Wednesday 1 July 2020

சேரிடம் அறிந்து சேர்!

கதை சொல்லும் சேதி :

சேரிடம் அறிந்து சேர்!
            நல்லவர்களின் சேர்க்கையால் நன்மையும், தீயவர்களின் சேர்க்கையால் தீமையும் உண்டாவதாகக் கூறப்படுகிறது.
            ஒரு மனிதன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் சேர்க்கையாலும் நிகழ்கிறது. இதற்கு கெளரவர்களுடன் சேர்ந்த கர்ணின் சேர்க்கை ஓர் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. இதை விளக்கும்படியான ஒரு கதை.
            ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
            "ஒரு மனிதர் நல்லவராக நல்லவர்களோடு சேர வேண்டும். தீயவர்களோடு சேரும் போது நல்லவரும் தீயவராகி விடுகிறார்!" என்றார் ஆசிரியர்.
            அதைக் கேட்ட மாணவர் ஒருவர், "தீயவர் கூட்டத்தில் ஒரு நல்லவர் சேர்ந்து அத்தனை தீயவர்களையும் திருத்தி விட முடியாதா?" என்று கேட்டார்.
            அதைக் கேட்ட ஆசிரியர் சிரித்தார். அந்தக் கேள்விக்கான பதிலை செயல்விளக்கம் செய்து காட்ட நினைத்தார்.
            ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் பாலை நிரப்பி அதில் சிறு குவளை அளவு நீரைக் கலந்து, இப்போ பால் மாறியிருக்கிறதா? என மாணவர்களைப் பார்க்கச் சொன்னார் அந்த ஆசிரியர். மாணவர்களும் பார்த்து விட்டு இல்லை என்றனர்.
            அடுத்ததாக ஆசிரியர், அதே போல இன்னொரு பெரிய பாத்திரம் முழுவதும் நீரை நிரப்பி அதில் சிறு குவளை அளவு பாலைக் கலந்து, இப்போது பால் தண்ணீரை மாற்றியிருக்கிறதா? என மாணவர்களைப் பார்க்கச் சொன்னார். மாணவர்களும் பார்த்து விட்டு இல்லை என்றனர்.
            ஆசிரியர் இப்போது விளக்கினார், "ஒரு பாத்திரம் முழுவதும் இருந்த பாலில் சிறிது நீரை கலந்து போது பால் மாறவில்லை. ஆனால் ஒரு பாத்திரம் முழுவதும் இருந்த நீரில் சிறிது பாலைக் கலந்த போது பால் மாறி விட்டது. அதுதான் சேர்க்கையின் பலன். ஆகவே சேரிடம் அறிந்து சேர்வது முக்கியம்!"
            ஆகவேத்தான் இப்பிடிச் சொல்லப்படுகிறது,
            சேர்க்கை மனிதர்களைப் பாதிக்கிறது. நல்லவர்களோடு சேரும் மனிதர்கள் நல்லவர்களாகவும், தீயவர்களோடு சேரும் மனிதர்கள் தீயவர்களாகவும் மாறி விடுகின்றனர். சேரிடம் அறிந்து சேர்வது முக்கியம் எனப்படுகிறது.
*****

No comments:

Post a Comment