Friday 3 February 2023

2023 மத்திய பட்ஜெட்டும் வருமான வரியும்

2023 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டும் வருமான வரியும்

பிப்ரவரி 1, 2023 இல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ள வருமான வரி விலக்குகள் நடப்பு நிதி ஆண்டிற்கு அதாவது 2022 – 2023க்கு உரியதல்ல. தற்போது வருமான வரி செலுத்துவோர் இவ்வரி விலக்குகளைக் கோர இயலாது. இவ்வரி விலக்குகள் அனைத்தும் வரும் நிதி ஆண்டான 2023 – 2024 க்கானது. இதற்கான வரி விலக்குகளை அடுத்தாண்டு வருமான வரி செலுத்தும் போதே கோர இயலும்.

இந்தப் பட்ஜெட்டில் அறிவித்துள்ள விலக்குகள் எதுவும் பழைய முறையில் வருமான வரி செலுத்துவோருக்கு உரியதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்த நிதி ஆண்டும் பழைய முறை வருமான வரி செலுத்துவது அதே முறையில்தான் தொடரும். மேலும் தெளிவாகச் சொல்வதென்றால் சேமிப்பு மற்றும் பிற கழிவுகளில் பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் இல்லை.

அந்த பழைய வருமான வரி முறையையும் பார்த்து விடுவோம்.

பழைய வருமான வரி செலுத்தும் முறையில் 2.5 லட்சம் வரை வருமான வரி இல்லை. அத்துடன் மொத்த வருமானம் ஐந்து லட்சத்துக்கு உட்பட்டு அமையும் பட்சத்தில் அத்தொகை வரை 87A படி 12500 ரிபேட் வழங்கப்பட்டு வருமான வரி இல்லை. ஐந்து லட்சத்துக்கு மேற்படும் வருமானத்திற்கு 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை 12,500ம், 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு 20 சதவீதமும், அதற்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீதமும் கணக்கிடப்பட்டு வருமான வரி செலுத்தப்பட வேண்டும். இத்தகைய பழைய வருமான வரி முறையில் அடுத்த ஆண்டிலும் மாற்றம் கிடையாது.

2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் படி அடுத்த ஆண்டு வருமான வரியில் மாற்றம் என்பது புதிய முறைக்கு மட்டுமே. புதிய முறையில் வருமான வரி செலுத்த விரும்பினால் அடுத்த ஆண்டு இவ்வரி விலக்குகளைக் கோரலாம்.

அதன்படி புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. அதாவது 7 லட்சத்துக்கு கீழ் எவ்வளவு வருமானம் என்றாலும் வரி கிடையாது.

வருமானம் 7 லட்சத்துக்கு மேல் அமையுமானால்,

 3 லட்சம் வரை வரி விலக்கும்,

3 லட்சத்திலிருந்து 6 லட்சத்துக்கு 5 சதவீதமும்,

6 லட்சத்திலிருந்து 9 லட்சத்துக்கு 10 சதவீதமும்,

9 லட்சத்திலிருந்து 12 லட்சத்திற்கு 15 சதவீதமும்,

12 லட்சத்திலிருந்து 15 லட்சத்துக்கு 20 சதவீதமும்,

15 லட்சத்துக்கு மேற்பட்ட தொகைக்கு 30 சதவீதமும்

கணக்கிட்டு வருமான வரியைச் செலுத்த வேண்டும்.

உதாரணமாக உங்கள் ஆண்டு வருமானம் 8 லட்சம் என்றால் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3 லட்சத்திலிருந்து 6 லட்சத்துக்கு 5 சதவீதமும், 6 லட்சத்திலிருந்து 8 லட்சத்துக்கு 10 சதவீதமும் ஆக ரூ. 35,000/- (Education Cess தனி) வருமான வரி செலுத்த வேண்டும்.

அதே போல மேற்படி கணக்கீட்டின் படி 9 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர் ரூ. 45,000/- /- (Education Cess தனி) வருமான வரி செலுத்த வேண்டும்.

மேற்படி கணக்கீட்டின் படி 10 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர் ரூ. 60,000/-  (Education Cess தனி) வருமான வரி செலுத்த வேண்டும்.

இப்புதிய முறையில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது என்பதால் வருகின்ற வரித்தொகையில் அச்சலுகைகளைக் கோர முடியாது. புதிய முறையில் வருமான வரி செலுத்துவது என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் வரிக்காக எவ்விதச் சேமிப்பும் செய்ய வேண்டியதில்லை என்பது இதனால் உங்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். அதாவது நீங்கள் எல்.ஐ.சி., பி.பி.எப்., பி.எப். சந்தா தொகை, சி.பி.எஸ். சந்தா தொகை, ஐந்தாண்டு வரி சேமிப்புத் திட்ட முதலீடு போன்ற எந்த சேமிப்புத் திட்ட விவரங்களைச் சமர்ப்பித்தும் வரிச் சலுகையை இப்புதிய முறையில் கோர முடியாது. நன்கொடை, நிவாரணத் தொகை, மருத்துவச் செலவினம் போன்ற வரிக் கழிப்புகளையும் செய்ய முடியாது. வேறொரு வகையில் சொல்ல வேண்டுமானால் வரிக்காக பண சேமிப்பைச் செய்ய வேண்டியதில்லை, எவ்வித நன்கொடைகளையும் வழங்க வேண்டியதில்லை என்ற நிலையை இப்புதிய வரிவிதிப்பு முறை உண்டாக்கி விட்டது எனலாம்.

மேற்படி விவரங்களைச் சுருக்கமாகச் சொல்வதென்றால் 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் வரி விலக்குகள் அடுத்த ஆண்டு வருமான வரி செலுத்தும் போதே பயன்படுத்த முடியும். அதுவும் புதிய முறையில் செலுத்துவதற்கு மட்டுமே உரியது. பழைய முறைக்கு உரியதல்ல. பழைய முறை எவ்வித மாற்றமின்றி அதே பழைய முறையில்தான் அடுத்த ஆண்டும் தொடரும்.

*****

No comments:

Post a Comment