Wednesday 22 July 2020

நம்பிக்கை இருக்க பயமேன்?

மனதோடு வீசும் மென்காற்று :

நம்பிக்கை இருக்க பயமேன்?
எங்கே அச்சமில்லையோ
அங்கே நம்பிக்கை நிச்சயமிருக்கும்.
எங்கே நம்பிக்கை இருக்கிறதோ
அங்கே அச்சம் சிறிதுமில்லை.
அச்சமற்றவர்களாக மாற மனமே
நம்பிக்கை உடையதாக மாறு!

அச்சம், பயம், குழப்பம்
மனதுக்குச் சோர்வைத் தருகிறது,
மனதுக்குள் தயக்கத்தை உண்டு பண்ணுகிறது.
ஏன் சோர்ந்து போக வேண்டும்?
எதற்காகத் தயங்கி நிற்க வேண்டும்?
நம்பிக்கை எனும் மருந்திருக்க சோர்வு எதற்கு?
அச்சமோ, பயமோ, குழப்பமோ
அனைத்தையும் போக்கும்
நம்பிக்கையெனும் சர்வரோக நிவாரணி
நம்பிக்கையெனும் வாழ்வின் அச்சாணி.

உங்களுக்கு வீரம் வேண்டுமா? விசுவாசம் வேண்டுமா?
வைராக்யம் வேண்டுமா? அழகு வேண்டுமா?
அல்லது இந்நான்கும் ஒரு சேர வேண்டுமா?
நம்பிக்கையால் நான்கையும் ஒரு சேர அடைய முடியும்
ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் என்பது போல.
அந்த ஒரே கல்தான் நம்பிக்கை.
வீரமோ, விசுவாசமோ, வைராக்கியமோ, அழகோ
அனைத்தும் நம்பிக்கையில் இருக்கிறது.

கலக்கம் இருந்தால் பயம் உண்டாவதும்,
பயம் இருந்தால் கலக்கம் உண்டாவதும் இயற்கை.
பயமும் கலக்கமும் உண்டாகும் இடத்தில்
அமைதி உண்டாவதில்லை.
நம்பிக்கை இருக்கும் வரை அமைதியாக இருப்பாய்!
மனதில் கலக்கமும் உண்டாகாது, பயமும் உருவாகாது.
அமைதிக்கு நம்பிக்கையே ஆணிவேர்
வாழ்வுக்கு நம்பிக்கையே அழகு தேர்.

நம்பிக்கை கேடயம் போன்றது, கவசம் போன்றது.
கவசமும் கேடயமும் அதுவே, போர்வாளும் அதுவே.
கவசமும் கேடயமும் போர்வாளும் கையிலிருக்க
மனதில் அச்சமிருக்க வாய்ப்பில்லை
ஆம்! நம்பிக்கையெனும் வலிமையும் கேடயமும்
இருக்கும் வரை எது குறித்தும் பயமில்லை.

நம்பிக்கை என்பது அசைக்க முடியாத மலை
வெட்ட முடியாத வானம்
வற்ற வைக்க முடியாத கடல்
எரிக்க முடியாத சூரியன்
எது நடந்தால் என்ன?
நம்பிக்கை இருக்கும் வரை
எதுவும் உங்களை அசைக்க முடியாது.
நம்பிக்கை சூறாவளிக்கோ, பூகம்பத்துக்கோ
அசைந்து கொடுப்பதில்லை.
பூமியே நம்பிக்கை எனும் அச்சில்தான்
சுழன்று கொண்டிருக்கிறது.
அதில் மனிதன் நம்பிக்கை எனும் சுவாசக் காற்றால்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
நம்பிக்கை இருக்கும் வரை அச்சமில்லை
அச்சம் அச்சம் அச்சம் என்பதில்லை.
நம்பிக்கை இருக்க பயமேன்?
*****


No comments:

Post a Comment