Monday, 18 March 2024

சரியான படிப்பு முறையை அமைத்துக் கொள்வது எப்படி?

சரியான படிப்பு முறையை அமைத்துக் கொள்வது எப்படி?

நல்ல மாணவர் ஒருவர் தனக்கான படிப்பு முறையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்?

இதற்கான விடையைக் கீழ்காணும் படிநிலைகள் மூலமாகச் செய்து கொள்ளலாம். அவையாவன,

1. படிப்பதற்கு உகந்த நேரத்தைக் கண்டறிந்து அந்த நேரத்தில் படித்தல் :

அதிகாலை நேரத்தை மனப்பாடம் செய்ய வேண்டிய பாடப்பகுதிகளைப் படிப்பதற்காக அமைத்துக் கொள்ளலாம். மாலை நேரங்களில் கணக்குகளைச் செய்து பார்க்குமாறு அமைத்துக் கொள்ளலாம். இரவு உணவுக்குப் பின் படிப்பதாக இருந்தால் துணைப்பாடம், கதை வடிவிலான பாடங்களைப் படிப்பதற்குத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

2. படிப்பதற்கேற்ற சூழ்நிலையை அமைத்துக் கொள்ளுதல் :

படிக்கும் சூழ்நிலை அமைதி நிறைந்ததாகவும், தொலைக்காட்சி மற்றும் அலைபேசி போன்ற கருவிகளால் இடையீடுகள் மற்றும் குறுக்கீடுகள் இல்லாத வகையிலும் அமைத்துக் கொள்வது நல்லது.

3. படிப்பதற்கேற்ற திட்டமிடலைச் செய்து கொள்ளுதல் :

பாடப்பகுதிகளைப் பிரித்துக் கொண்டு மாதந்தோறும் எவ்வளவு படித்து முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அம்மாத பாடப்பகுதிகளை வாரந்தோறும் எவ்வளவு படித்து முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். வாரந்தோறும் படிக்க வேண்டிய பாடப்பகுதிகளை நாள்தோறும் எவ்வளவு படித்து முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இப்படி திட்டமிட்டுக் கொள்வதன் மூலமாகப் பாடங்களைத் தேர்வு நெருங்குவதற்குள் பதற்றமோ, பரபரப்போ இன்றி படித்து முடித்து விடலாம்.

4. படிப்பதற்கேற்ற நுட்பங்கள் மற்றும் வியூகங்கள் அமைத்துக் கொள்ளுதல் :

கடினமான பாடப்பகுதிகளை மனதில் பதிய வைத்துக் கொள்வற்கான நுட்பங்கள் நிறைய உள்ளன. உதாரணமாகக் கிட்டப்பார்வைக்கு எந்த லென்ஸ், தூரப்பார்வைக்கு எந்த லென்ஸ் என்ற குழப்பம் நேரிடும் போது ‘கிட்ட குழி எடுத்துத் தூரக் குவி’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக்கு குழி லென்ஸ் என்றும் தூரப்பார்வைக்குக் குவி லென்ஸ் என்றும் குழப்பமில்லாமல் சரியான பதிலை அளிக்கலாம். இது போன்ற நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். கணிதங்களில் சூத்திரங்கள், வேதியியலில் தனிம வரிசை அட்டவணை, தாவரவியல் மற்றும் விலங்கியலில் வகைபாட்டு அட்டவணை போன்றவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளும் போது பல பக்கமுள்ள செய்திகளை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்பது அவற்றைப் படிப்பதில் உள்ள வியூகம். இது போன்ற நுட்பங்கள் மற்றும் வியூகங்களை அறிந்து கொண்டு படிப்பது சிறந்த முறையில் எளிமையாகப் படிப்பதற்கு உதவும்.

