Friday, 24 February 2023

பேக்கேஜ்டு உணவுகளில் கவனிக்க வேண்டியவை

பேக்கேஜ் உணவுகளில் கவனிக்க வேண்டியவை

பதப்படுத்தப்பட்ட மற்றும் அடைக்கப்பட்ட (பேக்கேஜ்டு) உணவு மற்றும் பான வகையறாக்களில் நாம் பின்வருவனவற்றைக் கவனிக்க வேண்டும். இவ்வித கவனித்தல் மிக அவசியமாகும். தற்காலங்களில் அத்தியாவசியமான ஒன்றாகும்.

உணவு மற்றும் பானங்களை பேக்கேஜ்டு நிலையில் வாங்கும் போது பின்வரும் மூன்று குறியீடுகளில் ஏதேனும் ஒன்று அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

1) FSSAI

2) ISI

3) Agmark

FSSAI

இக்குறியீட்டை நீங்கள் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட (பேக்கேஜ்டு) உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களில் பார்க்கலாம். Food Safety and Standards Authority o India என்பதன் சுருக்கமே FSSAI என்பதாகும்.

ISI

தண்ணீர் புட்டிகள் போன்றவற்றில் நீங்கள் இக்குறியீட்டைப் பார்க்கலாம். Indian Standards Institute என்பதன் சுருக்கமே ISI என்பதாகும்.

Agmark

எண்ணெய், தானியங்கள், பருப்பு வகைகள், சமையலறைப் பொருட்கள், தேன், மசாலாப் பொருட்கள் போன்ற விவசாயத்தோடு தொடர்புடைய பொருட்கள் அடங்கிய பொட்டலங்களில் இக்குறியீட்டை நீங்கள் பார்க்கலாம். Agriculture Mark என்பதன் சுருக்கமே Agmark என்பதாகும்.

இக்குறியீடுகளில் ஏதேனும் ஒன்றாவது நீங்கள் வாங்கும் அடைக்கப்பட்ட (பேக்கேஜ்டு) உணவுப்பொருள் அல்லது பானம் அடங்கிய உறையில் இருக்க வேண்டும். அப்பொருள்களே விற்பனைக்கான அங்கீகாரம் பெற்றதும் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கேற்றதும் ஆகிய பொருட்களாகும். இக்குறியீடுகள் இல்லாத உணவுப்பொட்டலங்களைப் பானங்களை வாங்குவதைத் தவிர்ப்பது நலமாகும்.

இத்துடன் நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் சைவமாக அசைவமா என்பதைக் குறிப்பிடும் பச்சை மற்றம் சிவப்பு குறியீடுகளைப் பார்த்தும் வாங்கலாம்.

தற்போது ஆர்கானிக் பொருள் என்பதைக் குறிக்கும் Jaivik Bharat என்ற குறியீட்டைக் கவனித்தும் வாங்கலாம்.

இத்துடன் உணவுப்பொருளின் தயாரிப்புத் தேதி (Mfg Date), காலாவதி தேதி (Expiry Date) குறித்த தகவல்களையும் கவனித்து வாங்கலாம்.

சில உணவுப்பொருள் பொட்டலங்களில் Best Before … என்று குறிப்பிட்டிருப்பதையும் கவனித்து வாங்கலாம். இந்த Best Before … என்பது குறிப்பிடப்பட்டிருக்கும் காலக்கெடு வரை பொருளின் தயாரிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்பதைக் குறிப்பதாகும். இதனால் அக்காலக்கெடுவைக் கடந்த உணவுப்பொருட்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தரத்திற்கான குறியீடுகளில் குறைவு ஏற்படும் என்பதைக் குறிப்பதற்காகும் அதாவது அந்தக் காலக்கெடு காலத்தைச் சிறிது கடந்திருந்தாலும் வேறு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனலாம். ஆனால் Expiry Date காலக்கெடு அப்படிப்பட்டதல்ல. அந்தத் தேதியைக் கடந்த உணவுப்பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக Best Before … என்பதில் செய்து கொள்ளும் சமாதானத்தை Expiry Dateஇல் செய்து கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகவல் பயனுடையதாக இருந்தால் அனைவரும் பயன்பெற பகிருங்கள். விழிப்புணர்வை உருவாக்குங்கள். உங்களது கருத்துகளையும் தயக்கமின்றித் தெரிவியுங்கள். இன்னும் கூடுதல் விவரங்கள் தங்களுக்குத் தெரிந்திருப்பின் அதையும் அனைவரும் நலன் கருதி தெரிவியுங்கள்.

*****

No comments:

Post a Comment