Saturday, 28 February 2026

வியோமித்ரா – விண்வெளியில் ஓர் இந்திய மேனகை!

வியோமித்ரா – விண்வெளியில் ஓர் இந்திய மேனகை!

வியோமித்ரா – இதென்ன ஏதோ மாத்திரையின் பெயர் போல இருக்கிறது என யோசிக்கிறீர்களா? இது மாத்திரையல்ல. சிட்டி ரோபோவின் சகோதரி என்று சொல்லலாம். இவள் ஒரு பெண்.

ககன்யான் விண்கலத்தில் வேலை செய்யப் போகும் பெண் ரோபோதான் இந்த வியோமித்ரா.

இவள் ஒரு ஹ்யூமனாய்டு. அதாவது, நம்மைப் போலவே உருவம் கொண்ட, ஆனால் ரத்தமும் சதையும் இல்லாத ஒரு இயந்திரப் பெண்.

வியோம் என்றால் விண்வெளி, மித்ரா என்றால் நண்பன்.

இஸ்ரோ இதைச் செய்திருக்கிறது. 2026 இல் மிகப்பெரிய சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை நிஜமாகப்போகிறகிறது.

ககன்யான் விண்கலத்தில் மனிதர்கள் ஏறுவதற்கு முன்னால், ரிஸ்க் எடுக்கப் போவது இந்த அரை உடல் ரோபோதான்.

ஆம், இவளுக்கு இடுப்புக்குக் கீழே கால்கள் கிடையாது. அது ஏன்? ஏனிந்த விசித்திரம்? விண்வெளியில் எடை கிடையாது, அப்புறம் எதுக்குக் கால்கள்? விண்வெளியில் மிதந்து கொண்டே வேலை செய்ய இடுப்புக்கு மேல் உள்ள பாகங்களே போதும்.

விண்கலத்தின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, சுவிட்சுகளை இயக்குவதற்கும், கேபினில் இருக்கும் அழுத்தத்தை அளப்பதற்கும் கால்கள் எதற்கு? அங்கு வியோமித்ரா ஓட்டப் போட்டியிலா கலந்து கொள்ளப் போகிறாள்? ஆகவே கால்கள் இல்லை. இது விண்கலத்தின் எடையைக் குறைக்கவும், அதிகப்படியான கருவிகளை வைக்கவும் இஸ்ரோ செய்திருக்கும் மேஜிக்.

இவளுடைய புத்திசாலித்தனம் மூளையில் அல்ல, சிலிக்கான் சில்லுகளில் இருக்கிறது. வியோமித்ரா, அங்கே விண்வெளியில் ஆக்சிஜன் அளவு என்ன? என்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கேட்டால், கண்கள் சிமிட்டி, எல்லாம் நார்மல் அல்லது கொஞ்சம் கூட ஆக்ஸிஜன் இல்லை அல்லது ஆக்ஸிஜன் குறைகிறது இப்படி அந்தச் சூழ்நிலைக்கேற்ற ஒரு பதிலைச் சொல்லும்.

வியோமித்ராவுக்கு சில உணர்வுகள் கூட உண்டு. விண்கலம் அதிவேகமாக மேலே போகும்போது ஏற்படும் நடுக்கத்தை உணர்ந்து டேட்டாவாக மாற்றி பூமிக்கு அனுப்புவாள். அது எப்படி என்றால், விண்கலம் பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டிச் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் புவிஈர்ப்பு விசை மாற்றங்களை இவளது உடலில் உள்ள சென்சார்கள் துல்லியமாகக் கணக்கிடும். அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்தால் உடனடியாகத் தகவல் சொல்லும். விண்கலத்திற்குள் வெப்பம் அதிகமானால் எச்சரிக்கை மணி அடிக்கும்.

அப்புறம் இவளுடைய வேறு வேலைகள் என்னவென்றால்…

முன்பே சொன்னபடி வியோமித்ரா என்பது வெறும் பொம்மை அல்ல, அது ஓர் இயந்திரத் தோழி. விண்வெளியில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்கூட்டியே சந்திப்பதுதான் இவளுடைய வேலை.

ககன்யான் விண்கலத்தின் உள்ளே ஏகப்பட்ட பொத்தான்கள், இணைப்புகள் மற்றும் திரைகள் இருக்கும். வியோமித்ரா தனது கைகளால் இந்தச் சுவிட்சுகளை இயக்க முடியும். தரைக்கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வரும் கட்டளைகளை ஏற்று, விண்கலத்தின் பாகங்களைச் சரிபார்ப்பதும் இவள் வேலை.

