், சுவிட்சர்லாந்து அல்லது ரஷ்யாவின் எல்லையில் நின்று ராத்திரி வானத்தைப் பார்த்தீர்கள் என்றால், திடீர் என்று ஓர் அதிசயம் நடக்கும். வானமே ஒரு பெரிய கலர் டிவியாக மாறி விடும். பச்சை, சிவப்பு, ஊதா என்று விதவிதமான வர்ணங்கள் வானத்தில் திரை மாதிரி ஆடும். இதைப் பார்த்தால் யாருக்குமே ஒரு நிமிஷம் மூச்சு நின்று விடும். இதுக்குத்தான் அரோரா என்று பெயர்.

வட துருவத்தில் தெரிந்தால் அது அரோரா போரியாலிஸ், தென் துருவத்தில் தெரிந்தால் அது அரோரா ஆஸ்ட்ராலிஸ்.

இப்போது நமக்கு இதெல்லாம் அயனைசேஷன், மேக்னட்டோஸ்பியர் என்று அறிவியலாகத் தெரிகிறது. ஆனால், முன்னாடி இருந்தவர்களுக்கு?

அவர்கள் இது நம் முன்னோர்களின் ஆன்மா என்று நம்பினார்கள்.  அதற்கு மரியாதை தர வேண்டும் என்று அந்த வெளிச்சம் வரும்போது விசிலடிக்க மாட்டார்கள், கையைக் காட்டிச் சுட்டிக்காட்ட மாட்டார்கள். அவ்வளவு பவ்யம், அவ்வளவு மரியாதை.

மாவோரி மக்கள் இதைப் பார்த்த போது இதை அவர்கள் முன்னோர்கள் போட்ட கேம்ப் ஃபயர் என்று நினைத்தார்கள்.

ஆஸ்திரேலிய பழங்குடியினர் பயந்தே விட்டார்கள். ஏதோ வானத்தில் காட்டுத்தீ பிடித்து விட்டது, இது அழிவுக்கான அறிகுறி என்று நடுங்கியிருக்கிறார்கள்.

1619 இல் கலீலியோ இதற்கு அரோரா போரியாலிஸ் என்று நாமகரணம் செய்து வைத்தார். அரோரா என்றால், ரோமானிய விடியல் தேவதை. போரியஸ் என்றால், கிரேக்க வட பகுதி தேவன். அவர் என்ன நினைத்ததார் என்றால், சூரிய ஒளி அட்மாஸ்பியரில் பட்டு எதிரொளிக்கிறது என்றார். ஆனால் அது தவறு.

அப்புறம் பெஞ்சமின் பிராங்க்ளின், இதெல்லாம் மின்சாரம் தொடர்பானது என்றார்.  மேக்னடிக் போலில் சார்ஜ் அதிகமானால் இப்படித் திரையாகத் தெரியும் என்று ஒரு தியரியைப் போட்டு ஓரளவுக்கு உண்மைக்குப் பக்கத்தில் வந்தார்.

நிஜமான காரணம் தெரிந்தது 1851இல். எட்வர்ட் சாபி என்வர், சூரிய புள்ளிகளுக்கும் இந்த அரோராவுக்கும் ஒரு லிங்க் இருப்பதைக் கண்டறிந்தார். சூரியன் எங்கேயோ இருக்கிறது. அது எப்படி இங்கே இருக்கின்ற காற்றை வெளிச்சமாக்குகிறது என்று மற்றவர்கள் கிண்டலடித்தார்கள்.

ஆனால் 1859 இல் ஒரு சம்பவம் நடந்தது. கேரிங்டன் ஈவென்ட் அன்றைக்கு டெலிகிராப் ஒயர்கள் எல்லாம் பயங்கரமாகச் சூடாகி, ஆபரேட்டர்களுக்கு ஷாக் அடித்தது. பேட்டரி இல்லாமலேயே மெசேஜ் போனது. வானமே ரத்தச் சிவப்பாக மின்னியது. அப்போதுதான் தெரிந்தது, சூரியன் சும்மா இருப்பதில்லை, அது ஏதோ துகள்களை பூமிக்கு மேல வீசி எறிகிறது என்று.

எப்படி நடக்கிறது இந்த மேஜிக் என்றால், சூரியன் ஒரு பெரிய பிளாஸ்மா உருண்டை. அதில் இருந்து எப்போதும் புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் விண்வெளியில் தெறித்து விழும். விழும். இதற்கு சூரியக் காற்று என்று பெயர்.

பூமிக்கு ஒரு மேக்னடிக் கவசம் இருக்கிறது. அந்தக் கவசம் இந்த சூரியக் காற்றை அப்படியே வளைத்து வட துருவத்துக்கும் தென் துருவத்துக்கும் கொண்டு போய் விடும். அங்கே இருக்கின்ற ஆக்சிஜன், நைட்ரஜன் அணுக்கள் மேல் இந்த துகள்கள் மோதும்போது, அந்த அணுக்கள் எனர்ஜி ஆகிப் பிரகாசிக்கும்.

ஆக்சிஜன் மேல் மோதினால், பச்சை அல்லது சிவப்பு கலர்.

நைட்ரஜன் மேல் மோதினால், நீலம் அல்லது ஊதா கலர்.

சூரியன் இப்போது தன்னுடைய சோலார் மேக்ஸிமம் கட்டத்தில் உள்ளது. அதாவது ரொம்ப ஆக்டிவாக இருக்கிறது. அதனால் இப்போது இந்த் மார்ச், ஏப்ரல் மாதத்தில் அரோரா பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வானத்தில் வெறும் கலர் மட்டும் இல்லாமல், இப்போ புதிதாக ஸ்டீவ் என்று ஓர்  ஊதா கலர் கோடும், புரோட்டான் பான்கேக் என்று சில சிவப்பு வடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இது வெறும் அறிவியல் மட்டும் இல்லை, பிரபஞ்சத்துக்கும் நமக்கும் இருக்குற ஒரு மர்மமான பந்தம். ஒருவேளை நீங்கள் ஐஸ்லாந்து பக்கமோ அல்லது அலாஸ்கா பக்கமோ போனால், அந்த ராத்திரி மேஜிக்கைப் பார்க்கலாம். ஆனால் அங்கே போவதற்கு ஒரு பிளைட் டிக்கெட் தேவைப்படும்! எடுத்து விட்டீர்கள் என்றால் பார்த்து விடலாம். அவ்வளவுதான் விசயம்.

*****

No comments:

Post a Comment