Tuesday 18 April 2023

கோடைத் தாகத்தைத் தணித்துக் கொள்வது எப்படி?

கோடைத் தாகத்தைத் தணித்துக் கொள்வது எப்படி?

கோடைக்காலத்தின் தாகத்தைத் தண்ணீர் கொண்டு தணித்துக் கொள்வதே சரியானது ஆகும். அதுவும் குளிர்சாதனப் பெட்டியின் குளிர்ந்த நீராக அல்லாமல் இயல்பான தண்ணீராக இருப்பதே உடலுக்கு உகந்தது ஆகும்.

குளிர்ந்த நீர்தான் வேண்டும் என்றால் மண்பானை நீரைப் பருகலாம்.

தணிக்க முடியாத தாகத்தை வெதுவெதுப்பான வெந்நீரைக் குடித்துத் தணித்துக் கொள்ளலாம், நெருப்பை நெருப்பால் அணைப்பது போல. ஆனால் குளிர் நீரைக் கொண்டு தணிக்க முற்படாமல் இருப்பது எப்போதும் நல்லது.

கொளுத்தும் இந்தக் கோடையில் ஐந்து லிட்டர் வரை கூட ஒருவர் தண்ணீர் அருந்தலாம். அதற்கு மேலும் பருகலாம். இதனால் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள், சிறுநீரக் கல் போன்ற உபாதைகள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.

வெளியில் செல்லும் சூழ்நிலைகளில் கையுடன் பையில் இரண்டு புட்டிகளில் நீரையும் எடுத்துக் கொள்ளலாம். ஒன்றில் நீரையும் இன்னொன்றில் நீராகாரத்தையும் எடுத்துக் கொள்வது சாலச் சிறந்தது ஆகும்.

சாலையாரக் கடைகளில் உண்பது என்றால் இளநீர் மற்றும் நுங்கை மட்டும் பருகலாம், உண்ணலாம்.

இரசாயன குளிர்பானங்கள் பருகுவதைத் தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை மற்றும் நாரத்தை பானகங்களை வஞ்சனையின்றிப் பருகலாம்.

வாய்ருசிக்காக நொறுக்குத் தீனிகள் உண்பதை விடுத்து தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, சாத்துகுடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை உண்ணலாம்.

காலை உணவாக தயிர் கலந்த பழஞ்சோறு உடல் சூட்டைத் தணிப்பதுடன் வயிறு செரிமானம் தொடர்பான கோளாறுகளையும் குறைக்கும் என்பதால் கோடை முடியும் வரை வாரத்திற்குச் சில நாட்களாவது இவ்வகை காலை உணவை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு நாளின் ஒரு வேளை உணவை நீர் மிகுந்த கஞ்சி உணவாக எடுத்துக் கொள்வதும் வயிற்று வேக்காலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். நாளொரு சிறுதானியக் கஞ்சியாகவும் ஒருவேளை உணவை அமைத்துக் கொள்ளலாம்.

கோடைக்காலத்தில் வெயிலில் அலைவதைத் தவிர்க்க முடியாதவர்கள் குளிர்ந்த நீரையும் ரசாயன குளிர் பானங்களையும் தவிர்த்துக் கொண்டு, தண்ணீரையும் இயற்கையான குளிர்பானங்களையும் பழங்களையும் பருகினாலே கோடையை இயல்பாகவும் இனிமையாகவும் எதிர்கொள்ளலாம்.

•••••

No comments:

Post a Comment