5. மனதில் இருத்திக் கொள்வதற்கேற்ற குறிப்புகள் தயாரித்தல் :

அன்றன்று நடக்கும் பாடங்களைப் பற்றி உடனடியாகக் குறிப்பெழுதி வைத்துக் கொள்வது நல்லது. அத்துடன் பாடப்பகுதிகளைப் படிக்கும் போது அவற்றைத் தமக்குப் புரியும் வகையில் குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வதும் நல்லது. குறிப்புகள் தயாரித்துப் படிக்கும் போது தேர்விற்கு முன்பாக முழுப் பாடத்தையும் படித்த திருப்தி உண்டாகும். மிக அதிகப் பக்க அளவு உள்ள பாடங்களைப் படிக்கும் போது குறிப்புகள் பெரிதும் உதவக் கூடியன.

6. சுய மதிப்பீட்டுத் தேர்வுகளை எழுதிப் பார்த்தல் :

தேர்வை எழுதுவதற்கு முன்பாக கடந்து ஆண்டு வினாத்தாள்கள் அல்லது மாதிரி வினாத்தாள்களைப் பயன்படுத்திச் சுயமாக ஒரு தேர்வை எழுதிப் பார்த்து விட்டு தேர்வை எழுதுவது நல்லது. இதனால் அத்தேர்வைக் குறித்த நேரத்தில் எழுதி முடித்து விட முடியுமா? எழுதும் போது என்ன மாதிரியான இடர்பாடுகள் நேரிடும்? என்பன போன்ற வினாக்களுக்கு விடை கண்டறிந்து பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ள முடியும்.

7. மனஅழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுதல் :

எந்நேரமும் படிப்பு என்றில்லாமல் படிப்பதற்கு இடையே அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை உங்கள் மனதுக்குப் பிடித்த பாடல் கேட்டல், நடனம் ஆடுதல், விருப்பமான விளையாட்டை விளையாடுதல், இயற்கையை ரசித்தல், நடைபயிற்சி செய்தல், நண்பர்களோடு அரட்டை அடித்தல் போன்றவற்றில் உங்களுக்குப் பிடித்தமான ஒன்றைச் செய்வதன் மூலமாக மனதை இறுக்கமடையாமல் தளர்வாக வைத்துக் கொள்ள முடியும். வாரத்திற்கு ஒரு முறை திரைப்படம் பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்குமானால் வாரம் ஒரு முறை திரைப்படம் பார்த்து உங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளலாம்.

8. தேர்வில் வெற்றி பெறுவதற்கேற்ப எழுதும் முறைகளை அமைத்துக் கொள்ளுதல் :

படிப்பதைப் போன்றே படித்ததைத் தேர்வில் வெளிப்படுத்துவதும் ஒரு திட்டமிட்ட செயல்பாடே. வினாவிற்குரிய விடைகளை எப்படி எழுதுவது என்பதை நன்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பத்தி பத்தியாக எழுத வேண்டிய வினாக்களுக்கு பத்தி பத்தியாகவும், எண்களிட்டுக் குறிப்புகளாக எழுத வேண்டிய வினாக்களுக்கு குறிப்புகளாகவும் விடை எழுத வேண்டும். தேவையான இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டுதல், படங்கள் வரைந்து விளக்குதல் போன்றவற்றையும் செய்ய வேண்டியிருக்கும். இது போன்ற எழுதும் முறைகளைக் கையாள வேண்டும்.

இந்த எட்டுப் படிநிலைகளைச் சரியாக அமைத்துக் கொள்வதன் மூலமாக ஒரு மாணவர் தனக்கான சரியான படிப்பு முறையை வகுத்துக் கொள்ளலாம். சரியான படிப்பு முறையைப் பழக்கப்படுத்திக் கொண்டு, அதை தன்னுடைய வழக்கமாக்கிக் கொண்டால் எத்தகையப் படிப்பினையும் படித்து எத்தகையை தேர்வினையும் எழுதி மாணவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல வெற்றி காண முடியும்.

*****

1 comment:

  1. தெளிவான வழிமுறைகள். நன்று

    ReplyDelete