Friday, 27 February 2026

ஆசிரியர் 2.0

ஆசிரியர் 2.0

ஆசிரியர் வகுப்புக்குள் நுழைகிறார். கையில் புத்தகம், சாக்பீஸ். எதிரே நாற்பது தலைகள். ஆனால், ஒரு தலை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. எல்லாம் குனிந்தே இருக்கும் தலைகள். மொபைல் பார்த்து பார்த்து அப்படி ஆகிவிட்டன. எல்லாம் வீட்டை விட்டு வந்து விட்டாலும் அங்கிருக்கும் டிவி, மொபைல் திரை நினைவுகளிலியே இன்னும் மூழ்கி இருக்கின்றன.

இன்றைய மாணவர்களில் பெரும்பாலானோர் டிஜிட்டர் அடிமைகள் அல்லது டிஜிட்டல் நோயாளிகள். இது போன்றவர்களுக்கு ஆசிரியர் நடத்தும் பாடம் ஸ்லோ மோஷன் படம் பார்ப்பது போலத்தான் இருக்கும்.

யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 30 வினாடிகளில் உலகத்தைப் பார்த்துப் பழகியவ அவர்களால் ஆசிரியரின் தொண்டைத் தண்ணீர் வற்றுவதைப் புரிந்து கொள்ள முடியாது.

ஆசிரியரை விட டிஜிட்டல் அல்காரிதம்கள் அவர்களின் கவனித்தலை நன்கு புரிந்து வைத்திருக்கின்றன. ஆசிரியர்கள் அவற்றுக்கு ஈடு கொடுத்து மாறா விட்டால் மாணவர்களின் கவனத்தைத் திசை திருப்ப முடியாது. என்ன செய்யலாம் இதற்கு?

ஆசிரியர்கள் இனியும் விரிவுரையாளர்களாக இருப்பது வேலைக்கு ஆகாது. அவர்கள் சுவாரசியர்களாக மாற வேண்டும். எப்படி மாறலாம்?

ஓர் ஆச்சரியமூட்டும், அதிர்ச்சியூட்டும் கேள்வியோடு வகுப்பறைக்குள் நுழையலாம். உதாரணத்துக்குச் செவ்வாயில் விவசாயம் செய்ய முடியுமா? என்று ஆரம்பிக்கலாம்.  தாவரங்களைப் போல மனிதர்களால் ஏன் உணவு தயாரிக்க முடியவில்லை என்று கேட்கலாம். இன்று டைனோசர்கள் நம்மோடு வாழ்ந்தால் எப்படி இருக்கும்? என்று யோசிக்க வைக்கலாம்.

தமிழ்ப் பாடம் என்றால் திருவள்ளுவர் நம் முன் வந்து நின்றால் எப்படி இருக்கும்? குமரி முனையில் தன்னுடைய சிலையைப் பார்த்து அவர் என்ன சொல்வார்? இப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்கலாம். இது மாணவர்களை இழுத்துப் பிடிக்கும். அவர்களுக்குத் தோன்றும் சுவாரசியமான பதில்களைச் சொல்ல அனுமதிக்க வேண்டும். இவையெல்லாம் கொஞ்சம் ஓவர் எக்ஸாக்கிரேஷன்தான். ஆனால் வேறு வழியில்லை.

ஆசிரியர் இப்படிக் கேள்வி கேட்டதைப் போல, மாணவர்கள் பாடம் சம்பந்தமாகச் சுவாரசியமாகக் கேள்வி கேட்பதை அனுமதிக்க வேண்டும். சிறந்த கேள்விகளுக்குப் பரிசு கொடுக்கும் ஒரு புதிய முறையைக் கொண்டு வரலாம். வழக்கமாகப் பதில் சொல்பவருக்குத்தானே பரிசு. இப்படி மாற்றிச் செய்வது அவர்களது சிந்தனையைத் தூண்டிப் பாடத்தைக் கவனிக்கச் செய்யும்.

ஆசிரியர்களுக்குப் பதில் தெரியாத கேள்விகளை மாணவர்கள் கேட்கக் கூடும். பதற்றம் அடைய வேண்டாம். கூகுள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் என்று அவர்களைக் கொண்டே விடையைத் தேடச் சொல்லலாம். அவர்கள்தான் செல்போன் பயன்பாட்டில் கில்லாடிகளாயிற்றே. ஆசீரியரை விட விரைவாகப் பதிலைக் கொண்டு வருவார்கள். பிறகு அந்தப் பதில் எந்த அளவுக்குச் சரியானது என்பதை வகுப்பறையில் விவாதிக்கலாம். அதில் ஆசிரியர்கள் கில்லாடிகளாயிற்றே.

சில நேரங்களில் மாணவர்கள் தவறான கேள்விகளைக் கேட்கக் கூடும். தவறான பதில்களைச் சொல்லக் கூடும். அவற்றைத் தவறென்று முத்திரை குத்தி விடக் கூடாது.  அத்தவறிலிருந்து சரியான கேள்வியை அல்லது பதிலை நோக்கித் திருப்ப வேண்டும்.

மாணவர்கள் விரல் தேய செல்போனை வீட்டில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதைக் கல்வி சார்ந்து பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும். கண்டதையும் கூகுளில் தேடுவதைக் கல்வி சார்ந்து தேடும் வகையில் மாற்றி அமைக்கலாம். அவர்கள் அறிவு சார்ந்து விடை தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டு, விடைகளை முதலில் வாட்ஸ்ஆப்பில் அனுப்பச் சொல்லலாம். இது ஓர் தேவையில்லாத ஆணிதான். இந்த ஆணியை அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இப்படி படிப்படியாக அவர்களை மடைமாற்றி பாட ஆர்வம் கொண்டவராக மாற்றி விடும் போது அவர்கள் நிறைய கேள்வி கேட்கவும், சிந்திக்கவும், பாடம் தொடர்பான கவனத்திலும் வந்து விடுவார்கள். அதன் பிறகு பாடத்தைக் கவனிக்க அவர்களுக்கு நேரம் போதாது.

ஆக மொத்தத்தில் வகுப்பறை என்பது அமைதியாக இருக்க வேண்டிய மியூசியம் அல்ல, அது சத்தமும், விவாதமும், தவறுகளும் நடக்க வேண்டிய, கேள்விகள் கேட்டுப் பதில்கள் தேட வேண்டிய  ஓர் ஒர்க் ஷாப்.

ஆசிரியர் என்பவர் இனி டெக்ஸ்ட் புக்கின் டேட்டா பேங்க் அல்ல. அவர் மாணவர்களின் செயின் ரியாக்சனைக் கல்வியை நோக்கி தூண்டி விட வேண்டிய கிரியா ஊக்கி.  அதற்கேற்ப ஆசிரியர் ஒரு படி இறங்கினால், மாணவர்கள் ஆசிரியருக்காக நூறு படிகள் ஏறி வருவார்கள்.

*****

No comments:

Post a Comment