Thursday, 14 March 2024

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு - NMMS 2023 – 2024 திருவாரூர் மாவட்டமும் பிற மாவட்டங்களும்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு - NMMS 2023 – 2024

திருவாரூர் மாவட்டமும் பிற மாவட்டங்களும்

2023 – 2024 ஆம் கல்வியாண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு எனப்படும் NMMS தேர்வினைத் தமிழகமெங்கும் எட்டாம் வகுப்பு பயிலும் 2,25,490 மாணவர்கள் எழுதியுள்ளனர். இத்தேர்வில் உதவித்தொகை பெறுவதற்குத் தகுதியானவர்கள் 5890 மாணவர்கள் மட்டுமே. ஆனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள உதவித்தொகை பெறுவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை 6695 ஆகும். இன்னும் 805 மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் அதற்கான தகுதி மதிப்பெண்களைப் பெறாத காரணத்தால் தமிழகம் 805 மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.

உதவித்தொகை பெறுவதற்குத் தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களில் தேர்வான மாணவர்களின் வரிசையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தர்மபுரி இரண்டாம் இடத்திலும், தூத்துக்குடி மூன்றாம் இடத்திலும் உள்ளது.

திருவாரூர் மாவட்டம் முப்பதாவது இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை 73 ஆகும். இந்த எண்ணிக்கை என்பது மாவட்டத்தைப் பொருத்த அளவில் தமிழகமெங்கும் தேர்வானவர்களோடு ஒப்பு நோக்கும் போது ஒன்றரை சதவீதத்திற்கும் குறைவாகும்.

திருவாரூர் மாவட்டத்தில் 405 நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பதின்மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட எட்டாம் வகுப்பு மாணவர்கள் பயில்கிறார்கள். அந்த எண்ணிக்கையோடு ஒப்பு நோக்கும் போது தேர்வானவர்களின் எண்ணிக்கை தோராயமாக அரை சதவீத அளவாகும்.

தேர்வான மாணவர்களின் தரவுகளை ஒப்பு நோக்கும் போது மனத்திறன் தேர்வு எனப்படும் MAT இல் தேர்வு பெற்றவர்களை விட படிப்பறிவுத் திறன் தேர்வு எனப்படும் SAT தேர்வில் தேர்வு பெறாமல் வாய்ப்பை இழந்தவர்கள் அதிகம்.

இதற்கு ஒரு நல்ல தீர்வாக ஏழாம் வகுப்பின் முப்பருவ மற்றும் எட்டாம் வகுப்பின் முதல் இரு பருவ கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை நன்கு பயில்வதும், அவற்றில் போதுமான அளவுக்குப் பயிற்சி பெறுவதும் உதவும்.

மற்றொரு தீர்வாகத் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்விற்கு முன்பாகப் பத்து மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்ப்பதும் பயனுள்ளதாக அமையும்.  

இவ்விரு தீர்வுகளும் திருவாரூர் மாவட்ட மாணவர்களை மட்டுமல்லாது தமிழகமெங்கும் பயிலும் பல்வேறு மாவட்ட மாணவர்களை அதிக அளவில் இத்தேர்வில் தேர்வு பெறச் செய்து கல்வி உதவித் தொகையினைப் பெற உதவும்.

வரும் கல்வியாண்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தையும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தகுதி பெற்று பயன்படுத்திக் கொள்ள துணை நிற்போமாக!

*****

No comments:

Post a Comment