Monday 27 February 2023

தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28

தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28

தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி – 28 இல் கொண்டாடப்படுகிறது.

ஏன் கொண்டாடப்படுகிறது?

சர்.சி.வி.ராமன் நினைவாக.

அப்படியானால் அதுதான் அவரது பிறந்த நாளா?

இல்லை, அவர் பிறந்தது நவம்பர் 7 இல்.

வருடம் 1888.

அவரது நினைவாகக் கொண்டாடப்படுகிறதா?

அதுவும் இல்லை, அவர் இறந்தது நவம்பர் 21 இல்.

வருடம் 1970.

பிறகேன் பிப்ரவரி 28 இல் கொண்டாடப்பட வேண்டும்?

சர்.சி.வி.ராமன் தனது ராமன் விளைவை இந்த உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அந்த நாளைத்தான் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம்.

எத்தனையோ அறிவியல் அறிஞர்கள் இந்தியாவில் இருக்கும் போது சர்.சி.வி.ராமன் கண்டுபிடிப்பை அறிவித்த நாளை மட்டும் ஏன் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாட வேண்டும்?

சர்.சி.வி.ராமன்தான் இந்தியாவின் முதல் நோபல் பரிசு (1930 இல்) பெற்ற அறிவியல் அறிஞர். அதற்கு முன்பு இந்தியாவிலிருந்து இரபீந்திரநாத் தாகூர்தான் நோபல் பரிசு பெற்றிருந்தார். அது இலக்கியத்திற்காக.

அது மட்டுமில்லை, அறிவியலில் முதல் நோபல் பரிசு பெற்ற ஆசியரும் அவர்தான். அதாவது ஆசிய கண்டத்தில் பிறந்து அறிவியல் துறையில் முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர் சர்.சி.வி.ராமன்தான்.

அது மட்டுமில்லை, வெள்ளையரல்லாத அறிவியிலில் நோபல் பரிசு பெற்ற முதல் அறிஞரும் அவர்தான்.

அது மட்டுமில்லை, இந்தியாவில் கல்வி கற்று, இந்தியாவிலிலேயே ஆய்வு மேற்கொண்டு நோபல் பரிசு பெற்றவரும் அவர்தான்.

அது மட்டுமில்லை, தன் வாழ்நாளில் எவ்வளவோ வெளிநாட்டு அழைப்புகள் வந்தும் தன் ஆயுட்காலம் முழுவதும் இந்தியாவில் பணியாற்றி இந்தியாவிலேயே ஆய்வு மேற்கொண்ட அறிஞரும் அவர்தான்.

அது மட்டுமில்லை, நோபல் உரையின் போது இந்திய சுதந்திரம் பற்றியோ இந்திய சுதந்திர வீரர்கள் பற்றியோ எவ்வித பேச்சும் இடம்பெறக் கூடாது என ஆங்கிலேய அரசு எச்சரித்திருந்த போதும் இந்திய சுதந்திர வீரர்களை வணங்கி தன்னுடைய நோபல் உரையைத் தொடங்கியவர்தான் சர்.சி.வி.ராமன்.

அது மட்டுமில்லை, எத்தனையோ இந்திய விஞ்ஞானிகளை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் இந்தியாவிலேயே ஆய்வு செய்ய வற்புறுத்தியவரும் சர்.சி.வி.ராமன்தான்

இப்படிப்பட்டவருக்காக, இந்தியாவிற்கு அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறக் காரணமாக இருந்த ராமன் விளைவை அறிவித்த நாளை தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுவது சிறப்புதானே.

 இவரைப் பற்றிக் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

Sir Chadrasekara Venkata Raman என்ற பெயரின் சுருக்கம்தான் சர்.சி.வி.ராமன் என்பதாகும். தமிழில் குறிப்பிட வேண்டுமென்றால் சர் ச.வெ.ராமன் என்று குறிப்பிடலாம்.

சர் என்பது ஆங்கிலேய அரசு அவருக்கு அளித்த பட்டமாகும்.

வெங்கடராமன் என்பது அவரது பெயர்.

சந்திரசேகரன் என்பது அவரது தந்தையார் பெயர்.

சர்.சி.வி.ராமனின் நினைவாகத் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவது தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை தருவதாகும்.

எப்படி?

சர்.சி.வி.ராமன் ஒரு தமிழர்.

அவர் பிறந்தது திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவலில்.

அவரது பள்ளிப்படிப்பு அவரது தந்தையின் வேலை நிமித்தமாக விசாகப்பட்டினத்தில் நிகழ்ந்திருந்தாலும் கல்லூரி படிப்பு படித்ததெல்லாம் சென்னை மாநிலக் கல்லூரியில்தான். நமது தமிழ்நாட்டில்தான்.

அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகள் இயற்பியல் பேராசிரியராகவும் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் 15 ஆண்டுகள் விஞ்ஞானியாகவும் பணி புரிந்திருக்கிறார்.

இந்தியர்களின் அறிவியல் ஆய்வுகளை உலகறியச் செய்யும் நோக்குடன் Indian Journal of Physics, Current Science ஆகிய ஆய்விதழ்களைத் தொடங்கி நடத்தியுள்ளார்.

அறிவியல் அறிஞர்களை உருவாக்குவதற்காக Indian Science Academy, Current Science Association ஆகிய அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

இவருக்கு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் Fellow of Royal Society, Knighthood, Hughes of Royal Society. Sir போன்ற சிறப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசு 1954 இல் பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. முதன் முதலாக பாரதரத்னா விருது பெற்ற மூவரில் இவரும் ஒருவர். அத்துடன் அம்மூவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூவரில் மற்ற இருவர் ராதாகிருஷ்ணனும் ராஜாஜியும் ஆவர்.

மைசூர் அரசர் இவருக்கு ராஜ்சபாபூசன் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்.

இத்தாலிய தேசம் மேட்யூச்சி பதக்கம் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

பிலடெல்பியா நிறுவனம் பிராங்ளின் பதக்கம் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

ரஷ்ய தேசம் அகில உலக லெனின் பரிசு வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

இப்படிப்பட்டவர் தன்னுடைய கண்டுபிடிப்பை அறிவித்த நாளைத் தேசிய அறிவியல் தினமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 28 இல் கொண்டாடுவது இந்தியர்களாகிய நமக்குச் சிறப்புதானே.

*****

No comments:

Post a Comment