Saturday, 19 July 2025

உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும்!

உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும்!

வாழ்க்கை என்பது மனநிலை மற்றும் பழக்கவழக்கங்களைச் சார்ந்தது. வாழ்க்கையில் நல்ல மனநிலையையும் நல்ல பழக்கவழக்கங்களையும் வளர்த்துக் கொள்வது முக்கியம். அதுவே ஒருவரின் வாழ்க்கையை வடிவமைக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு சில பழக்கவழக்கங்களை இங்கே காண்போம்.

முதலில் பணம் குறித்த சரியான மனநிலை மற்றும் பழக்கவழக்கத்தைப் பார்பபோம்.

பணம் என்பது பந்தா காட்டுவதற்கானது அல்ல. தேவையான வசதிகளை உருவாக்கிக் கொள்வதற்கானது. ஆகவே பணத்தை அத்தியாவசியமான மற்றும் அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள மட்டும் பயன்படுத்துங்கள்.

உங்களிடம் பணம் இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதற்காக எவ்வித வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். பணத்தை வைத்து உங்களை யாரென்று காட்ட நினைத்தால், அது முடிவில் உங்களை அழித்து விட்டுதான் மறுவேலை பார்க்கும். ஏனென்றால் பணத்திற்கு அப்படிப்பட்ட மறைமுக உள்ளார்ந்த தன்மை இருக்கிறது.

பணத்தைப் பொருத்தமட்டில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது ஒரு விசயமே அன்று. நீங்கள் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதாவது, உங்களால் எவ்வளவு பணத்தை மிச்சம் பண்ண முடிகிறது என்பதுதான் முக்கியம். இந்த உலகில் லட்சம் லட்சமாய்ச் சம்பாதிக்கும் கடன்கார்களும் இருக்கிறார்கள், ஆயிரம் ரூபாய் சம்பாதித்து அதை மிச்சப்படுத்திக் கொண்டே வந்து அதை லட்ச ரூபாயாக மாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

எப்போதும் வரவுக்குள் செலவு செய்யுங்கள். சீக்கிரம் உங்களுக்கான முதலீடுகளை ஆரம்பித்து விடுங்கள். அது நகை வாங்குவதாக, பங்குகள் வாங்குவதாக, நிலம் வாங்குவதாக, உங்களுக்கான சொத்துகளை உருவாக்குவதாக, உங்களுக்கான வியாபாரத்தை ஆரம்பிப்பதாக… என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை விரைவில் இளமையிலேயே ஆரம்பித்துவிடுங்கள்.

இளமையிலேயே ஆரம்பித்து விடும் போது உங்களால் நிறைய சேர்க்க முடியும். விரைவில் பணக்காரர் ஆக முடியும். எதையும் சீக்கிரமாக ஆரம்பித்து விடும் போது காலம் உங்களுக்காக வேலை செய்யும். தாமதம் செய்தீர்கள் என்றால் காலத்திற்காக நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

அடுத்தவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதும் வாழ்க்கையின் முக்கியமானது. அது குறித்தும் அறிந்து கொள்வோம். எப்போதும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்றே யோசித்துக் கொண்டே இருக்காதீர்கள். இதற்கு அர்த்தம் அடுத்தவர்கள் உங்களைப் பற்றி நினைக்க மாட்டார்கள் என்பது அர்த்தமில்லை. அவர்கள் உங்களைப் பற்றி எப்போதாவது நினைப்பார்கள், எப்போதும் அல்ல. ஏதோ சில நேரங்களில் உங்களைப் பற்றி ஆக்ரோஷமாக நினைப்பர்கள். பல நேரங்களில் உங்களைப் பற்றிய நினைப்பே அவர்களுக்கு இருக்காது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அவர்களைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லாத காலம் இது. ஆகவே அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நினைத்துக் கொண்டே இராமல், உங்கள் தலைமுறைக்கான சாம்ராஜ்ஜியத்தைப் பொறுமையாக உருவாக்கிக் கொண்டு இருப்பதில் கவனம் செலுத்துங்கள்.