வியோமித்ராவுக்குப் பேசத் தெரியும். விண்வெளி வீரர்கள் எதிர்காலத்தில் அவளிடம் பேசும்போது, அவர்களின் குரலைப் புரிந்து கொண்டு பதில் சொல்லும் ஆற்றல்  இவளுக்கு உண்டு. எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டால், சென்சார் தரவுகளை ஆய்வு செய்துவிட்டு ஆமாம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்லும்.

சுருக்கமாகச் சொன்னால், வியோமித்ரா ஒரு ஸ்பேஸ் டெஸ்ட் டிரைவர். இவள் தரும் தரவுகளை வைத்துதான், அடுத்த முறை இந்திய வீரர்கள் விண்வெளிக்குச் செல்லும் போது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் உறுதி செய்யப்படும்.

விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இல்லாத நிலையில், ஒரு சாதாரணத் திரவம் கூடக் கோள வடிவில் மிதக்கும். அந்தச் சூழலில் ஒரு ரோபோவின் மோட்டார் சரியாக இயங்குமா என்பது நம் இஸ்ரோ சயின்டிஸ்ட்டுகளுக்கு இருக்கும் முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு வியோமித்ரா சரியாக இயங்கி பதில் தந்து விட்டால், அடுத்த ஆண்டு மனிதர்கள் விண்வெளிக்குப் போவது உறுதி.

ஆக, இயந்திரப் பெண்ணே, விண்வெளிக்குப் போய் வந்து இந்தியர்களை அழைத்துச் செல்ல சீக்கிரமே நல்ல சேதியைக் கூறுவாயாக!

*****

Friday, 27 February 2026

ஆசிரியர் 2.0

ஆசிரியர் 2.0

ஆசிரியர் வகுப்புக்குள் நுழைகிறார். கையில் புத்தகம், சாக்பீஸ். எதிரே நாற்பது தலைகள். ஆனால், ஒரு தலை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. எல்லாம் குனிந்தே இருக்கும் தலைகள். மொபைல் பார்த்து பார்த்து அப்படி ஆகிவிட்டன. எல்லாம் வீட்டை விட்டு வந்து விட்டாலும் அங்கிருக்கும் டிவி, மொபைல் திரை நினைவுகளிலியே இன்னும் மூழ்கி இருக்கின்றன.

இன்றைய மாணவர்களில் பெரும்பாலானோர் டிஜிட்டர் அடிமைகள் அல்லது டிஜிட்டல் நோயாளிகள். இது போன்றவர்களுக்கு ஆசிரியர் நடத்தும் பாடம் ஸ்லோ மோஷன் படம் பார்ப்பது போலத்தான் இருக்கும்.

யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 30 வினாடிகளில் உலகத்தைப் பார்த்துப் பழகியவ அவர்களால் ஆசிரியரின் தொண்டைத் தண்ணீர் வற்றுவதைப் புரிந்து கொள்ள முடியாது.

ஆசிரியரை விட டிஜிட்டல் அல்காரிதம்கள் அவர்களின் கவனித்தலை நன்கு புரிந்து வைத்திருக்கின்றன. ஆசிரியர்கள் அவற்றுக்கு ஈடு கொடுத்து மாறா விட்டால் மாணவர்களின் கவனத்தைத் திசை திருப்ப முடியாது. என்ன செய்யலாம் இதற்கு?

ஆசிரியர்கள் இனியும் விரிவுரையாளர்களாக இருப்பது வேலைக்கு ஆகாது. அவர்கள் சுவாரசியர்களாக மாற வேண்டும். எப்படி மாறலாம்?

ஓர் ஆச்சரியமூட்டும், அதிர்ச்சியூட்டும் கேள்வியோடு வகுப்பறைக்குள் நுழையலாம். உதாரணத்துக்குச் செவ்வாயில் விவசாயம் செய்ய முடியுமா? என்று ஆரம்பிக்கலாம்.  தாவரங்களைப் போல மனிதர்களால் ஏன் உணவு தயாரிக்க முடியவில்லை என்று கேட்கலாம். இன்று டைனோசர்கள் நம்மோடு வாழ்ந்தால் எப்படி இருக்கும்? என்று யோசிக்க வைக்கலாம்.

