Monday, 20 July 2020

விதியை மாற்றும் எஜமான்

மனதோடு வீசும் மென்காற்று :

விதியை மாற்றும் எஜமான்
மாறாத மனோதிடமும்
விடாத நம்பிக்கையும்
விதியை மாற்றும் எஜமான்கள்!
மாறாத மனோதிடம் விதியை மாற்றுகிறது.
விடாத நம்பிக்கை வெற்றியெனும் ஏணியில் ஏற்றுகிறது.

சூழ்நிலை முன்னேற விடாமல் தடுப்பதாக
தலைவிதி அடுத்த அடியை
எடுத்து வைக்க விடாமல் பின்னுக்குத் தள்ளுவதாக
நாம் நினைக்கலாம்.
அந்த நினைப்புக்குள் கட்டுண்டும் கிடக்கலாம்.
ஆனால்,
சூழலின் வலிய பிடியில் அகப்பட்டு விட்டதாக
தலைவிதியால் தாக்குண்டு விட்டதாகக் கலங்காதீர்கள்.
எதற்காகவும் தளராத மனதோடு இருங்கள்.
எதையும் தாங்கும் மனம் எதையும் மாற்றும்.
உங்களைப் புகழ் ஏணியில் ஏற்றும்.

நம் வாழ்க்கை
நம் தலையெழுத்து
ஏதோ ஒன்றிடம் கட்டுண்டு கிடப்பதாக
கருதுவது உண்மையில்லை.
உண்மை என்னவென்றால்...
உங்கள் தலையெழுத்தின் அரசன் நீங்கள்தான்.
உங்கள் வாழ்க்கையின் எஜமான் நீங்கள்தான்.
பலமான நம்பிக்கை அத்தனை பலவீனத்தையும்
வெற்றி கொள்ளும்.

பேரிடரான நிலைமைகளில்
நெருக்கடியான சூழ்நிலைகளில்
நாம் சிரமப்படுவதாக, துயரப்படுவதாக
எண்ணுவதில் தவறேதும் இல்லை.
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில்
நாம் அவற்றையெல்லாம்
எதிர்கொள்ளும் ஆற்றலையும் பெறுகிறோம் என்பதை
எண்ணிப் பார்ப்பதில் பிழையேதும் இல்லை.
ஆம்,
நெருக்கடியான நிலைமைகளில்
நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பது முக்கியமல்ல.
நாம் எவ்வளவு நம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம்
என்பதுதாம் முக்கியம்.

நாம் சிறப்பாகச் செயல்படுவதும்
அவ்வாறு செயல்பாடாம் போவதும்
நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பொருத்து இருக்கிறது.
நம்பிக்கையைக் கைவிடாதவர்கள்
எவ்வளவு மோசமான சூழ்நிலையிலும்
சிறப்பாகவே செயல்படுவார்கள்.
நம்பிக்கையான மனோதிடம் போர்வாளைப் போன்றது.

வெற்றி என்பதோ
சாதனை என்பதோ
சரித்திரம் என்பதோ
அதி உன்னதம் அல்ல.
வாழ்க்கையின் அதி உன்னதம் என்பது
விதியை வெல்வதில் இருக்கிறது.
விதியை வெல்வது என்பது
நம்பிக்கையைக் கைவிடாமல் இருப்பதில் இருக்கிறது.
எப்போதும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.
நம்பிக்கை மனோதிடத்தைத் தருகிறது.
மனோதிடம் விதியை மாற்றும் வல்லமையைத் தருகிறது.
*****


No comments:

Post a Comment