Sunday, 19 July 2020

துணிவே துணை!

மனதோடு வீசும் மென்காற்று :

துணிவே துணை!
மனதுக்கு ஒரு துணை எப்போதும் தேவைப்படுகிறது.
அந்தத் துணை கடவுளாக இருக்கலாம்
கட்டிய மனைவியாக இருக்கலாம்
பெற்ற பிள்ளைகளாக இருக்கலாம்
உங்களுடன் உடன்பிறந்தோராக இருக்கலாம்
உறவாடும் நட்பாக இருக்கலாம்
யார் உங்களது துணையாக இருந்தாலும்
உங்கள் மனதில் துணிவு என்பது இல்லாவிட்டால்
எந்தத் துணையும் பயன்படாமல் போய் விடும்.

நிறைய சாதிக்க நினைத்தால்
நீங்கள் துணிச்சல் மிக்கவராக இருக்க வேண்டும்.
சாதானையாளர்களுக்கும் சாதாரண மனிதர்களுக்கும்
இடையே இருக்கும் வேறுபாடு
இந்தத் துணிச்சல்தான்.
நிலவில் நீல ஆம்ஸ்ட்ராங்க் முதலில் கால் பதித்ததற்கும்
எட்வின் ஆல்ட்ரின் இரண்டாவது கால் பதித்ததற்கும் காரணம்
இந்தத் துணிச்சல்தான்.
துணிச்சலால் நிறைய சாதிக்கலாம்.
வாழ்க்கையில் எதையும் சமாளிக்க உதவ
மனதைத் தயார் செய்து துணிச்சல்தான்.

தோல்வியைக் கண்டு துவண்டு விடுவதோ
கவலைகளில் மனம் சோர்ந்து விடுவதோ
துரதிர்ஷ்டங்களை நினைத்து விலகி விடுவதோ தேவையில்லை.
அவை எல்லாருக்குமே உண்டு.
அவை வாழ்வின் பாகங்கள்.
துணிச்சலால் எல்லாவற்றையும் எதிர் கொள்ளலாம், வெற்றி கொள்ளலாம்.
துணிச்சல் என்ற ஆயுதம் எதையும் எதிர்கொள்ளும்,
எதிலும் வெற்றியைத் தேடி தரும்.

துணிச்சலோடு நிற்பவர் முன்
துயரங்கள் எதிர் நிற்பதில்லை.
கோழைத்தனமே துயரங்களை வளர்க்கிறது.
ஓடும் நீரில் பாசி படியாது என்பது போல
துணிச்சல் நிறைந்த மனதில் துயரம் படியாது.
துயரத்தை மறந்து விடுங்கள்.
துணிச்சலோடு அணுகுபவர் முன்
துயரங்கள் தண்ணீரைப் போல ஓடி விடுகின்றன.

துணிந்து செல்பவர்கள் புது உலகைக் காண்கிறார்கள்
புதிய நம்பிக்கையை உணர்கிறார்கள்
புது கனவை, புது இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்கள்
வாழ்க்கை முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதீர்கள்.
உங்களது துணிச்சல்
புதிய நம்பிக்கையை, புதிய உலகை, புதிய கனவை உருவாக்கும்.

சுற்றும் பூமி சுற்றும் வரை
பற்றும் நெருப்பு பற்றும் வரை
வீசும் காற்று வீசும் வரை
விடியாத இரவு என்று எதுவுமில்லை
முடியாத காரியம் என்று எதுவுமில்லை
துணிவே துணை!
எப்போதும் துணிவையே நினை!
துணிவே வாழ்க்கை!
துணிவை இழப்பதே மரணம்!
*****


No comments:

Post a Comment