தமிழ்ப் பாடம் என்றால் திருவள்ளுவர் நம் முன் வந்து நின்றால் எப்படி இருக்கும்? குமரி முனையில் தன்னுடைய சிலையைப் பார்த்து அவர் என்ன சொல்வார்? இப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்கலாம். இது மாணவர்களை இழுத்துப் பிடிக்கும். அவர்களுக்குத் தோன்றும் சுவாரசியமான பதில்களைச் சொல்ல அனுமதிக்க வேண்டும். இவையெல்லாம் கொஞ்சம் ஓவர் எக்ஸாக்கிரேஷன்தான். ஆனால் வேறு வழியில்லை.

ஆசிரியர் இப்படிக் கேள்வி கேட்டதைப் போல, மாணவர்கள் பாடம் சம்பந்தமாகச் சுவாரசியமாகக் கேள்வி கேட்பதை அனுமதிக்க வேண்டும். சிறந்த கேள்விகளுக்குப் பரிசு கொடுக்கும் ஒரு புதிய முறையைக் கொண்டு வரலாம். வழக்கமாகப் பதில் சொல்பவருக்குத்தானே பரிசு. இப்படி மாற்றிச் செய்வது அவர்களது சிந்தனையைத் தூண்டிப் பாடத்தைக் கவனிக்கச் செய்யும்.

ஆசிரியர்களுக்குப் பதில் தெரியாத கேள்விகளை மாணவர்கள் கேட்கக் கூடும். பதற்றம் அடைய வேண்டாம். கூகுள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் என்று அவர்களைக் கொண்டே விடையைத் தேடச் சொல்லலாம். அவர்கள்தான் செல்போன் பயன்பாட்டில் கில்லாடிகளாயிற்றே. ஆசீரியரை விட விரைவாகப் பதிலைக் கொண்டு வருவார்கள். பிறகு அந்தப் பதில் எந்த அளவுக்குச் சரியானது என்பதை வகுப்பறையில் விவாதிக்கலாம். அதில் ஆசிரியர்கள் கில்லாடிகளாயிற்றே.

சில நேரங்களில் மாணவர்கள் தவறான கேள்விகளைக் கேட்கக் கூடும். தவறான பதில்களைச் சொல்லக் கூடும். அவற்றைத் தவறென்று முத்திரை குத்தி விடக் கூடாது.  அத்தவறிலிருந்து சரியான கேள்வியை அல்லது பதிலை நோக்கித் திருப்ப வேண்டும்.

மாணவர்கள் விரல் தேய செல்போனை வீட்டில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதைக் கல்வி சார்ந்து பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும். கண்டதையும் கூகுளில் தேடுவதைக் கல்வி சார்ந்து தேடும் வகையில் மாற்றி அமைக்கலாம். அவர்கள் அறிவு சார்ந்து விடை தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டு, விடைகளை முதலில் வாட்ஸ்ஆப்பில் அனுப்பச் சொல்லலாம். இது ஓர் தேவையில்லாத ஆணிதான். இந்த ஆணியை அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இப்படி படிப்படியாக அவர்களை மடைமாற்றி பாட ஆர்வம் கொண்டவராக மாற்றி விடும் போது அவர்கள் நிறைய கேள்வி கேட்கவும், சிந்திக்கவும், பாடம் தொடர்பான கவனத்திலும் வந்து விடுவார்கள். அதன் பிறகு பாடத்தைக் கவனிக்க அவர்களுக்கு நேரம் போதாது.

ஆக மொத்தத்தில் வகுப்பறை என்பது அமைதியாக இருக்க வேண்டிய மியூசியம் அல்ல, அது சத்தமும், விவாதமும், தவறுகளும் நடக்க வேண்டிய, கேள்விகள் கேட்டுப் பதில்கள் தேட வேண்டிய  ஓர் ஒர்க் ஷாப்.

ஆசிரியர் என்பவர் இனி டெக்ஸ்ட் புக்கின் டேட்டா பேங்க் அல்ல. அவர் மாணவர்களின் செயின் ரியாக்சனைக் கல்வியை நோக்கி தூண்டி விட வேண்டிய கிரியா ஊக்கி.  அதற்கேற்ப ஆசிரியர் ஒரு படி இறங்கினால், மாணவர்கள் ஆசிரியருக்காக நூறு படிகள் ஏறி வருவார்கள்.

*****

Thursday, 26 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.02.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.02.2026

இன்று தேசிய புரத தினம்.

1) தேர்தல் நடைமுறைகளில் எவ்வித பாரபட்சமும் காட்டப்பட மாட்டாது, விதிமுறை மீறல்கள் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2) இஸ்ரேல் நாட்டின் மிக உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

3) இந்தியா இஸ்ரேல் இடையே 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

4) கனடா பிரதமர் மார்க் கார்னி அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

5) ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) இன்று உலக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினம்.

