மனதோடு வீசும் மென்காற்று :
மரணத்தை மாற்றும் நம்பிக்கை!
மரணம்
வாழ்வின் நம்பிக்கையை மாற்றிப்
போடக் கூடியது
பிறக்கும் போதே இறப்பும்
நிச்சயக்கப்பட்டு விடுகிறது என்றாலும்
பிரியமானவர்களின் மரணங்கள்
நிலைகுழையச் செய்யக் கூடியவை.
நிலைகுழைவிலிருந்து மீள்வது
சுலபமானதல்ல என்றாலும்
மரணத்தை மாற்றும் நம்பிக்கையோடு
வாழ்வெனும் பாதையில் ஒவ்வொரு
மனிதரும்
பயணித்துதான் ஆக வேண்டியிருக்கிறது.
மரணத்திற்கு மாற்று கிடையாது
மரணத்திற்கு ஆறுதல் சொல்லி
விட முடியாது
மரணத்தை எதிர்கொள்வதற்கு
முன்
நம்மால் இயன்றதெல்லாம்
நம்பிக்கையையும், கனிவான
புன்னகையையும்,
உற்சாகமூட்டும் வார்த்தைகளை
வழங்க முடிவது மட்டுமே!
நம்பிக்கை, கனிவான புன்னகை,
உற்சாகமான வார்த்தைகள் என்பவை
வாழ்வின் அஸ்திவாரங்கள்
மரணத்தை வெல்லக்கூடிய மகத்துவம்
பெற்றவை.
மரணம் துயர் கொள்ள செய்யக்
கூடியது
சோகத்தின் பிடியில் வீழ்த்தக்
கூடியது
அழுகையின் அடியில் ஆழ்த்தக்
கூடியது
பேரறிஞர்கள் இந்த மரணம் குறித்து
என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
'மரணத்திற்காக ஓரளவிற்கு
மேல்
துயரம் கொள்ள வேண்டியதில்லை.
மரணத்தால் யாரையும் புதைக்கவில்லை
விதைக்கவே செய்கிறோம்!'
என்கிறார்கள்.
மரணம் மனிதர்களைப் பிரிக்கிறது
என்பதுதான்
மாற்றமில்லாத உண்மை.
இந்தப் பிரிவைத் தத்துவாதிகள்
எப்படிக் காண்கிறார்கள் தெரியுமா?
'மரணத்தால் யாரும் நம்மை
விட்டுப் பிரியவில்லை.
அவர்கள் நமக்கு முன்பு சென்றிருக்கிறார்கள்.
நாம் அவர்களுக்குப் பின்
செல்ல வேண்டியவர்கள்
அவ்வளவுதான்!'
என்கிறார்கள் தத்துவாதிகள்.
அன்பை, பாசத்தை, பிரியத்தைப்
பொழிந்தவர்களின் மரணம்
மனதில் இருளைக் கவியச் செய்து
விடுகிறது.
அந்த மாபெரும் இருளைக் கடப்பது
சாமான்யமானதல்ல.
சிந்தனாவாதிகள் இது குறித்து
என்ன சொல்ல விழைகிறார்கள்
தெரியுமா?
'ஒரு விளக்கை அணைத்தால் வெளிச்சம்
மறைந்து விடுவதில்லை.
இன்னொரு விளக்கை நாம் ஏற்றாமல்
போவதில்லை.
ஓர் இறப்பு ஒரு பிறப்பைத்
தராமல் இருப்பதில்லை!" என்கிறார்கள்.
பூமியில் பிறந்த எல்லோரும்
மரணிக்க வேண்டியவர்கள்தான்.
முன், பின், இடையில் என்று
நிகழும் இந்த மரணங்கள்
ஒரு புரியாத புதிரை மனதிற்குள்
விதைத்து விடுகிறது.
அவிழ்க்க முடியாத சிக்கல்தான்
அது.
அதற்கான முடிச்சை அவிழ்க்கிறது
நிலையாமை குறித்த இந்தச்
சிந்தனை
'எல்லோராலும் ஒரே சமயத்தில்
சென்று விட முடியாது
ஒவ்வொருவராகச் சென்றுதான்
ஆக வேண்டும்
எல்லோரும் மரணத்தைப் பின்தொடர்ந்துதான்
ஆக வேண்டும்!'
என்கிறது அந்தச் சிந்தனை.
மரணம் தவிர்க்க முடியாதது
என்றாலும்
மரணத்தை மாற்றும் நம்பிக்கைகளான
அன்பும், கருணையும், பரிவும்
மரணமில்லாதது.
அன்பு, கருணை, பரிவு கொண்டோர்
மரணமில்லாத பெருவாழ்வு எய்தியவர்களாக
என்றென்றும் மானுடச் சமூகத்தின்
மனதில்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மரணம் மனிதர்களை அழிக்கலாம்
அன்பையும், கருணையையும்,
பரிவையும்
எப்படி அழிக்க முடியும்?
*****
No comments:
Post a Comment