Wednesday 15 February 2023

கடவுச்சொல்லை (Password) உருவாக்கும் போது…

கடவுச்சொல்லை (Password) உருவாக்கும் போது…

கடவுச்சொல்லை (Password) உருவாக்கும் போது பின்வரும் அம்சங்களைக் கருத்தில் கொள்வது நலம்.

கடவுச்சொல்லானது (Password) எட்டு இலக்கத்தை விட அதிகமாக இருப்பது நல்லது. எட்டு இலக்கம் வரையிலான கடவுச்சொற்கள் (Passwords) ஊடுருவும் கணினி மென்பொருள்களால் ஊகித்துக் கண்டறியக் கூடியவையாக இருப்பதால் அவற்றைப் பாதுகாப்பற்ற கடவுச்சொற்கள் (Passwords) எனலாம். எனவேதான் கடவுச்சொற்கள் எட்டு இலக்கத்தை விட அதிகமாக இருப்பது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் பனிரெண்டு இலக்கம் வரையுள்ள கடவுச்சொற்கள் கூட பாதுகாப்பானவை அல்ல. பதினைந்து இலக்கங்களுக்கு மேற்பட்ட கடவுச்சொற்களே பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

பதினைந்து இலக்கக் கடவுச்சொற்களை (Passwords) உருவாக்கும் போது 123456789012345 என எளிதில் யூகிக்கும்படி உருவாக்கினால் அவ்வித கடவுச்சொற்களும் (Passwords) பாதுகாப்பானவை அல்ல. அதாவது எளிதில் யூகிக்கக் கூடிய எவ்வகைக் கடவுச்சொற்களும் (Passwords) பாதுகாப்பானவை அல்ல. ஆகவேதான் கடவுச்சொற்கள் (Passwords) எழுத்துருக்கள் (letters), எண்ணுருக்கள் (numbers) , சிறப்புக்குறிகள் (special characters) கொண்ட கலவையாக உருவாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. எழுத்துருவிலும் பெரிய எழுத்துகள் (capiltal letters), சிறிய எழுத்துகள் (small letters) எனக் கலவையாகப் பயன்படுத்தி உருவாக்குவது சிறப்பானது.

உதாரணமாக,

BzUin-Dmol@367_Os என உருவாக்கப்படும் கடவுச்சொற்கள் (Passwords) பாதுகாப்பானது எனலாம். அதற்காக மேற்படி கடவுச்சொல்லையே உங்களது கடவுச்சொல்லாக அமைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இக்கடவுச்சொல் இப்போது பலர் அறிந்துள்ள கடவுச்சொல்லாக ஆகியிருக்கும். ஆகக் கடவுச்சொல்லை உருவாக்கும் போது யாரும் ஊகிக்க முடியாத, யாரும் அறிந்திராத வகையில் உருவாக்குங்கள்.

பாதுகாப்பான கடவுச்சொல்லானது உங்களை, உங்கள் சுயவிவரங்களை, உங்கள் பொருளாதாரத்தை என்று பல வகையில் பல விதங்களில் பாதுகாக்கிறது. ஆகப் பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்க கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வது நல்லது. அக்கடவுச்சொல்லை உங்கள் மனதில் மட்டும் வைத்திருப்பதே பாதுகாப்பானது. தாளில் எழுதி வைத்திருப்பதோ, மென்பொருள் கோப்புகளில் பதிவு செய்து சேமித்து வைத்திருப்பதோ பாதுகாப்பிற்கு உத்தரவாதமானதல்ல. உங்கள் மனதே இந்த உலகின் பாதுகாப்பான இடம் என்பதால் உங்களுக்கே உங்களுக்கே உரிய கடவுச்சொல்லை உருவாக்கி அதை உங்கள் மனதில் மட்டும் பாதுகாப்பாக ரகசியமாக வைத்திருங்கள்.

*****

No comments:

Post a Comment