Monday 18 March 2024

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு NMMS – சில பார்வைகள்!

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு NMMS – சில பார்வைகள்!

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு எனும் NMMS (National Means Cum Merit Sholarship Exam) தேர்வை எழுதலாம்.

இத்தேர்வை எழுதி தகுதி பெறும் மாணவர்களுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக ஒன்பதாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை வழங்கப்படும்.

தமிழகத்திற்கு 6695 தகுதியான மாணவர்களுக்கு இத்தொகையை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் இதற்காகத் தேர்வான தகுதியான மாணவர்கள் 5890 மட்டுமே. 805 மாணவர்களுக்கு உதவித்தொகைக் கிடைக்க வாய்ப்பு இருந்தும் அதற்கு மாணவர்கள் தகுதி பெறவில்லை.

இதனால் 805 மாணவர்கள் மாதந்தோறும் நான்காண்டுகள் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய், அதாவது வருடத்திற்கு பனிரெண்டாயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையைப் பெறும் வாய்ப்பை இழக்க நேரிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஏழ்மையான மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை அவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

இப்போது 6695 தகுதியான மாணவர்களுக்கான இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டும் 805 இடங்களைத் தமிழகம் எப்படி தவற விட்டது என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.

மேற்படி தகுதித்தேர்வு என்பது படித்ததை ஒப்புவித்தோ, மனப்பாடம் மூலம் எழுதியோ சாதிக்கக் கூடிய தேர்வன்று. திறனை அறியும் போட்டித் தேர்வு. பாடங்களைப் படிப்பதோடு படித்ததைச் சிந்தித்து விடைகளை வெளிப்படுத்த வேண்டிய தேர்வு. இன்னும் சொல்ல வேண்டுமானால் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வை ஒத்தது.

இத்தேர்வின் மற்றொரு சிறப்பு பற்றியும் சொல்ல வேண்டும். இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜே.இ.இ. போன்றவற்றிலும் தேர்வு பெறுகிறார்கள். பிற்காலத்தில் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எழுதி அரசுப் பணிகளிலும் தேர்வு பெறுகிறார்கள்.

பள்ளிக் காலத்திலேயே மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் அச்சாரம் அமைக்கும் வகையில் இத்தேர்வு அமைந்துள்ளது.

இத்தேர்வில் தகுதி பெறுவதில் மாணவர்கள் எங்கே பின்னடைவைச் சந்திக்கிறார்கள்? இத்தேர்வானது மனத்திறன் தேர்வு எனும் MAT, படிப்பறிவுத் திறன் தேர்வு எனும் SAT என இரண்டு பிரிவாக நடத்தப்படுகிறது. இரண்டு பிரிவிலும் 90 வினாக்கள் வீதம் 180 வினாக்களுக்கு 180 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும். இரண்டு தேர்வுகளிலும் நாற்பது சதவீதம் அதாவது 36 மதிப்பெண் பெற்று மாணவர்கள் தகுதி பெற வேண்டும்.

மனத்திறன் தேர்வு எனும் MAT தேர்வில் தேர்வாகி விடும் மாணவர்கள், படிப்பறிவுத் திறன் எனும் SAT தேர்வில் தகுதி மதிப்பெண் பெறுவதில் பின்தங்கி விடுகிறார்கள் என்பதை கடந்த ஆண்டு மதிப்பெண் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வினாவை எழுப்பிக் கொண்டால் இப்பிரச்சனையைச் சரி செய்து விடலாம். ஏழாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவம் வரை உள்ள கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைக் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். அவ்வாறு ஒருங்கிணைந்து படிப்பதன் மூலம் அவர்களால் படிப்பறிவுத் திறன் எனும் SAT தேர்விலும் தகுதி பெற இயலும். தகுதி பெற்று இத்திறனறித் தேர்வு மூலம் மாதாந்திர கல்வி உதவித் தொகையான ஆயிரம் ரூபாயினை நான்காண்டுகளுக்குப் பெற முடியும்.

இத்திறனறித் தேர்வை எழுதுவதற்கு முன்பாகக் குறைந்தபட்சம் பத்து மாதிரி தேர்வுகளையாவது மாணவர்கள் எழுதி அனுபவப்பட்டிருக்க வேண்டும். அந்த அனுபவமானது பதற்றம் மற்றும் பரபரப்பு இல்லாமல் சரியான விடைகளைத் தேர்வு அவர்களுக்கு உதவும்.

முயன்றால் முடியாததுதான் உண்டோ? பயிற்சியால் ஆகாத காரியங்கள்தான் உண்டோ? முயற்சியையும் பயிற்சியையும் ஒன்றிணைத்து திட்டமிட்டு படித்தால் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கரங்களில் இத்திறனறித் தேர்வின் வெற்றி தானாக வந்து சேர்ந்து விடும்.

*****

No comments:

Post a Comment