Saturday, 28 June 2025

சமநிலையில் இருப்பது எப்படி?

சமநிலையில் இருப்பது எப்படி?

குருநாதர் ஒருவர் இருந்தார்.

அவர் இன்பத்தைக் கண்டு மகிழ்வதும் இல்லை. துன்பத்தைக் கண்டு துவள்வதும் இல்லை. அவர் எப்போதும் சமநிலையிலேயே இருந்தார்.

எப்போதும் சமநிலையிலேயே இருப்பது என்பது சாதாரணமானதா என்ன? அதற்குத் துன்பம் வரும் போது துவளாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும் போது துள்ளிக் குதிக்காமல் இருக்க வேண்டும். இன்பமோ, துன்பமோ இரண்டும் ஒன்றுதான் என்கிற மனநிலை வேண்டும்.

இப்படி ஒரு மனநிலையைக் கற்றுக் கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது?

அந்தக் குருநாதர் இந்தப் பண்பை யாரிடமிருந்து கற்றுக் கொண்டார் என்பதை அறிந்து கொண்டால், இதை எல்லாருக்கும் கற்றுக் கொள்ளலாம் அல்லவா!

நமக்கு இப்படி வரும் இதே ஆசை அந்தக் குருநாதரின் சீடர்களுக்கும் வந்தது.

அவர்களும் இந்த நல்ல பண்பை அவர் யாரிடமிருந்து கற்றுக் கொண்டார் என்று தங்கள் குருநாதரிடம் கேட்டனர்.

கழுதையிடமிருந்து கற்றுக் கொண்டதாகக் குருநாதர் சொன்னார்.

கழுதையிடமிருந்தா என்று சீடர்களுக்கு ஆச்சரியம்.

அவர்களின் ஆச்சரியத்தைப் போக்கும் வகையில் குருநாதரே பதில் சொன்னார்.

காலையில் அழுக்குத் துணிகளைச் சுமந்து செல்வதற்காகக் கழுதை வருந்துவதும் இல்லை. மாலையில் சலவை செய்யப்பட்ட துணிகளைச் சுமந்து செல்வதற்காக அது சந்தோசப்படுவதும் இல்லை.

நம்மைச் சுற்றியுள்ள யாரும் தாழ்வானவர்களும் இல்லை, உயர்வானவர்களும் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள பொருட்களிலும் உயர்வு, தாழ்வு இல்லை. அவை அனைத்தும் நம் மனதிலேயே இருக்கின்றன.

இதைத்தான் கணியன் பூங்குன்றனாரும்,

“பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” (புறநானூறு, 192 : 11 – 12)

என்கிறார்.

நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் நமக்கான பாடங்களைச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் சமநிலையான மனது வந்து விடும் அல்லவா!

*****

No comments:

Post a Comment