2) இன்று மராத்தி மொழி தினம்.

3) பிரபல ஹாலிவுட் நடிகையான எலிசபெத் டெய்லர் 1932 இல் பிறந்த தினம் இன்று.

Education & GK News

Today is National Protein Day.

1) The Election Commission of India has said that no discrimination will be shown in the electoral process and violations of the rules will not be tolerated.

2) Prime Minister Narendra Modi has been awarded the highest award of the country of Israel.

3) 16 MoUs have been signed between India and Israel.

4) Canadian Prime Minister Mark Carney is visiting India today on an official visit.

5) India has won a big victory in the T20 cricket match against Zimbabwe.

Today in history…

1) Today is World NGO Day.

2) Today is Marathi Language Day.

3) Today is the birthday of famous Hollywood actress Elizabeth Taylor in 1932.

Wednesday, 25 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.02.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.02.2026

1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 101.

2) ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

3) 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது.

4) பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக இஸ்ரேலின் டெல் அவிவ் சென்றடைந்தார்.

5) நாளை மறுதினம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளார்.

6) இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று தமிழகம் வருகிறார்.

வரலாற்றில் இன்று…

1) 1991 இல் சர் டிம் பெர்னர்ஸ்-லீ உலகின் முதல் வெப் பிரவுசரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்திய தினம் இன்று.

2) 1935 இல் ராபர்ட் வாட்சன்-வாட் வானொலி அலைகளைப் பயன்படுத்தி விமானங்களைக் கண்டறியும் ரேடார் கருவியின் செயல்பாட்டை முதல்முறையாகச் செய்து காட்டிய தினம் இன்று.

3) 1802 இல் விக்டர் ஹியூகோ பிறந்த தினம் இன்று. இவர் எழுதிய Les Misérables மற்றும் The Hunchback of Notre-Dame ஆகிய நாவல்கள் உலகப் புகழ் பெற்றவை.





Education & GK News

1) Senior leader of the Communist Party of India, R. Nallakannu, passed away due to old age and ill health. He was 101 years old.

2) The passing score of the Teacher Eligibility Test has been reduced from 50 percent to 40 percent for the differently-abled.

3) The central government is soon to launch a cervical cancer vaccination program for girls under the age of 14.

4) Prime Minister Narendra Modi reached Tel Aviv, Israel on an official visit.

5) Prime Minister Narendra Modi is scheduled to visit Chennai the day after tomorrow.

6) Chief Election Commissioner of India, Gyanesh Kumar, is coming to Tamil Nadu today.

Today in history…

1) Today is the day when Sir Tim Berners-Lee introduced the world's first web browser to the public in 1991.

2) Today is the day when Robert Watson-Watt first demonstrated the operation of a radar device that detects aircraft using radio waves in 1935.

3) Today is Victor Hugo's birthday in 1802. His novels Les Misérables and The Hunchback of Notre-Dame are world famous.

Tuesday, 24 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.02.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.02.2026

1) இஸ்ரோ (ISRO) நடத்தும் இளம் விஞ்ஞானி திட்டத்திற்கான (யுவிகா) விண்ணப்பித்தல் நடைமுறைகள் பிப்ரவரி 27 முதல் தொடங்கவுள்ளன.

2) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த 2 வார கால உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் மே 11 முதல் மே 22 வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பிப்ரவரி 27 முதல் தொடங்குகின்றன.

3) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆசிரியர்களுக்கான Teacher App 2.0 என்ற AI தொழில்நுட்ப செயலியை அறிமுகப்படுத்தினார். இது NEP 2020 கொள்கையின் கீழ் பாடத்திட்டங்களை எளிமையாக விளக்கும்.

4) கேரளா மாநிலத்தின் பெயரைக் கேரளம் என மாற்றுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இனி கேரளா கேரளம் என அழைக்கப்படும்.

5) இந்தியாவைச் சேர்ந்த Sarvam AI நிறுவனம், இந்திய மொழிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய AI மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

6) வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் வெப்ப அலை வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இயல்பான வெப்பநிலை 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.

7) நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் மர்மமான சிலந்தி வலை போன்ற அமைப்புகளைப் படம்பிடித்துள்ளது. இது அங்கு ஒருகாலத்தில் நீர் இருந்ததற்கான மற்றும் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) 2012 இல் போலியோ இல்லாத நாடு என இந்தியாவை உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்த நாள் இன்று.

