Monday, 17 April 2023

உங்கள் கிரெடிட் ஸ்கோர் சொல்வதென்ன?

உங்கள் கிரெடிட் ஸ்கோர் சொல்வதென்ன?

தற்போதைய கால கட்டத்தில் வங்கிகள் கடன் கொடுப்பதற்கு சிபில் கிரெடிட் ஸ்கோரைப் பின்பற்றுகின்றன. ஒருவரின் வருமானம், கடன், கடனைத் திருப்பிச் செலுத்திய கடந்த கால செயல்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த சிபில் கிரெடிட் ஸ்கோரானது கணக்கிடப்படுகிறது.

பொதுவாக இந்த கிரெடிட் ஸ்கோர் 300 இல் துவங்கி 900 வரை வழங்கப்படுகிறது. இதில் உங்களது கிரெடிட் ஸ்கோர் 300 லிருந்து 550 வரை இருந்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமான நிலையில் இருப்பதாக அர்த்தம். இதுபோன்ற கிரெடிட் ஸ்கோர் உள்ளோருக்கு வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் கடன் வழங்க ரொம்பவே யோசிக்கும். இதன் விளைவாகக் கடன் வழங்குவது மறுக்கப்படலாம் அல்லது கடன் வழங்கப்பட்டாலும் மிக அதிக வட்டியில் வழங்கப்படலாம்.

551 லிருந்து 750 வரையுள்ள கிரெடிட் ஸ்கோர் எனில் அது சரசாரி கிரெடிட் ஸ்கோர் ஆகும். இது போன்ற கிரெடிட் ஸ்கோர் உள்ளோருக்குக் கடன் வழங்க வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் ஆழ்ந்த பரிசீலனை செய்யும். அதிலும் 650க்குக் கீழே கிரேடிட் ஸ்கோர் உள்ளோருக்குக் கடன் வழங்கத் தயங்கும். 651க்கு மேலே கிரேடிட் ஸ்கோர் உள்ளோருக்கே கடன் வழங்குவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் தீவிரமாகப் பின்பற்றிக் கடன் வழங்க முடியுமா எனப் பார்க்கும். பொதுவாகச் சராசரி கிரெடிட் ஸ்கோர் என்றால் பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவது என்பது அசாத்தியமாகும். தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களுமே சற்றுக் கூடுதலான வட்டியில் கடன் வழங்கும்.

750க்கு மேல் உள்ள கிரேடிட் ஸ்கோரே நல்ல ஸ்கோராகும். இத்தகு கிரெடிட் ஸ்கோர் உள்ளோருக்குப் பிணையில்லாமல் கூட வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் கடன் வழங்க தயாராக இருக்கும். அடிக்கடி தொலைபேசியில் அழைத்து ஐந்து நிமிடங்களில் கடன் வழங்க தயாராக இருப்பதாகக் கூறும். பொதுத்துறை வங்கிகளில் தாராளமாகக் கடன் கிடைக்கும். இது போன்ற நிலைமைகளில் நீங்கள் கடனுக்கான வட்டியைக் குறைத்து வாங்குவதற்குக் கூட கிளை மேலாளர்களிடம் பேரம் பேச முடியும்.

தற்போது உங்களது கிரெடிட் ஸ்கோரை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஜி-பேயில் உங்களுக்குக் கணக்கு இருந்தால் அந்த செயலியே உங்கள் கிரெட்டி ஸ்கோரைக் கணித்துக் கூறி விடும். அல்லது ஒரு வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்று நீங்கள் அணுகினாலே அவர்களே உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கணித்துக் கூறி விடுவார்கள்.

உங்கள் வருமானம் நிலையாகவும், கடன் குறைவாகவும், முதலீடுகள் அதிகமாகவும், வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்திய வரலாறும் இருந்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

எப்போதோ வாங்கிய கடனில் நீங்கள் தவணை தவறியிருந்தாலும், தவறிய தவணைகளுக்கு அபராதம் செலுத்தியிருந்தாலும் அது உங்களது கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கவே செய்யும் என்பதை எப்போதும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

*****

No comments:

Post a Comment