Tuesday 1 October 2024

கல்வி நிதி ஒதுக்கீட்டில் பாராமுகமாகும் மாநில அரசுப் பள்ளிகள்!

கல்வி நிதி ஒதுக்கீட்டில் பாராமுகமாகும் மாநில அரசுப் பள்ளிகள்!

தமிழகத்தில் 37554 அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன.

இப்பள்ளிகளில் 53 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

இம்மாணவர்களுக்காக 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழகத்திற்குக் கடந்து ஆண்டு வழங்க வேண்டிய 249 கோடியும், இவ்வாண்டு சூன் மாதம் வழங்க வேண்டிய 573 கோடியையும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது.

இதனால் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பயிற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்போது நாம் முக்கியமானதோர் ஒப்பீட்டைக் காண வேண்டும். அது என்னவென்றால், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு? மாநில அரசுகளால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி எவ்வளவு? அந்த விகிதாச்சாரத்தைத் தெரிந்து கொண்டால் நிதி ஒதுக்கீட்டில் உள்ள பாரபட்சமும் பாராமுகமும் விளங்கும்.

1245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு 8364 கோடியும், இந்தியா முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு 37500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே பாரபட்சத்தைக் காட்டும். அதாவது ஆயிரம் சொச்சம் உள்ள கேந்திரிய பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட நான்கு மடங்கு அளவுதான் லட்சத்திற்கும் மேல் உள்ள நாடு முழுவதும் உள்ள மாநில அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இது எப்படி என்றால் ஒருவருக்கு ஒரு ரூபாயைக் கொடுத்து எடுத்துக் கொள்ளச் சொல்லும் அதே வேளையில், 100 பேருக்கும் ஒரு ரூபாயை எடுத்துக் கொள்ளச் சொல்வதைப் போன்றதாகும்.

அடுத்ததாக நாம் இன்னொரு விடயத்தைக் கவனத்திக் கொண்டு பார்க்க வேண்டும். அது என்னவென்றால், இந்தியாவில் அதிக வரிவசூல் வழங்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

இவற்றைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது தமிழகத்திற்கு வழங்கப்படும் கல்வி நிதியை மறுக்காமல் இருப்பதோடு மற்ற மாநிலங்களை விட கூடுதல் நிதியும் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்பது அறிய வரும்.

*****