Tuesday 14 April 2020

கொரோனா - கவனமாகக் கையாள வேண்டிய பொருட்கள்

கொரோனா - கவனமாகக் கையாள வேண்டிய பொருட்கள்

கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமியான கோரோனா பரவுவதைக் கண்ணால் காண முடியாத நிலையில், நாம் அன்றாடம் அதிகம் கையாள வேண்டிய பொருட்களை அதி கவனத்தோடு கையாள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது கொரோனா. அவ்வகையிலான ஐந்து வகைப் பொருட்கள் குறித்து காண்போம்.
நாம் நம் கையோடு கையாக அதிகம் கையாளும் பொருட்கள் - 3
1. கைபேசி
2. பணம்
3. சாவி

1. கைபேசி
கழிவறையை விட அதிக பாக்டீரியங்கள் நிறைந்தாக நுண்ணுயிர் வல்லுநர்களால் கூறப்படுவது நாம் கையாளும் கைபேசி. கையோடும், முகத்தோடும், நமது வீட்டின் முக்கிய இடங்களிலும் அதிகம் உறவாடும் பொருளாக இருப்பதால் கைபேசியைக் கையாளுவதில் அதிக கவனம் தேவைப்படுகிறது. அதைத் தூய்மை செய்வதற்கான நேரம் ஒதுக்கப்படுவது தற்சமயம் அவசியப்படுகிறது.
2. பணம்
பணத்தைக் கையாளாமல் நமது அன்றாட தேவைகளைச் சமாளிக்க முடியாது எனும் சூழ்நிலையில் பணத்தை கவனமாகக் கையாளுவது அவசியம் தேவைப்படுகிறது. நம் கையிலும் பையிலும் இருக்கும் பணம் பலரது கைகளிலும் புழங்குகிறது அத்துடன் நமது கைகளிலும் புழங்குகிறது என்பதால் பணத்தைக் கையாளும் ஒவ்வொரு முறையும் கைகளைச் சுத்தம் செய்வது தற்சயம் அதிகம் தேவைப்படுகிறது.
3. சாவி
வீட்டுச் சாவி, வண்டிச் சாவி, பெட்டிச் சாவி என்று பலவித சாவிகளை நாம் புழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. உலோகத்தால் ஆன சாவிகளில் வைரஸ் கிருமிகள் இரண்டு நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்பதால் சாவிகளைக் கையாண்ட பிறகு கைக்கான தூய்மை அவசியமாகிறது.
இம்மூன்றையும் தவிர நாம் நமக்குப் புறம்பாக உள்ள கைப்பிடிகளையும், பணம் எடுக்கும் இயந்திரமான ஏ.டி.எம்.மையும் அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

நம் கைக்குப் புறம்பாக அதிகம் கையாளும் பொருட்கள் - 2
1. கைப்பிடிகள்
2. பணம் எடுக்கும் இயந்திரம்

1. கைப்பிடிகள்
வீடுகள், பொது இடங்கள், அறைகள், கதவுகள், மகிழ்வுந்துகள், மாடிப்படிகள் என்று நாம் கைப்பிடிகளைப் பயன்படுத்தா இடங்கள் மிகவும் குறைவு. நம்மை அறியாமல் நாம் மட்டுமல்லாது நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் கைப்பிடிகளைப் பயன்படுத்தும் கட்டாயச் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். கைப்பிடிகள் மூலமாக நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் கைப்பிடிகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குப் பின்பு கைகளைத் தூய்மை செய்வது வேண்டப்படுவதாக அமைகிறது.
2. பணம் எடுக்கும் இயந்திரங்கள்
பணம் எடுக்கும் இயந்திரங்கள் ஒரு நாளின் அனைத்து நேரத்திலும் இயங்குகிறது. பல விதமான மனிதர்களைச் சந்திக்கிறது. அதன் தொடுதிரை, ரகசிய எண்களை அழுத்தும் பித்தான்கள் பலரது கை விரல்களைத் தொட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. ஆகவே பணம் எடுக்கும் இயந்திரங்களான ஏ.டி.எம்.களைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சூழ்நிலைக்குப் பின்பும் கைகளைத் தூய்மை செய்வது அவசியமாகிறது.
            ஆகவே கைபேசி, பணம், சாவி, கைப்பிடிகள், பணம் எடுக்கும் இயந்திரங்கள் இது போன்ற அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் பொருட்களைக் கையாளும் போதும், கையாண்ட பிறகும் போதுமான கைகளுக்கான தூய்மையை உறுதி செய்துக் கொள்வது எப்போதும் வேண்டப்படுவதாகும்.
*****

No comments:

Post a Comment