மண்டையோடு பேசிய கதை!
மண்டையோடு பேச வேண்டும் என்றால்
அதற்கு உயிர் இருக்க வேண்டும்.
உயிரற்ற மண்டையோடு பேசுவதில்லை.
உயிரற்று தனித்துக் கிடந்த
மண்டையோடு ஒன்று பேசிய போது அதைக் கண்ட ஒருவன் அதிர்ச்சியடைந்தான். அது அவனுக்கு ஆச்சரியமாகவும்
இருந்தது.
நீ எப்படிப் பேசுகிறாய் என்று
அதனிடம் தன் வியப்பைக் கேள்வியாகக் கேட்டான்.
நான் பேசுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை
என்பதை உனக்குப் புரிய வைக்க முடியாது. ஆனாலும் உனக்கு ஓர் அறிவுரை சொல்லவே இப்போது
நான் பேசுகிறேன் என்றது மண்டையோடு.
அப்படியா! அதையும்தான் சொல்லேன்
என்றான் அவன்.
உன் வாயை மட்டும் உன் கட்டுபாட்டிற்குள்
வைத்துக் கொள். உன் வாழ்க்கை உன் கையில் இருக்கும். இல்லையென்றால் நீயும் என்னைப் போலாகி
யாருக்காவது இப்படி அறிவுரை சொல்லும் நிலைக்கு ஆளாகி விடுவாய் என்றது மண்டையோடு.
இதென்ன பிரமாதமான அறிவுரை
என்று நினைத்த அவன் அந்த மண்டையோடு பேசியதே என்ற வியப்பு தாளாமல் அங்கிருந்து சென்றான்.
அவன் நாட்டுக்குள் சென்ற நேரம் அரசரின் அறிவிப்பு ஒன்று அவனுக்கு நல்லதிர்ஷ்டத்தைத்
தருவதாக இருந்தது.
மன்னரை ஆச்சரியப்படுத்துபவர்கள்
லட்சம் பொன் பரிசு பெறுவார்கள், அப்படி ஆச்சரியப்படுத்த முடியாதவர்கள் மரண தண்டனை விதிக்கப்படுவார்கள்
என்ற அறிவிப்பைக் கேட்டதும் அவன் மன்னரிடம் சென்றான். தன்னோடு வந்தால் தான் பேசும்
மண்டையோட்டைக் காட்டுவதாகச் சொன்னான். ஒருவேளை அப்படிக் காட்டவில்லை என்றால் உன் தலையைச்
சீவி விடுவேன் என்று எச்சரித்தார் மன்னர்.
அவன் அதை ஏற்றுக் கொண்டான்.
மன்னரை அவரது பரிவாரங்களோடு மண்டையோடு இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். அந்த
மண்டையோட்டைக் காட்டி அது பேசும் என்றான். அது பேசவில்லை. அதனிடம் சென்று பேசு என்றான்.
அது பேசவில்லை. பேசு, பேசு என்று கெஞ்சினான், மன்றாடினான். அது பேசவே இல்லை. மன்னர்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். இறுதியில் அவன் தலையைச் சீவச் சொல்லி விட்டுப் பரிவாரங்களோடு
கிளம்பி விட்டார்.
தலை சீவப்பட்ட அவனது மண்டையோடு
இப்போது பேச ஆரம்பித்தது. முன்பிருந்த மண்டையோடு இப்போது மறைந்து விட்டது. அந்த மண்டையோட்டுக்கு
இப்போதுதான் முன்பிருந்த மண்டையோடு சொன்ன அறிவுரையின் முழுமையான பொருள் விளங்கியது.
இதைத்தான் திருவள்ளுவர்,
“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.” (குறள், 127)
என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே சொல்லி விட்டார். ஒவ்வொரு குறளும் வாழ்க்கைக்கான பாடம். குறளைப் பின்பற்றா விட்டால்
வாழ்வையே இழக்க நேரிடும் என்பது இதனின்று புலனாகிறது அல்லவா!
*****
No comments:
Post a Comment