Friday, 3 April 2020

கபசுரக் குடிநீர் என்றால் என்னவென்று தெரியுமா?

கபசுரக் குடிநீர் என்றால் என்னவென்று தெரியுமா?

சித்த மருத்துவத்தில் யூகி முனி சித்தர் கபசுரக் குடிநீரை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
யூகி முனி சித்தர் பொதுவாக காய்ச்சலை 64 வகையாகப் பிரிக்கிறார். அதில் கபசுரக் குடிநீர் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்று கூறுகிறார்.
மேலும், காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் காய்ச்சல் வந்தபிறகு குணப்படுத்துவதற்கும் இதை பயன்படுத்தலாம் என்று வழிகாட்டுகிறார்.
1)      நிலவேம்பு
2)      கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு
3)      சுக்கு
4)      திப்பிலி
5)      இலவங்கம்
6)      ஆடாதொடை வேர்
7)      கற்பூரவள்ளி
8)      சீந்தில்
9)      கோரைக்கிழங்கு
10)  கோஷ்டம்
11)  அக்ரஹாரம்
ஆகிய 11 வகை மூலிகைகளை சம அளவில் எடுத்தோ அல்லது,

1)      சுக்கு
2)      திப்பிலி
3)      இலவங்கம்
4)      சிறுகாஞ்சேரி வேர்
5)      அக்ரகாரம்
6)      முள்ளி வேர்
7)      ஆடாதோடை இலை
8)      கற்பூரவள்ளி இலை
9)      கோஷ்டம்
10)  சீந்தில் தண்டு
11)  சிறுதேக்கு
12)  நிலவேம்பு சமூலம்
13)  வட்ட திருப்பி வேர்
14)  கோரைக்கிழங்கு
15)  கடுக்காய்த்தோல்
ஆகிய 15 வகை மூலிகைப் பொருட்களைக் கொண்டோ கபசுரக் குடிநீர் பொடியானது தயாரிக்கப்படுகிறது.

இந்தக் கபசுரக் குடிநீர் மருந்துப் பொருள் பொடியாக அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
பொதுவாக பன்றிக்காய்ச்சலுக்கான மருந்தாக கபசுர குடிநீர் சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் கண்டவர்கள் இம்மருந்து பொருளில் நான்கு தேக்கரண்டி தூளை 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, 60 மில்லி லிட்டர் ஆக்கி கிடைக்கும் கஷாயத்தை வடிகட்டி வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாள்கள் குடிக்க வேண்டும் என்கிறது சித்த மருத்துவம்.
சாதாரண காய்ச்சலுடன் தலைவலி, இருமல், ஜலதோஷம், உடல் சோர்வு, வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். தொண்டை கரகரப்புடன் 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் அல்லது இருமல் ஏற்படுவதும் பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள். இதற்கு உரிய மருந்தாகவே கபசுர குடிநீரைப் பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம்.
மேலும், கபசுர குடிநீரானது மூக்கு, தொண்டை, சுவாசப்பாதையில் வரும் தொற்றுகளை நீக்கும் வல்லமை கொண்டதாகவும், குறிப்பாக மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்க உதவுவதாகவும் சித்த மருத்துவர்களால் கூறப்படுகிறது.
தற்போது பரவி வரும் கொரோனோ நோய்த் தொற்றால் கபசுரக் குடிநீர் குறித்து அதிகம் பேசப்படுகிறது. கபசுரக் குடிநீர் கொரோனோ நோய்த் தொற்றுக்கான முழுமையான மருந்தாகுமா என்பதற்கான ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், கபசுரக் குடிநீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று சித்த மருத்துவர்கள் உறுதிபட தெரிவிக்கிறார்கள்.
பல்வேறு வகையான மூலிகை பொருள்களை கலந்து தயாரிக்கும் கபசுரக் குடிநீரை வீட்டில் தயாரிப்பது கடினமானது. அத்தோடு அதற்கான தயாரிப்பு முறையில் கலக்கும் மூலிகை மருந்துப் பொருட்களைச் சுத்தம் செய்வதும் கடினமானது. ஆதலால் இதை சித்தமருந்து கடைகளில்கிடைக்கும் கபசுரப் பொடியாக வாங்கி பயன்படுத்துவதே சிறந்தது.
பொதுவாக நோய் எதிர்ப்பாற்றலுக்கும், வைரஸ் காய்ச்சல்களுக்கும் ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டம்ளராக ஆகும் வரை சுண்ட காய்ச்சி வைத்து இறக்கி, வடிகட்டி கால் தம்ளர் அளவுக்கு சித்த மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் குடிப்பதற்கு இதனைத் தற்போதைய சூழலில் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு முறையும் அப்போது கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும். ஒரு முறை வடித்த கபசுரக் குடிநீரை மூன்று மணி நேரம் கடந்து பயன்படுத்துவதால் பலன் ஏற்படாது என்பது கவனிக்கத்தக்கது.
மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது இந்த நீரை வடிகட்டி அதனுடன் இனிப்புக்கு சுத்தமான தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து கொடுக்கலாம்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மருத்துவரை கலந்தாலோசித்து கொடுப்பது நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கபசுரக் குடிநீரை தவிர்ப்பது நல்லது.
தற்போதைய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வெளியே அதிகம் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கும்,
Ø சுக்கு
Ø ஆடாதோடை
Ø கற்பூரவல்லி
Ø நிலவேம்பு
Ø இலவங்கம்
Ø திப்பிலி
இவையுடனோ அல்லது வீட்டில் இருக்கும் பொருட்களை அனுசரித்து வேறு கபசுரக் குடிநீர் செய்ய பயன்படும் மூலிகை பொருள்களில் எது எளிதாக கிடைக்கிறதோ அதை சிறிதளவு எடுத்து சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கபசுரக் குடிநீருக்கு ஈடாக மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் குடிக்கலாம்.
இக்கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வல்லமை வாய்ந்ததுடன், வைரஸ் தொடர்பான காய்ச்சலுக்கான முன்தடுப்பு மருந்தாகவும் செயல்படும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றபடி இக்கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான முழுமையான மருந்தாகுமா என்பதற்கான  நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தற்போதைய நிலை வரை எதிர்பார்க்கப்படும் நிலையில்தான் உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். மேலும் எந்த ஒரு மருத்துவப் பொருளைப் பயன்படுத்தும் முன் உரிய மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதும், மருத்துவர்களின் பரிந்துரையின் படி மருந்தை எடுத்துக் கொள்வதும் வேண்டப்படுவதாகும்.


2 comments:

  1. நன்றி.. நல்ல தகவல்

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் ஐயா!

    ReplyDelete