Friday 17 April 2020

ஆண்களை அதிகம் காவு வாங்குகிறதா கொரோனா?

ஆண்களை அதிகம் காவு வாங்கும் கொரோனா

கொரோனா நோய்த்தொற்றால் உலகெங்கும் பெண்களைவிட ஆண்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளது ஆய்வுகள் மற்றும் புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவருகிறது.
கொரோனா நோய்த்தொற்றால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு ஏற்கெனவே அவர்களிடம் உள்ள உடல்நலக் கோளாறுகள், புகைப் பழக்கம், மது அருந்தும் பழக்கம் உள்ளிட்டவை  காரணமாக உள்ளன.
மரபணு வேறுபாடுகளும் இதற்கு முக்கியக் காரணமாக இருப்பதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
இந்தியாவிலும் கோரோனாவால் உயிரிழப்போர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் மூவர் ஆண்களாக உள்ளனர்.
இதற்கான காரணங்களை அலசும் இடத்து பின்வரும் காரணங்கள் வெளியாகி உள்ளன.
நடத்தைக் காரணங்கள்
உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு செயல்களைப் பெரும்பாலும் ஆண்களே கடைப்பிடித்து வருகின்றனா்.
அதன் காரணமாக பெண்களைவிட ஆண்களுக்கே சில நோய்கள் அதிகமாக ஏற்படுகின்றன.
புகைப் பிடித்தல்

கொரோனா நோய்த்தொற்று நுரையீரலுக்கு அதிக அளவிலான பாதிப்பை உண்டாக்குகிறது. புகைப் பழக்கம் உள்ளவா்கள், நுரையீரல் சார்ந்த நோயினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருப்பா் அல்லது நுரையீரலின் செயல்திறன் குறைவாக இருக்கும்.
அதன் காரணமாக அவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று எளிதில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
சீனாவில் நடத்திய ஓா் ஆய்வின்படி, அங்கு கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்கள் உயிரிழக்கும் விகிதம், பெண்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக உள்ளது.
அந்நாட்டில் 52% ஆண்கள் புகைப்பழக்கம் கொண்டவா்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதே வேளையில், அந்நாட்டில் 3% பெண்கள் மட்டுமே புகைப்பழக்கத்தைக் கொண்டுள்ளனா்.
ஹாங்காங்கில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களில் 21.9% போ் உயிரிழந்தனா். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களில் 13.2% போ் உயிரிழந்தனா். 
ஒவ்வொரு நாட்டிலும் ஆண்கள் அதிக அளவில் உயிரிழந்ததற்கு புகைப்பழக்கம் முக்கியக் காரணமாக அமைகிறது.
ஆபத்தை உணா்வதில்லை
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா நோய்த்தொற்றின் ஆபத்தை ஆண்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அதன் காரணமாக, நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அவா்கள் ஈடுபடுவதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
3,000 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கழிவறைக்குச் சென்று வந்த பிறகு பாதி போ் கைகளை சோப்பின் உதவியுடன் கழுவுவது இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் ஆரோக்கியம்
அனைத்துவித நோய்களையும் எதிர்ப்பதற்கான சக்தி ஆண்களைவிட பெண்களின் உடலிலேயே அதிகமாகக் காணப்படுவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். உலகில் தற்போது 100 வயதைக் கடந்து வாழ்பவா்களில் 80% போ் பெண்களாவா். 110 வயதுக்கு மேல் வாழ்பவா்களில் 95% போ் பெண்கள் ஆவா்.
மரபணு காரணம்
நோய்களை எதிர்கொள்வதற்கு பெண்களில் காணப்படும் மரபணுக்களும் முக்கியப் பங்காற்றுவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
மூளை, நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவை முறையாகச் செயல்படுவதற்கு ‘எக்ஸ்’ குரோமோசோம்கள் உதவுகின்றன. பெண்களின் உடலில் காணப்படும் செல்களில் இரண்டு ‘எக்ஸ்’ குரோமோசோம்கள் காணப்படுகின்றன.
ஆனால், ஆண்களுக்கு ஒரேயொரு ‘எக்ஸ்’ குரோமோசோம் மட்டுமே உள்ளது. ஆண்களின் செல்களில் கூடுதலாக ஒரு ‘ஒய்’ குரோமோசோம் காணப்படுகிறது.
ஆய்வு & புள்ளிவிவர முடிவு
பெரும்பாலான நாடுகளில் மேற்கொண்ட ஆய்வு மற்றும் புள்ளி விவரங்களில், கரோனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட ஆண்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 50% முதல் 80% அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment