Saturday, 26 July 2025

கலியுக கர்ணன்களே ‘எஸ்க்ரோ’ கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்!

கலியுக கர்ணன்களே ‘எஸ்க்ரோ’ கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்!

உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ உதவி செய்வதற்காக இணையவழியில் பண பரிவர்த்தனை (ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பும் போது) செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

திடீரென அவசரத் தேவை எனும் போதோ, ஒரு பொருளை இணைய வழியில் வாங்கித் தருமாறு வேண்டும் போதோ நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் இது ஒரு சிறிய உதவிதானே என்று இணைய வழியில் பண பரிவர்த்தனை (ஆன்லைன் டிரான்சாக்ஸன்) மூலமாகப் பலரும் உதவி வருகின்றனர்.

‘ரொம்ப அவசரம்’ என நண்பரோ, உறவினரோ பணம் கேட்கும் போது, கொண்டு போய் கொடுக்கக் கூட நேரமும் அவகாசமும் இல்லாத போது என்ன செய்வது? பலரும் ஜிபே மூலமாகப் பணத்தை நொடியில் அனுப்பி விடுகின்றனர்.

“எனக்கு இணைய வழியில் (ஆன்லைனில்) ஒரு பொருளை வாங்கத் தெரியாது. ஆகவே அந்தப் பொருளை இணைய வழியில் எனக்காக நீ பணம் செலுத்தி வாங்கித் தந்து விடு. நான் உன்னிடம் பணமாகத் தந்து விடுகிறேன்.” என நண்பர்களோ, உறவினர்களோ சொல்லும் போது, இந்த உதவியைக் கூட செய்யா விட்டால் எப்படி என்று ஜிபே மூலமாகவோ வங்கிச் செயலி மூலமாகவோ செய்து விடுகின்றனர்.

“தற்போது என் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. பத்தாயிரம் பணம் போட்டு விடு. நாளை சம்பளம் வந்து விடும். உடனே நான் உன் கணக்கில் போட்டு விடுகிறேன்.” என்று நெருங்கியவர்கள் கேட்கும் போது உடனே காரியத்தில் பலர் இறங்கி விடுகின்றனர்.

“கையில் பணமாக உள்ளது. வங்கிக் கணக்கில் பணம் இல்லை. ஆகவே இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, உன் வங்கிக் கணக்கிலிருந்து என் வங்கிக் கணக்குக்குப் பணம் போட்டு விடு.” என்று கேட்பவர்களிடம் என்ன செய்வது என்று இணையவழிப் பணபரிமாற்றம் செய்து விடுபவர்களும் இருக்கின்றனர்.

“எனக்கு இந்த ஜிபே பண்ணும் போது எண்களைத் தவறாகப் போட்டு மாற்றி செய்து விடுகிறேன். ஆகவே இந்த எண்ணுக்கு நீ பண்ணி விடு. உன்னுடைய எண் என் தொடர்பில் இருப்பதால் அதைப் பயன்படுத்தி நான் சரியாக அனுப்பி விடுகிறேன்.” எனக் கேட்கும் போது ஐயோ பாவம் என்று உதவி செய்ய இறங்கி விடுபவர்களும் உண்டு.

இச்சிறு உதவி மூலம் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனென்றால், இப்பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரிக் கண்காணிப்பில் வருகின்றன.

உங்கள் கணக்கிலிருந்து அதிக அளவு தொகையைச் செலுத்துவதும் அல்லது உங்கள் கணக்கிற்கு அதிக அளவு பணம் வருவதும் தன்னிச்சையாகவே வருமான வரிக் கண்காணிப்பில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் மூலமாகப் போய் சேர்ந்து விடும். இதற்கு வருமான வரித் துறையிலிருந்து விளக்கம் கேட்டால் உரிய விளக்கத்தை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

மற்றவர்களுக்காக உதவப் போய், நீங்கள் செலுத்திய பணத்திற்காக, உங்கள் வங்கிக் கணக்குக்கு பணம் வரும் போது அது உங்கள் வருமானமாகக் கருதப்படும் என்பதால் மற்றவர் வங்கிக் கணக்கிலிருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் பணம் குறித்து நீங்கள் ஓர் ஒப்பந்தம் எழுதிக் கொள்ள வேண்டும். இது போன்ற ஒப்பந்தங்கள் எழுதியிருந்தால்தான் நீங்கள் வருமான வரித் துறை விசாரணைகளுக்கு உரிய விளக்கங்கள் வழங்க முடியும்.

இதைத் தவிர்க்கவும், உங்கள் உதவி செய்யும் மனப்பான்மைக்குப் பங்கம் நேரிடாமல் இருக்கவும் நீங்கள் வங்கியில் எஸ்க்ரோ கணக்கைத் (Escrow Account) துவங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் வருமான வரித்துறையின் கண்காணிப்பிலிருந்து விடுபடலாம்.

இக்கணக்கில் உங்கள் இருப்பு எப்போதும் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். இந்தக் கணக்கிலிருந்து நீங்கள் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டுமானால்,  யாருக்குப் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டுமோ அவருக்கும் எஸ்க்ரோ கணக்கு இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும்.

ஆகவே, எஸ்க்ரோ கணக்கைத் துவங்கிக் கொள்ளுங்கள். கலியுக கர்ணனாகிக் கலக்குங்கள்!

*****

No comments:

Post a Comment