Saturday, 14 March 2026

பேரன்டிங் பாரடாக்ஸ் என்றால் என்ன தெரியுமா?

பேரன்டிங் பாரடாக்ஸ் என்றால் என்ன தெரியுமா?

குழந்தை பெற்றுக் கொண்டால் நிம்மதி போய் விடும் என்பார்கள். ஆனால் அதுதான் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது என்றும் சொல்வார்கள். இதில் எது உண்மை?

இதை உளவியலில் பேரண்டிங் பாரடாக்ஸ் என்கிறார்கள். அதாவது, குழந்தை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தினசரி டென்ஷன், தூக்கமின்மை, ரத்த அழுத்தம் எல்லாம் ஜாஸ்தி. ஆனால், வாழ்க்கை திருப்தியா இருக்கா? என்று கேட்டால், ஆமாம் என்பார்கள்.

என்ன ஒரு முரண்பாடு?

இதைத் துப்புத் துலக்கப் புறப்பட்டார்கள் நரம்பியல் விஞ்ஞானிகள்.

88 புது அப்பாக்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அப்பா ஆவதற்கு முன்னும் பின்னும் மூளை எப்படி வேலை செய்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு.

விஞ்ஞானிகள் எதிர்பார்த்தது என்னவென்றால், அப்பா ஆனதும் எல்லோருக்கும் வாழ்க்கையின் அர்த்தம் கூடிவிடும் என்று.

கிடைத்த முடிவு 50% பேருக்குத்தான் அர்த்தம் கூடியது. மிச்சம் பாதிப் பேருக்கு. ம்ஹூம்.

ஏன் இப்படி என்கிறீர்களா?

மூளைக்குள் சில பிரதேசங்கள் உண்டு.

மூளையில் உள்ள மிடில் ஃப்ரண்டல் கைரஸ் என்பது சுயகட்டுபாட்டுக்கான பிரதேசம்.

சுப்ரா மார்ஜினல் கைரஸ் என்பது மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பிரேதேசம்.

யாரெல்லாம் குழந்தையைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டார்களோ, அவர்களுக்கு இந்த இரண்டு இடங்களிலும் தொடர்பானது பின்னிப் பெடலெடுத்தது.

ஆனால், சில பேருக்கு மூளையின் சென்சரி கார்டெக்ஸ் அதிகமாக வேலை செய்தது. இவர்களுக்குக் குழந்தை அழுதால் எரிச்சல் வரும். சத்தம் காதைத் துளைக்கும். மன அழுத்தம் ஏறும். பாவம், இவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு நரகம்!

குழந்தைகளால் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது என்கிறார்களே, அது எப்படி என்கிறீர்களா?

அங்கேதான் இன்சுலர் கார்டெக்ஸ் மற்றும் டெம்போரல் போல் வேலைக்கு வருகின்றன. இவைதான் நம் உணர்வுகளையும், நாம் யார் என்கிற பிம்பத்தையும் ஒட்டு வைக்கும் ஃபெவிகால்.

நடுராத்திரி இரண்டு மணிக்குக் குழந்தை அழும்போது, சனியனே, தூங்க விடமாட்டேங்குதே, என்று நினைக்காமல், என் வாரிசு அழுகிறது, அதைச் சமாதானப்படுத்துவது என் கடமை என்று ஒரு ஹீரோ கதையை மூளைக்குள் ஓட்டினால், அங்கே மன அழுத்தம் காணாமல் போய், அந்த அர்த்தம் பிறந்து விடுகிறது.

குழந்தை வளர்ப்பு குறித்த பெற்றோர்களின் மனதிருப்தி குறித்த ஒரு புள்ளி விவரமும் இருக்கிறது. அது என்னவென்றால்,

குழந்தை உள்ளவர்களுக்கு அதிக மன அழுத்தம் அதே நேரத்தில் அதிக வாழ்க்கை திருப்தியும் இருக்கிறது.

குழந்தை இல்லாதவர்களுக்கு குறைவான மன அழுத்தம் மற்றும் சராசரியான நிம்மதி இருக்கிறது.

குழந்தை வேண்டும் என ஏங்குபவர்களுக்கு வயது ஏற ஏற மன திருப்தி குறைந்து விடுகிறது.

இத்துடன் குழந்தை இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. மூளை அந்தச் சூழலை எப்படி அணுகுகிறது என்பதும் முக்கியம்.

நமது மூளை ஒரு கில்லாடி. நாம் தேர்ந்தெடுக்கும் பாதைக்குத் தகுந்தபடி அது கதைகளை மாற்றிக்கொள்ளும். குழந்தை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என் வாழ்க்கை அர்த்தமுள்ளது என்று உங்கள் மூளைக்குச் சொல்லிக் கொடுக்கத் தெரிந்தால், அதையும் நீங்கள் காலப் போக்கில் ஏற்றுக் கொள்வீர்கள். அவ்வளவுதான் விசயம்.

மொத்தத்தில் உங்கள் மூளையை நீங்கள் கையாள்கிறீர்களா அல்லது சமூகக் கருத்துகளுக்கேற்ப கையாள்கிறீர்களா என்பதுதான் இதில் உள்ள சாராம்சம்.

*****

No comments:

Post a Comment