2) 1964 இல் முகமது அலி முதல்முறையாக உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற நாள் இன்று.

3) 2001 இல் மாபெரும் கிரிக்கெட் வீரர் சர் டான் பிராட்மேன் ஆஸ்திரேலியாவில் மறைந்த தினம் இன்று.


Education & GK News

1) The application process for ISRO's Young Scientist Programme (YUVIKA) will begin from February 27.

2) The two week boarding and lodging camp for class 9 students of YUVIKA will be held from May 11 to May 22. Online applications for this will begin from February 27.

3) Union Education Minister Dharmendra Pradhan launched the Teacher App 2.0, an AI technology app for teachers. It will explain the syllabus under the NEP 2020 policy in a simple manner.

4) The central government has given its approval to change the name of the state of Kerala to Keralam. From now on, Kerala will be called Keralam.

5) India-based Sarvam AI has launched the largest AI models specially developed for Indian languages.

6) The Meteorological Department has said that a heat wave is likely to hit North and West India. Due to this, the temperature may increase by 5 to 8 degrees Celsius.

7) NASA's Curiosity rover has captured images of mysterious spider web-like structures on Mars, reaffirming the possibility that there was once water and life there.

Today in history…

1) The World Health Organization (WHO) declared India polio-free in 2012.

2) Muhammad Ali won the world heavyweight championship for the first time in 1964.

3) Cricket legend Sir Don Bradman passed away in Australia in 2001.

Monday, 23 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.02.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.02.2026

1) தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலின் படி தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

2) வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகளின் போது சுமார் 70 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

3) இந்திய உள்துறை அமைச்சகம் நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையான 'பிரகார்' (PRAHAAR) என்பதை வெளியிட்டுள்ளது.

4) அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிப்பதை ஒழுங்குபடுத்துமாறு உச்சநீதி மன்றம் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

5) ஈரானில் நிலவி வரும் போர் பதற்றச் சூழல் காரணமாக அங்கிருக்கும் இந்தியர்களை உடனடியாக நாடு திரும்புமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

வரலாற்றில் இன்று…

இன்று மத்திய கலால் வரி தினம்.

1) 1948 இல் தமிழகத்தின் மேனாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா பிறந்த தினம் இன்று.

2) 1955 இல் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம் இன்று.

3) 1582 இல் கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட தினம் இன்று.

4) 2022 இல் ரஷ்ய உக்ரைன் போர் தொடங்கிய தினம் இன்று.

Education & GK News

1) The final electoral roll of Tamil Nadu has been released. According to this list, there are a total of 5.67 crore voters in Tamil Nadu.

2) The Election Commission has said that about 70 lakh names have been deleted during the special voter verification exercise.

3) The Indian Home Ministry has released the country's first anti-terrorism policy 'PRAHAAR'.

4) The Supreme Court has directed the Election Commission to regulate the announcement of freebies as election promises by political parties.

5) The Indian government has asked Indians in Iran to return home immediately due to the war-torn situation.

Today in history…

Today is Central Excise Tax Day.

1) Today is the birthday of J. Jayalalithaa, the former Chief Minister of Tamil Nadu in 1948.

2) Today is the birthday of Steve Jobs, who founded Apple in 1955.

3) Today is the day the Gregorian calendar was introduced in 1582.

4) Today is the day the Russian-Ukrainian war began in 2022.

Sunday, 22 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.02.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.02.2026

1) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

2) தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 48,534 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3) பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் எண்ம கைது, நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

4) அயல்நாடுகள் மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடி வரி விதிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

5) அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சு வார்த்தை ஜெனிவாவில் நடைபெற உள்ளது.

வரலாற்றில் இன்று…

1) இன்று உலகப் புரிதல் மற்றும் அமைதி தினம்.

2) 2010 இல் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த நாள் இன்று.

3) 2009 இல் வாட்ஸ் ஆப் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட தினம் இன்று.

Education & GK News

1) Science practical exams for class 10 students begin today.

2) In the Tamil Nadu interim budget, Rs 48,534 crore has been allocated for the school education department.

3) Prime Minister Narendra Modi has asked the people to be alert about the digital arrests and financial scams in the Mann Ki baat program.

4) The Supreme Court of the united states has canceled US President Donald Trump's aggressive tax imposition on foreign countries.

5) Peace talks between the US and Iran are to be held in Geneva.

Today in history…

1) Today is the International Day of Understanding and Peace.

2) Today is the day Sachin Tendulkar scored a record double century against South Africa in an ODI in 2010.