அடுத்து உங்கள் தலைமுறையை நீங்கள் எப்படி அணுக வேண்டும் என்பதும் முக்கியமானது. நீங்கள் கற்றதை உங்கள் தலைமுறைக்குச் சொல்லிக் கொடுங்கள். சொத்து என்பது பணத்தைக் கொடுப்பது அன்று. பணம் பற்றிய அறிவைக் கொடுப்பது. மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதுதான் நல்லது. கடன் வாங்கி ஒரு பொருளை வாங்குவதைக் கற்றுக் கொடுத்து விடாமல், பணம் குறித்து திட்டம் (பட்ஜெட்) போட்டு வாழ்வதை அவசியம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். இதுதான் அவர்களின் ஆரோக்கியமான மனநிலைக்கும் நல்ல பழக்க வழக்கங்களுக்கும் அவசியம் தேவையான அஸ்திவாரம் ஆகும்.

மனநிலையை அமைத்துக் கொள்வதும் வாழ்க்கையில் முக்கியமானது. அமைதி, ஒழுக்கம், பொறுமை, நிதானம் ஆகிய நான்கு குணங்களையும் நம் மனநிலைகளாகவே வார்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இவை  வெளிப்பட வேண்டும். பழக்கவழக்கங்கள் அனைத்தும் இவற்றை உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் தலைமுறைகளிடம் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குவதை விட, வாழ்க்கைக்கான பொருளைச் சேர்ப்பது முக்கியம் என்பதை எப்போதும் எடுத்துச் சொல்லுங்கள். அத்துடன், எதிலும் குறுகிய கால யோசனையோடு செயல்படாமல், நீண்ட கால யோசனையோடு செயல்பட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

இந்த வாழ்க்கையை நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ, யாருடனும் போட்டி போட வேண்டிய அவசியமே இல்லை. இதை வாழ்க்கையில் புரிந்து கொள்வது மிக முக்கியமானது. வாழ்க்கை என்ன, போட்டிப் போட்டு வெற்றி பெற வேண்டிய ஓட்டப் பந்தயமா? ஆகவே இந்த வாழ்க்கையில் யாருடனும் ஓட்டப் பந்தயத்தில் ஓட வேண்டிய அவசியமே இல்லை. இதையும் உங்கள் தலைமுறைக்குப் பொறுமையாகப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்.

எப்போதும் திடீர் ஆசைகள், திடீர் அந்தஸ்துகள் ஆபத்துகளை விளைவிக்கும் என்பதை அறிந்து அவற்றை விலக்கி வைக்கும் மனோதிடம் வாழ்க்கையில் வேண்டும். தற்காலிக சந்தோசங்களுக்கு ஆசைப்படாமல் நிரந்தர நிம்மதியும், சுதந்திரமும் முக்கியம் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். இதை நீங்கள் புரிந்து கொள்வதோடு, உங்கள் தலைமுறைக்கும் புரியவையுங்கள்.

வாழ்க்கையில் அந்தஸ்து பார்த்துக் கொண்டே நல்ல விசயங்களைத் தவற விட்டு விடக் கூடாது. அந்தஸ்து என்பது பந்தாவோ, ஆடம்பரமே அல்ல. அது தன்முனைப்போடும் தன்மானத்தோடு இருப்பதே. இதைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அப்படித் தவறாகப் புரிந்து கொண்டால் வட்டி கட்டி வாழும் வாழ்க்கையையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் இதைப் புரிந்து கொண்டால் உங்களது சுதந்திரமான வாழ்க்கை நல்ல விசயங்கள் பலவற்றை வட்டியாக உங்களுக்கு வாங்கித் தரும். நீங்களும் உங்கள் தலைமுறையும் புரிந்து கொள்ள வேண்டிய முடிவான விசயம் இதுவே.

மேற்படி அனைத்து விசயங்களையும் புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் கடைபிடித்தால் நீங்களும் உங்கள் தலைமுறையும் பல்லாண்டு பல்லாண்டு நலமாகவும் வளமாகவும் பலமாகவும் வாழ்வீர்கள்! வாழ்த்துகள்!

*****

No comments:

Post a Comment