Monday 13 July 2020

மீண்டெழும் சக்தி!

மனதோடு வீசும் மென்காற்று :
மீண்டெழும் சக்தி!

மனித இனத்தின் சிறப்பு எதுவெனக் கேட்டால்
சிரிப்பு என்பீர்கள்!
சிரிப்பு மட்டுமா?!
மீண்டெழும் சக்தியும்தான்
மனித இனத்தின் சிறப்பு.
அதனால்தான் இந்தப் பூமியில்
எத்தனையோ உயிர்கள் தோன்றி மறைந்தாலும்
மறையாமல் நிலைத்திருப்பது
மானிடர்களாக மட்டும் இருக்கிறார்கள்.
மீண்டெழும் சக்தியே
மனித குலத்தை அழியாமல் பாதுகாக்கிறது.

மீண்டெழும் சக்தியின் பின்னுள்ள ரகசியம்
எதுவென்று தெரியுமா?
பொறுமையெனும் அதிசயம்தான்
அந்த ரகசியம்!
வெற்றியிலும் தோல்வியிலும்
தேவையான ஒரு குணம் பொறுமை.
தெளிவான மனோபாவத்துக்கும்
சமனநிலையான மனோநிலைக்கும்
பொறுமை அவசியம்.
பொறுமை மட்டும் இருந்து விட்டால்
ஒரு மனிதன்
தன்னையும் ஆளலாம்,
தரணியையும் ஆளலாம்.

பொறுப்புகளை எப்படித் தட்டிக் கழிப்பீர்கள்?
நெருக்கடிகளை விட்டு எப்பிடி விலகுவீர்கள்?
வாழ்க்கையின் பொறுப்புகளிலிருந்தும், நெருக்கடிகளிலிருந்தும்
உங்களால் தப்பிக்க முடியாது.
பொறுமை இருந்தால்
எதையும் எதிர்கொள்ள முடியும்.
பொறுமையோடு எதிர்கொள்ளும் போது
பொறுப்புகள் உன்னதங்களாகின்றன,
நெருக்கடிகள் தவிடுபொடிகளாகின்றன.

தோல்வியின் பின்னே ஒரு வலியிருக்கிறது.
அழிவின் பின்னே ஒரு வேதனையிருக்கிறது.
வலியும் வேதனையும் இல்லாத வாழ்க்கை யாருக்குமில்லை.
ஆனால்,
பொறுமையினால்
தோல்வியின் வலியை,
அழிவின் வேதனையை எதிர்கொள்ளலாம்.
அத்துடன் வெறுக்கும் இதயங்களையும்
ஒருநாள் வெற்றி கொள்ளலாம்.
பொறுமையினால் கிடைக்கும் வெற்றியே
நிரந்தர வெற்றி.
மற்ற வெற்றிகள் யாவும்
தற்காலிக வெற்றிகளே!

பொறுமையினால் உண்டாகக் கூடிய
இருபெரும் மகத்தான சக்திகள்
அமைதியும் வலிமையும்.
அமைதியாய் வலிமையாய்
தைரியத்தோடு
தோல்வியோ, ஏமாற்றமோ
அதை எதிர்கொண்டு மேலெழ
பொறுமையாய் இருங்கள்.

ஓர் உண்மை தெரியுமா உங்களுக்கு?
தேய்க்காமல் ரத்தினம் பிரகாசம் அடைவதில்லை.
சோதனைகள் இல்லாமல் மனிதர் பரிபூரணம் ஆவதில்லை.
செதுக்கப்படும் வரை கல்லானது
சிற்பியின் செதுக்கல்களுக்குப்
பொறுமையாகத்தான் இருந்தாக வேண்டும்.
சிற்பியின் செதுக்கல்களை வலிகள் என்று நினைத்தால்
கல் சிலையாக முடியாது.
வண்ணத்துப்பூச்சியாக சிறகடிக்கும் வரை
கூட்டுப்புழு கூட்டினுள்
பொறுமையாகத்தான் இருந்தாக வேண்டும்.
கூட்டில் இருப்பதை வேதனை என்று நினைத்தால்
புழு வண்ணத்துப்பூச்சியாக சிறகடிக்க முடியாது.
வலியோ, வேதனையோ
அதைப் பொறுமையால் எதிர்கொள்ளும் மனிதர்கள்
அருமையான, பெருமையான
மனிதர்களாகி விடுகிறார்கள்!
*****


No comments:

Post a Comment