3) Today is the day WhatsApp was launched in California in 2009.

Saturday, 21 February 2026

ரெட்ரோ என்றால் என்ன?

ரெட்ரோ என்றால் என்ன?

மெட்ரோ தெரியும். அதென்ன ரெட்ரோ என்கிறீர்களா?

சூர்யாவின் ரெட்ரோ படம் பார்த்த பிறகும் இப்படி ஒரு கேள்வியா என்றால், ஆம், இது தெரிந்து கொள்ள வேண்டிய மேட்டர்தான்.

காலத்தில் பின்னோக்கி ஒரு குட்டிக்கரணம் போடுவதுதான் ரெட்ரோ. அதைக் குழந்தைத்தனமாகப் போடாமல், கொஞ்சம் ஸ்டைலாகப் போட வேண்டும்.

உங்களுக்குப் பெல்பாட்டம் பேண்ட் பிடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதைப் போட்டுக் கொண்டு ஸ்டைலாக நடக்கிறீர்கள். உங்களை இப்போது நீங்கள் அவுட் ஆப் பேஷனாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நீங்கள்தான் ரெட்ரோ.

உங்களுக்கு ராமராஜன் கலர் காம்பினேஷன் டிரெஸ் பிடித்திருக்கிறது. அதைப் போட்டுக் கொண்டு ஒரு ரேம்ப் வாக் பண்ணுகிறீர்கள். இப்போதும் உங்களை அவுட் ஆப் ஆர்டராக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் ரெட்ரோவாகி விட்டீர்கள்.

யூடியூப், இன்ஸ்டா, ஓடிடி என்று படம் பார்க்கும் முறைகளே மாறிய பின்னும் நீங்கள் பழைய சாலிடர் பிளாக் அன்ட் ஒயிட்டில் இன்னும் தூர்தர்ஷனை ஆன்டெனாவைத் திருப்பி வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தால் நீங்கள் அவுட் ஆப் சிலபஸ் இல்லை. நீங்களும்தான் ரெட்ரோதான்.

இப்படியாகப் பழைய டிவிஎஸ் பிப்டியை இன்றும் புதுமை குழையாமல் ரீ டிசைன் பண்ணி ஓட்டிக் கொண்டிருப்பது, கிராமபோனில் ரீக்கிரியேட் பண்ணிப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது, சித் ஸ்ரீராமே வந்த பிறகும் பிபி ஸ்ரீனிவாஸை ஜெராக்ஸ் எடுத்துப் பாடிக் கொண்டிருப்பது, பாட்டன் காலத்து இரும்பு சீப்பை வைத்து தலைவாரிக் கொண்டு நிற்பது, மண்சட்டியில் மீன் குழம்பு வைத்துச் சாப்பிட்டு ஸ்டேட்டஸ் போடுவது எல்லாம் ரெட்ரோ வகையறாதான். இவர்களை எல்லாம் மண்டை கழண்ட கேஸ்கள் என்று கூறி விடக் கூடாது, ரெட்ரோ என்றுதான் கூற வேண்டும்.

லத்தீன் மொழியில் Retro என்றால் பின்னோக்கி என்று அர்த்தம். இப்போது அதெல்லாம் அவுட் டேட்டேட் என்று தூக்கிப் போட்ட விசயங்களை மீண்டும் ஸ்டைலாக மாற்றிக் கொள்வதுதான் ரெட்ரோ.

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போல, நேற்றைய பழைய சோறு இன்றைய ஐஸ் பிரியாணி என்பது போல, அன்றைய பேஷன் இன்றைய டிரெண்டிங் ஆவதுதான் ரெட்ரோ.

மொத்தத்தில் நீங்கள் ஐதர் காலத்து மெட்டீரியல்களைப் பயன்படுத்திக் கொண்டு, நான் ஐதர் காலத்து மெட்டீரியல் இல்லை அலப்பறை பண்ணுவதுதான் ரெட்ரோ.

இப்போது ரஜினியும் கமலும் இணையும் புதுப்படத்தையே ரெட்ரோ டெக்னிக்கலில்தான் ப்ரோமேஷன் பண்ணும் போது, நீங்கள் ரெட்ரோவாக இருப்பதில் கவலை ஒன்றுமில்லை ப்ரோ.

விகடபாரதி பிளாக்கில் இன்றைய சம்பவங்களுக்குப் பழைய சங்கப் பாடல்களை உதாரணம் காட்டுவது கூட ஒரு ரெட்ரோ டெக்னிக்தான். வேண்டுமானால் அந்தப் ப்ளாக்கிற்கு ஒரு ரவுண்ட் அடித்துப் பாருங்கள். இதுதான் அதற்கான சொடுக்கி,

 https://vikatabharathi.blogspot.com/

*****

ட்ரோக் பாராசூட் என்றால் என்ன?

