Sunday, 24 March 2024

நல்ல மாணவர்களின் பண்புகள் என்னவென்று தெரியுமா?

நல்ல மாணவர்களின் பண்புகள் என்னவென்று தெரியுமா?

நல்ல மாணவர் ஒருவர் தான் படிப்பது என்பது பெற்றோர்களுக்காகவோ, கௌரவத்திற்காகவோ அல்ல, தமக்காகத்தான் என்பதைப் புரிந்து கொண்டிருப்பார். நேர்மையாகப் படித்து முன்னேறுவதில் ஆர்வம் காட்டுவார்.

படிப்பது என்பது காலத்தைக் கழிப்பதற்கு அல்ல, அது காலத்தை ஆக்கப்பூர்வமாக அமைத்துக் கொள்வதற்கு என்பதை உணர்ந்திருப்பார்.

படித்தால் பணம் சம்பாதிக்கலாம் என்றில்லாமல் நன்றாகப் படித்தால் பணம் தானாக வந்து சேரும் என்பதையும் கருத்தில் கொண்டிருப்பார்.

மேலும் நல்ல மாணவருக்கான பண்புகள் பல உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

பாடம் கேட்கும் போது குறிப்பெடுத்துக் கொள்வது. குறிப்பெடுத்துக் கொள்வதில் நான்கு நுட்பங்கள் உள்ளன. இவற்றை 4R என்கின்றனர். அதாவது,

Recording – சொன்னபடி எழுதிக் கொள்வது

Reducing – வீட்டிற்கு வந்ததும் செப்பனிட்டுக் கொள்வது

Reciting – குறிப்புகளை மனதில் ஏற்றிக் கொள்வது

Reviewing – தேர்வுக்கு முன்பாக ஒரு முறை பார்த்துக் கொள்வது.

பாடத்தின் முக்கிய கருத்துகளை அடிக்கோடிட்டுக் கொள்வது.

பாடத்தைப் படிக்க SQRW என்ற நுட்பத்தைப் பயன்படுத்தலாம். அதாவது,

Survey – பாடம் முழுவதையும் தலைப்பு, உட்தலைப்பு, படங்கள், வரையறைகள், விளக்கங்கள் என்கிற வகைபாட்டில் ஒரு கழுகுப் பார்வை பார்த்துக் கொள்வது.

Questions – பாடங்களைப் பார்க்கும் போதும் படிக்கும் போதும் கேட்கும் போதும் ஏற்படும் சந்தேகங்களைக் கேள்விகளாக எழுதிக் கொள்வது.

Read and Reread – பாடத்தைப் படிப்பது, விவாதித்துக் கொண்டு மீண்டும் படிப்பது.

Write – படித்தப் பாடத்தை உங்களுக்குப் புரிந்து வகையில் எழுதிக் கொள்வது. இது போன்ற நுட்பங்களை அறிந்து கொண்டு அவற்றைப் படிப்பில் பயன்படுத்துவது ஒரு நல்ல மாணவரின் பண்பாகும்.

ஒரு பாடத்தைக் குறைந்தபட்சம் அரை மணி நேரம் படிப்பது.

பாடத்தை சில முறை திரும்ப திரும்ப படிக்க தயாராக இருப்பது. தேவையேற்படின் பல முறை படித்துப் புரிந்து கொள்ளவும் தயாராக இருப்பது.

தொடர்ந்து படிக்காமல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவெளி எடுத்துக் கொண்டு படிப்பது.

அன்றன்று படிக்க வேண்டியதைத் திட்டமிட்டுக் கொண்டு படிப்பது.

ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனமாகக் கருத்தூன்றிக் கேட்பது. அது எப்படியென்றால் ஒரு மருத்துவர் நோயாளியைப் பரிசோதிக்கும் போது ஸ்டெத்தாஸ்கோப் ஓசையினைக் கூர்ந்து கவனித்துக் கேட்பதைப் போல இருக்க வேண்டும்.

சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வது.

முக்கியமான பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பது.

நல்ல ஆலோசனைகளைத் தேடிப் பெற்றுக் கொள்வது அவற்றை செயல்முறைப்படுத்துவது.

உணவு, தூக்கம் போன்றவற்றில் அக்கறையோடு இருப்பது. புரதச்சத்து மிகுந்த உணவு வகைகளோடு காய்கறிகள் மற்றும் பழங்களையும் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான உணவை எடுத்துக் கொள்வதன் மூலமாக நினைவாற்றல் நன்றாக இருப்பதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?

கடினமான பாடங்களைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு படிப்பது.

தேர்வுக்கு முன்பாகவே தயாராக இருப்பது.

நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரோடு பழகவும் பேசவும் நேரம் ஒதுக்கிக் கொள்வது.

ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளை அமைத்துக் கொள்வது.

சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது அல்லது விளையாடுவது.

நாள்தோறும் செய்தித்தாள் படிப்பது, வாரம் ஒரு நூலகப் புத்தகத்தைப் படிப்பது.

பழைய வினாத்தாள்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றில் உள்ள வினாக்களுக்கு மாதிரித் தேர்வு எழுதிப் பார்ப்பது.

படிக்கும் நேரத்தில் தொலைக்காட்சியை நிறுத்தி விடுவது.

தேர்வு முடியும் வரை அலைபேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது.

தேர்வில் கேட்கப்படுகின்ற கேள்விகள் அனைத்தும் படித்த புத்தகத்திலிருந்துதான் வரப் போகின்றன என்ற உண்மையை உணர்ந்து தேர்வுகளைப் பதற்றமில்லாமல் பக்குவமாக எதிர்கொள்வது.

இப்பண்புகளைப் படிப்படியாக ஒரு மாணவர் வளர்த்துக் கொள்ளும் போது அவர் நல்ல மாணவராகி விடுகிறார்.

*****

No comments:

Post a Comment