Saturday, 21 February 2026

ட்ரோக் பாராசூட் என்றால் என்ன?

ட்ரோக் பாராசூட் என்றால் என்ன?

ககன்யான் என்பது விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் இஸ்ரோவின் சூப்பர் புராஜெக்ட்.

ககன்யான் விண்கலத்திற்கான மெல்ல தரையிறக்கும் பாரசூட் சிஸ்டம்தான் இந்த ட்ரோக் பாராசூட்  (Drogue Parachute) என்பது.

அண்மையில் இதற்கான சோதனையில் வெற்றிக்கனியைப் பறித்துள்ளன இஸ்ரோவும், டிஆர்டிஓஉம். அமெரிக்கா, ரஷ்யா போன்ற விண்வெளி சூப்பர் ஸ்டார் நாடுகள் இதில் கில்லாடி. இருந்தாலும் அவர்கள் அந்த ரகசியத்தைத் தருவார்களா? நாமேதான் முட்டி மோதிக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி மூளையைக் கசக்கிப் பிழிந்து நம் விஞ்ஞானிகள் அதைக் கண்டடைந்துவிட்டார்கள்.

பாராசூட் தெரியும். அதென்ன டிரோக் பாராசூட் என்கிறீர்களா?

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது ஒரு பெரிய அல்காரிதம் என்றால், அவர்களை பத்திரமாக பூமிக்குத் திருப்புவது ஒரு சிக்கலான கன்டினியூட்டி.  விண்வெளியில் இருந்து மணிக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் வரும் ஒரு விண்கலத்தை ஒரு பட்டுத் துணியை வைத்துப் பிடிப்பது போன்றது இது.

இயற்பியல் விதிகளின்படி, புவிஈர்ப்பு விசை என்பது விண்வெளியிலிருந்து திரும்பும் விண்கலங்களுக்கு ஒரு மோசமான வில்லன். மேலிருந்து விழும் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கவில்லை என்றால், அது தரையில் மோதி டமால் ஆகிவிடும்.

இங்கேதான் இந்த ட்ரோக் பாரசூட்டுகள் கைகொடுக்கின்றன. இவை சாதாரண பாரசூட்டுகள் அல்ல, காற்றில் விரியும் போது ஒரு குறிப்பிட்ட நிலைத்தன்மையைக்  கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை.

விண்கலம் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது அதன் வேகம் மிக அதிகமாக இருக்கும். முதலில் பெரிய பாரசூட்டுகளைத் திறந்தால், அந்த வேகத்தில் அவை கிழிந்துவிடும். எனவே, முதலில் இந்தச் சிறிய, பலமான ட்ரோக் பாரசூட்டுகளைத் திறந்து வேகத்தைச் சற்றே குறைத்து, பிறகுதான் பிரதான பாரசூட்டுகள் விரிய வைக்கப்பட வேண்டும். இங்குதான் பயன்படுகிறது இந்த ட்ரோக் பாராசூட் சிஸ்டம்.

விண்கலம் விண்வெளிக்குப் போய் திரும்பி, ஒரு குறிப்பிட்ட வேகத்தில் வரும் போது ட்ரோக் பாரசூட்டுகள் சரியாக வேலை செய்து, வேகத்தைக் குறைத்து, ஊஞ்சல் ஆடுவது போல மென்மையாகத் தரையிறங்க வைக்க வேண்டும். இதில் 0.00001 சதவீத பிழையென்றாலும் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தைப் பார்ட் பார்ட்டாகத்தான் பூமியில் தேட வேண்டும்.

இந்தச் சோதனையில் மிக முக்கியமானது அந்த ட்ரோக் பாரசூட்டைச் சரியான நொடியில் தள்ளிவிடும் அந்தத் தொழில்நுட்பம்.

இதற்காகத்தான் இஸ்ரோவும் டிஆர்டிஓஉம் டிரோக் பாராசூட்டுகளை உருவாக்கியுள்ளன. அதென்ன சோதனை வெற்றி என்றால், கணினியில் போட்ட கணக்கும், களத்தில் நடக்கும் சோதனையும் நூற்றுக்கு நூறு சரியாகப் பொருந்த வேண்டும். அதுதான் சோதனை வெற்றி. அது கிட்டி விட்டது.

மொத்தத்தில் ரஜினியும் கமலும் இணைவது கோலிவுட் மேஜிக் என்றால், இந்தியர்கள் விண்வெளிக்குச் சென்று திரும்புவது இஸ்ரோவின் மேஜிக். ஆக, இதில் பாரசூட் விரிவது என்பது வெறும் துணி விரிவதல்ல, இந்தியாவின் விண்வெளி கனவு விரிவது. விக்ரம் சாராபாய் அன்று கண்ட கனவு இன்று மெல்ல நினைவாகி வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது.

*****

No comments:

Post a Comment