Thursday 20 April 2023

குழந்தைகள் பற்றி கலீல் ஜிப்ரான் என்ன சொல்கிறார் தெரியுமா?

குழந்தைகள் பற்றி கலீல் ஜிப்ரான் என்ன சொல்கிறார் தெரியுமா?

குழந்தைகள் பற்றிய கலீல் ஜிப்ரானின் கீழே காணும் வரிகள் கல்வி உலகில் ரொம்ப பிரபலமானது. இந்த வரிகள் அவர் எழுதிய ‘தீர்க்கதரிசி’ எனும் நூலில் இடம் பெற்றுள்ள வரிகள் ஆகும். இவ்வரிகளை மேற்கோள் காட்டாத கல்வியாளர்கள், கல்வி ஆர்வலர்கள், குழந்தை நல விரும்பிகள் அநேகமாக உலகில் இருக்க மாட்டார்கள் என அடித்துச் சொல்லலாம். இனி குழந்தைகள் பற்றிய அவரின் வரிகளைக் காண்போம் வாருங்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்லர்;

அவர்கள் இயற்கையின் குழந்தைகள்.

உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களேயன்றி

உங்களிடமிருந்து அல்ல.

உங்கள் குழந்தைகள் உங்களுடன் இருந்தாலும்

உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.

உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்குத் தரலாம்

உங்கள் எண்ணங்களை அல்ல.

அவர்களுக்கென்று தனித்த சிந்தனைகள் உண்டு.

அவர்களின் உடல்களுக்குத்தான் நீங்கள் பாதுகாப்பு தர முடியும்;

ஆன்மாக்களுக்கு அல்ல.

அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை

அங்கே நீங்கள் செல்ல முடியாது

உங்கள் கனவுகளிலும் கூட.

அவர்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம்,

ஆனால் அவர்களை உங்களைப் போல ஆக்கி விடாதீர்கள்.

வாழ்க்கை பின்னோக்கிச் செல்லாது; நேற்றுடன் உடன்படாது.

நீங்கள் வில்கள். உங்களிடமிருந்து எய்யப்படும் உயிருள்ள அம்புகளே குழந்தைகள்.

அம்பு எதை அடைய வேண்டும் என்ற இலக்கை வில் தீர்மானிக்காது

அம்பை எது எய்துகிறதோ அதுதான் தீர்மானிக்கும்

அம்பை எய்துவது இயற்கையே! நீங்கள் அல்லர்,

நீங்கள் வெறும் வில்தான்!

*****

No comments:

Post a Comment