செய்திகளைப் பகிர்ந்து கொள்வது தலைமுறைகளுக்கு நல்லது
நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இவ்வலைப்பூவின் முக்கிய
நோக்கங்களுள் ஒன்று. அவ்வபோது நல்ல செய்திகள் பலவற்றையும் இவ்வலைப்பூவின் மூலமாகப்
பகிர்ந்தும் வந்திருக்கிறேன். ஒரு சில செய்திகள் பலரால் நன்கு அறியப்பட்டிருந்தாலும்
அதை அறியாத சிலர் இருக்கலாம் என்று பகிரப்பட்ட செய்திகளும் இருக்கின்றன.
அண்மையில் சந்தித்த பெரியவர் ஒருவர் பாரதிதாசன் கவிதைகளில் ஆழமுடையவராக
இருந்தார். பேசப் பேச அவரது உரையாடல் ஒவ்வொன்றும் பாரதிதாசன் கவிதைகளாக வந்து விழுந்து
கொண்டே இருந்தது ஆச்சரியம். எப்படிச் சூழலுக்குப் பொருத்தமாக அவருக்கு பாரதிதாசனின்
கவிதை வரிகளே உரையாடல் வரிகளாக அமைகின்றன என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
பாரதிதாசன் கவிதைகளில் ஊறி ஆழ்ந்து தோய்ந்திருந்தால்தான் அது சாத்தியம் எனப் பட்டது.
“தனியார்மயத்துக்கு எதிராகவும் பாவேந்தர் பாடியிருக்கிறார், தெரியுமோ?” என்றதும் “அப்படியா!”
என்ற ஆச்சரியம் விலகாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார்,
“தனியாரிடத்தில் வாணிகம் இருந்தால்
சரி விலைக்குச் சரக்கு அகப்படுமா?
எள் முதல் அரசினர் கொள்முதல் செய்க!
எப்பாங்கும் கடை வைத்து விற்பனை
செய்க!”
என்று பாரதிதாசனின்
வரிகளை. “அவரோட அடிபொடி பட்டுக்கோட்டை பாடியிருக்கிற வரி தெரியுமோ?” என்றார் அடுத்த
பீடிகையைப் போட்டுக் கொண்டே. அதற்கும் ஆச்சரியமான பார்வை ஒன்று மட்டுமே என்னிடம் இருந்தது.
அவரே தொடர்ந்தார்,
“எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது உழைச்சு சோறு போடுறான்
எல்லாம் படிச்சவன் ஏதேதோ
பேசி
நல்லா நாட்டைக் கூறு
போடுறான்”
பாட்டாகப்
பாடி விட்டு கபகபவென்று சிரித்தார். அவ்வளவுதான், அவர் யாரென்று விசாரித்து அறிந்து
கொள்வதற்கு முன் ஆள் காணாமல் போய் விட்டார். விசாரித்த போது அவரைப் பற்றிச் சொன்னார்கள்,
“அவர் அப்படித்தாம்பீ! ஒரு மாதிரி. யாருக்கும் பிடி கொடுக்க மாட்டாம். ஏதோ பாட்டுப்
புஸ்தகத்துல ஏதேதோ படிச்சிட்டு ஔறுவாம். நீங்க ஒண்ணும் நெனைச்சாகுதுங்கம்பீ! எல்லாம்
மனக்கோளாறு.” என்று. எனக்கென்னவோ யாருக்கு மனக்கோளாறு என்பதில் நிறைய கேள்விகள் இருந்தன.
மற்றுமொரு சம்பவம். “உங்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர்.
விரிவாக்கம் என்னவென்று தெரியுமா?” என்று சுமார் பனிரெண்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண்
குழந்தை கேட்ட போது, “அது கோரொனா பரிசோதனைதானே?” என்றேன் நான். “அது எல்லாருக்கும்
தெரியும். நான் கேட்டது விரிவாக்கம்.” என்றாள் அந்தப் பெண் கண் விழிகள் இரண்டையும்
உருட்டியபடி. யாருக்குத் தெரியும் அந்த விரிவாக்கம் என்று நான் நெற்றியைச் சுருக்கிய
போது அந்தப் பெண்ணே சொன்னாள், “Reverse Transcription Polymerase Chain Reaction” என்று.
இந்தக் காலத்துக் குழந்தைகள் நிறைய செய்திகளை அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்தக்
குழந்தையிடம், “பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டையின் பாடல் எதாவது தெரியுமா?” என்றேன்.
தெரியாது என்பது போலத் தலையை ஆட்டினாள். நான் முன்பு பெரியவரிடம் கேட்ட இரண்டு பாடல்களையும்
சொன்னேன். “வாவ்! சூப்பர்!” என்றவள் “இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்றாள். நான்
மேலும் சில பாடல்களைச் சொல்லி விட்டு பாரதிதாசன் கவிதைகள் பற்றியும் பாட்டுக்கோட்டை
கலியாணசுந்தரம் பாடல்கள் பற்றியும் புத்தகங்கள் இருப்பதைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.
என்னிடமிருந்து சில செய்திகளைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சி அந்தப் பெண் குழந்தைக்கு.
அந்தக் குழந்தையிடமிருந்து நான் சில செய்திகளைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சி எனக்கு.
இக்கால குழந்தைகளோடு உரையாடுவது ஆரோக்கியமானதாகத்தான் இருக்கிறது. நமக்குத் தெரியாத
செய்திகள் அவர்களிடம் இருக்கின்றன. அவர்களுக்குத் தெரியாத செய்திகள் நம்மிடம் இருக்கின்றன.
இரண்டும் ஒன்று கலந்தாக வேண்டும்.
*****
No comments:
Post a Comment