ட்ரோக் பாராசூட் என்றால் என்ன?

ககன்யான் என்பது விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் இஸ்ரோவின் சூப்பர் புராஜெக்ட்.

ககன்யான் விண்கலத்திற்கான மெல்ல தரையிறக்கும் பாரசூட் சிஸ்டம்தான் இந்த ட்ரோக் பாராசூட்  (Drogue Parachute) என்பது.

அண்மையில் இதற்கான சோதனையில் வெற்றிக்கனியைப் பறித்துள்ளன இஸ்ரோவும், டிஆர்டிஓஉம். அமெரிக்கா, ரஷ்யா போன்ற விண்வெளி சூப்பர் ஸ்டார் நாடுகள் இதில் கில்லாடி. இருந்தாலும் அவர்கள் அந்த ரகசியத்தைத் தருவார்களா? நாமேதான் முட்டி மோதிக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி மூளையைக் கசக்கிப் பிழிந்து நம் விஞ்ஞானிகள் அதைக் கண்டடைந்துவிட்டார்கள்.

பாராசூட் தெரியும். அதென்ன டிரோக் பாராசூட் என்கிறீர்களா?

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது ஒரு பெரிய அல்காரிதம் என்றால், அவர்களை பத்திரமாக பூமிக்குத் திருப்புவது ஒரு சிக்கலான கன்டினியூட்டி.  விண்வெளியில் இருந்து மணிக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் வரும் ஒரு விண்கலத்தை ஒரு பட்டுத் துணியை வைத்துப் பிடிப்பது போன்றது இது.

இயற்பியல் விதிகளின்படி, புவிஈர்ப்பு விசை என்பது விண்வெளியிலிருந்து திரும்பும் விண்கலங்களுக்கு ஒரு மோசமான வில்லன். மேலிருந்து விழும் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கவில்லை என்றால், அது தரையில் மோதி டமால் ஆகிவிடும்.

இங்கேதான் இந்த ட்ரோக் பாரசூட்டுகள் கைகொடுக்கின்றன. இவை சாதாரண பாரசூட்டுகள் அல்ல, காற்றில் விரியும் போது ஒரு குறிப்பிட்ட நிலைத்தன்மையைக்  கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை.

விண்கலம் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது அதன் வேகம் மிக அதிகமாக இருக்கும். முதலில் பெரிய பாரசூட்டுகளைத் திறந்தால், அந்த வேகத்தில் அவை கிழிந்துவிடும். எனவே, முதலில் இந்தச் சிறிய, பலமான ட்ரோக் பாரசூட்டுகளைத் திறந்து வேகத்தைச் சற்றே குறைத்து, பிறகுதான் பிரதான பாரசூட்டுகள் விரிய வைக்கப்பட வேண்டும். இங்குதான் பயன்படுகிறது இந்த ட்ரோக் பாராசூட் சிஸ்டம்.

விண்கலம் விண்வெளிக்குப் போய் திரும்பி, ஒரு குறிப்பிட்ட வேகத்தில் வரும் போது ட்ரோக் பாரசூட்டுகள் சரியாக வேலை செய்து, வேகத்தைக் குறைத்து, ஊஞ்சல் ஆடுவது போல மென்மையாகத் தரையிறங்க வைக்க வேண்டும். இதில் 0.00001 சதவீத பிழையென்றாலும் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தைப் பார்ட் பார்ட்டாகத்தான் பூமியில் தேட வேண்டும்.

இந்தச் சோதனையில் மிக முக்கியமானது அந்த ட்ரோக் பாரசூட்டைச் சரியான நொடியில் தள்ளிவிடும் அந்தத் தொழில்நுட்பம்.

இதற்காகத்தான் இஸ்ரோவும் டிஆர்டிஓஉம் டிரோக் பாராசூட்டுகளை உருவாக்கியுள்ளன. அதென்ன சோதனை வெற்றி என்றால், கணினியில் போட்ட கணக்கும், களத்தில் நடக்கும் சோதனையும் நூற்றுக்கு நூறு சரியாகப் பொருந்த வேண்டும். அதுதான் சோதனை வெற்றி. அது கிட்டி விட்டது.

