Wednesday 20 March 2024

மாணவர்களுக்குப் பில் கேட்ஸ் சொல்லும் 11 ரகசியங்கள் என்னவென்று தெரியுமா?

மாணவர்களுக்குப் பில் கேட்ஸ் சொல்லும் 11 ரகசியங்கள் என்னவென்று தெரியுமா?

உலகப் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பில்கேட்ஸ். தற்போது உலகப் பணக்காரர்களின் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பவர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கிய பில்கேட்ஸ் பணத்தைக் குவித்ததுடன், கேட்ஸ்- மிலின்டா அறக்கட்டளை மூலமாக மனித குலத்துக்குச் சேவை செய்தும் வருபவர்.

அவர் தம் வாழ்வில் கற்றுக் கொண்ட பாடங்களைப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் எடுத்துச் சொன்னார்.

பள்ளி மாணவர்களுக்காகப் பில் கேட்ஸ் சொன்ன 11 ரகசியங்களை இங்கே காண்போம்.

1.

வாழ்க்கை ஒரு பூப்பாதை அல்ல. சமுதாயம் நீங்கள் நினைக்கின்றபடி இருக்காது. பிரச்சனைகள் வரும் போது சோர்ந்து விடக் கூடாது.

எத்தனை முறை விழுந்தோம் என்பதை விட எத்தனை முறை எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நாட்டில் நல்லதுக்கு இடமில்லை என்று முணுமுணுப்பதை விட செய்ய முடிந்த நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.

2.

ஒவ்வொருவருக்கும் தன்மானம் முக்கியம். அது அளவுக்கதிகமாகிக் கர்வமாக மாறி விடக் கூடாது. கர்வம் பேரிடியைக் கொண்டு வரும்.

தன்னைக் கௌரவித்துக் கொள்வதைப் போலவே சமுதாயத்தையும் கௌரவித்து முன்னேற்ற முயற்சிக்க வேண்டும்.

3.

பள்ளிப் படிப்பை முடிக்காமல் லட்சங்களில் புரளலாம் என்றும், பெரிய பெரிய பதவிகளை அடையலாம் என்று கனவு காணாதீர்கள்.

4.

பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தப்படாதீர்கள். அதுவும் ஒரு பாடமே.

வாழ்க்கையில் நிறைய பேர் நமக்குத் தெரியாமலேயே பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றனர். அது எப்போது, எப்படி, எந்த மாதிரியாகப் பயன்படும் என்பது இப்போது தெரியாது.

5.

நீங்கள் படிக்கின்ற சூழ்நிலை அனுகூலமாக இல்லையென்றால் அதற்குக் காரணம் பெற்றோர்கள் என்றும், வீட்டுச் சூழ்நிலைகள் என்றும், காலம் சேர்ந்து வரவில்லை என்றும் பிரமையில் விழாதீர்கள்.

எந்த மாதிரியான எதிர்மறையான சூழ்நிலைகளானாலும் அவற்றைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்திச் சாதனைகளைச் செய்தவர்கள் எத்தனையோ பேர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.

6.

உங்களை வளர்த்ததில் எதிர்கொண்ட சிரமங்களுக்காக உங்கள் பெற்றோர்கள் சிறிது கசப்புணர்வை உணர்ந்திருக்கலாம். அந்தக் கசப்புணர்வை அவர்கள் சில பொழுதுகளில் வெளிப்படுத்தவும் செய்யலாம். அதற்காக அவர்களை வெறுக்காதீர்கள். அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

7.

படிப்பதற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சிறிய வேலைகளைச் செய்வதை அசிங்கமாகவோ, அவமானமாகவோ நினைக்காதீர்கள். உங்கள் படிப்பிற்காக உங்கள் பெற்றோரை அதிகம் செலவு செய்ய வைக்காதீர்கள். சிறு சிறு வேலைகள் மூலமாகச் சம்பாதித்து உங்கள் படிப்புச் செலவுகளைச் சமாளிக்கப் பாருங்கள்.

8.

பள்ளியில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தேர்வில் தோற்றவர்கள் வாழ்க்கையில் உயர முடியாது என்று எந்தத் தத்துவமும் கிடையாது.

தேர்ச்சி பெறும் வரை தேர்வுகளை எழுதுங்கள். அது வாழ்க்கையில் விடா முயற்சியை அதிகரிக்கும்.

9.

படிப்பில் பருவங்கள், விடுமுறைகள் இருப்பதைப் போல வாழ்க்கையில் இருக்காது. வாழ்க்கையில் தினமும் தேர்வுகளே. அந்தத் தேர்வுகளைச் சந்தோசமாக எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கையில் விடுமுறை என்பதே கிடையாது. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தால் அதுதான் மனதிற்கு ஓய்வு.

10.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கும் நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. படிக்கும் காலத்தில் தொலைக்காட்சித் தொடர்கள் அல்லது திரைப்படங்களைப் பார்த்து அதைப் போன்று காலத்தைக் கடத்த நினைக்கக் கூடாது.

நிஜ வாழ்க்கையில் நினைத்தபடி நினைத்தது நடக்காது. அதற்காகக் கஷ்டப்பட்டு சிறிய சிறிய தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

11.

படிக்கும் காலத்தில் நண்பர்கள், உறவினர்களுடன் நல்ல உறவுகளை வைத்துக் கொள்ளுங்கள். யாருடனும் சண்டையிடாதீர்கள். ஏனென்றால் எதிர்காலத்தில் யார் யாருக்குக் கீழே வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பது தெரியாது. அனைவரிடமும் நன்றாகப் பழகுங்கள்.

பில்கேட்ஸ் மேற்படி கூறிய விசயங்கள் பிடித்திருந்தால் அவற்றை உடனே அமல்படுத்துங்கள்.

எல்லாம் நினைத்தபடி நடந்தால் உங்களுடைய ஆசிரியருக்கு நன்றி கூறுங்கள். இந்தப் பாடங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுப்பது ஆசிரியரே. ஆசிரியர்களின் ஆசிர்வாதத்தினால்தான் மனிதர்கள் ஒவ்வொருவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment