Monday 13 July 2020

இப்போதே செய்!

கதை சொல்லும் சேதி :

இப்போதே செய்!
            ஒரு பொருளைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போதே அதைக் கொடுத்து விட வேண்டும். பிறகு கொடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தத் தள்ளிப் போட்டால், அந்தப் பொருளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மாறி கொடுக்காமல் போய் விடலாம்.
            வள்ளுவர் இதனை 'அன்றறிவாம் எண்ணாது அறம் செய்க' என்கிறார்.
            இதை விளக்கும் படியான ஒரு கதை.
            கொடை வள்ளல் கர்ணனைப் பற்றி ஏராளமான கதைகள் இருக்கின்றன. கொடுப்பதில் கர்ணனை மிஞ்சுவார் யாருமில்லை. இந்தக் கதையும் அதையே வலியுறுத்திச் சொல்கிறது.
            ஒரு நாள் கர்ணன் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டிருக்கிறார். வெள்ளிக் கிண்ணத்தில் எண்ணெய் இருக்கிறது.
            வறுமையில் வாடும் ஏழை ஒருவர் கர்ணனைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்த நேரத்தில் வந்து சேர்கிறார்.
            தன்னுடைய கஷ்டத்தைப் போக்கிக் கொள்ள ஏதாவது கொடு என்று அந்த ஏழை கர்ணனைக் கேட்பதற்குள் கர்ணன் எண்ணெய் வைத்திருந்த வெள்ளிக் கிண்ணத்தை இடது கையால் எடுத்துக் கொடுத்து விடுகிறார்.
            அந்த ஏழை அந்த வெள்ளிக் கிண்ணத்தை வாங்கிக் கொண்டு சந்தோஷமாகப் புறப்பட்டுச் சென்று விடுகிறார்.
            இப்போது கர்ணனிடம் இடது கையால் தானம் கொடுப்பது சாஸ்திரம் இல்லையே என்கிறார்கள் சுற்றி இருந்தவர்கள்.
            அவர்களுக்குக் கர்ணன் பதில் சொல்கிறார், "இந்த வெள்ளிக் கிண்ணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு வந்த போது கிண்ணம் இடது கையின் அருகில் இருந்தது. அதை வலது கையால் கொடுக்கலாம் என்று கையை மாற்றிக் கொடுப்பதற்குள் மனசு மாறி விடலாம். மனசு மாறுவதற்குள் நல்ல காரியங்களைச் செய்து விட வேண்டும். இல்லையென்றால் செய்ய முடியாமல் போய் விடும்!" என்று.
            ஆனானப்பட்ட கொடை வள்ளல் கர்ணனின் நிலையே இப்படியென்றால் நம்முடைய நிலை எப்படி என்று நாம்தான் யோசித்துக் கொள்ள வேண்டும்.
            ஆகவேத்தான் இப்பிடிச் சொல்லப்படுகிறது, 'கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழும் போது ஒரு பொருளைக் கொடுத்து விட வேண்டும். கொஞ்சம் யோசித்தாலும், தாமதித்தாலும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மாறிப் போய் விடுகிறது!'
*****


No comments:

Post a Comment