மொத்தத்தில் ரஜினியும் கமலும் இணைவது கோலிவுட் மேஜிக் என்றால், இந்தியர்கள் விண்வெளிக்குச் சென்று திரும்புவது இஸ்ரோவின் மேஜிக். ஆக, இதில் பாரசூட் விரிவது என்பது வெறும் துணி விரிவதல்ல, இந்தியாவின் விண்வெளி கனவு விரிவது. விக்ரம் சாராபாய் அன்று கண்ட கனவு இன்று மெல்ல நினைவாகி வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது.

*****

Thursday, 19 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.02.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.02.2026

இன்று உலக சமூக நீதி நாள்

1) அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற 448 மாணவர்கள் ஜெஇஇ மெயின் தேர்வுகளில் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

2) அரசுப் பல்கலைக்கழகங்களில் பிஎச்டி மாணவர் சேர்க்கை இனி ஒற்றைச் சாளர முறையில் நடைபெற உள்ளது.

3) 2030க்குள் 30000 இந்திய மாணவர்களைப் பிரான்சில் படிக்க வைப்பதற்கான திட்டத்தை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

4) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

5) புதுடெல்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

6) இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கான டிரோக் பாராசூட் சோதனை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

7) இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை மேம்படுத்த கூகுள் நிறுவனம் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.

வரலாற்றில் இன்று…

1) 1987 இல் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள் இன்று.

2) 1640 இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆன்ட்ரு கோகன் சென்னை கடற்கரையில் கால் பதித்த நாள் இன்று.

3) சோவியத் யூனியன் மிர் விண்வெளி நிலையத்தின் முதல் பகுதியை ஏவிய நாள் இன்று.

Education & GK News

Today is World Social Justice Day

1) 448 students from a government model school have qualified in the JEE Mains exams and achieved a record.

2) PhD admissions in government universities will now be held through a single window system.

3) French President Emmanuel Macron has announced a plan to send 30,000 Indian students to study in France by 2030.

4) The Tamil Nadu Legislative Assembly session will conclude today.

5) Prime Minister Narendra Modi and French President Emmanuel Macron will address the Artificial Intelligence Conference being held in New Delhi today.

6) ISRO's Gaganyaan project's trike parachute test was successfully tested.

7) Google is to invest $15 billion to improve the artificial intelligence infrastructure in India.

Today in history…

1) Today is the day the states of Arunachal Pradesh and Mizoram were formed in 1987.

2) Today is the day Francis Day and Andrew Cogan set foot on the shores of Chennai in 1640.

3) Today is the day the Soviet Union launched the first part of the Mir space station.

Wednesday, 18 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.02.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.02.2026

இன்று தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதரின் பிறந்த தினம்

1) பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையவழிப் பதிவு நேற்று தொடங்கியது.

2) இவ்வாண்டு 2358 அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கும், 17 மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் தேர்வாகியுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

3) மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் குழுவின் அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

4) மார்ச் 1 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.

5) வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

6) பிப்ரவரி 21 அன்று தென் மற்றும் டெல்டா உள்ளிட்ட 10 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) 1630 இல் மராட்டிய அரசர் சத்திரபதி சிவாஜி பிறந்த தினம் இன்று.

2) 1473 இல்  நிக்கோலஸ் கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று. இவர் சூரிய மையக் கோட்பாட்டைத் தந்தவர்.

3) 1915 இல் காந்தியின் அரசியல் குருவான கோபால கிருஷ்ண கோகலே மறைந்த தினம் இன்று.






Education & GK News

Today is the birthday of Tamil grandfather U.V. Swaminathan

1) Online registration for applying for the Teacher Eligibility Test for working teachers began yesterday.

2) The Tamil Nadu government has announced that this year 2358 government school students have been selected for higher educational institutions like IITs and 17 students have been selected for foreign universities.

3) The report of the Kurian Joseph Committee, which was set up to study the relations between the central and state governments, was tabled in the Tamil Nadu Legislative Assembly.

4) Prime Minister Narendra Modi is visiting Tamil Nadu on March 1 and 6.

5) Prime Minister Narendra Modi has invited the new Prime Minister of Bangladesh, Tariq Rahman, to visit India.

6) A yellow alert has been issued for heavy rains in 10 Tamil Nadu districts, including the South and Delta, on February 21.

Today in history…

1) Today is the birthday of the Maratha king Chhatrapati Shivaji in 1630.

2) Today is the birthday of Nicolaus Copernicus, who proposed the heliocentric theory born in 1473.

3) Today is the death anniversary of Gopal Krishna Gokhale, Gandhi's political guru, in 1915.