Thursday, 2 April 2020

அமெரிக்காவின் அதிக கொரோனா உயிரிழப்புகளுக்கான காரணம்தான் என்ன?

அமெரிக்காவின் அதிக கொரோனா உயிரிழப்புகளுக்கான காரணம்தான் என்ன?

அமெரிக்காவில் அதிக அளவு கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதற்கும், உலகளவில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோய்த் தோற்றுக்கு அமெரிக்காக ஆளாகி வருவதற்குமான காரணங்களை ஊடகங்கள் தற்போது அலசி ஆராய்ந்து தெரிவித்து வருகின்றன. அதற்கான காரணங்களாகக் கூறப்படுவனவாவன,
Ø ஜனவரி 20, 2020 இல் சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அதையடுத்து, அமெரிக்கா – சீனா இடையிலான முக்கியமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
Ø தொடர்ந்து பெயரளவில் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்தது அமெரிக்கா. அதைத் தாண்டி, கொரோனா ஏற்படுத்தப்போகும் பேரழிவு தொடர்பான முன்னெச்சரிக்கை உணர்வு அமெரிக்க அரசிடம் இருக்கவில்லை என்றே கூறுகின்றன அமெரிக்க ஊடகங்கள்.
Ø கோவிட் -19 பாதிப்பு குறித்த போதிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்ப, ஆரம்ப நாட்களில் அமெரிக்க அரசு அதிகாரிகள் தவறிவிட்டார்கள். இத்தனைக்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் குறித்த தகவல்களை ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே அமெரிக்க அரசுக்கு அமெரிக்க உளவுத்துறை அளித்துவிட்டது. ஆனால், நிலைமை முற்றிலுமாகக் கட்டுக்குள் இருப்பதாகவும், சீனாவிலிருந்து வந்த ஒருவருக்குத்தான் கொரோனா இருப்பதாகவும் பேசி வந்தது அமெரிக்க அரசு.
Ø தற்போதைய அமெரிக்க அதிபர் ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்றால், அதில் இறுதிவரை பிடிவாதம் காட்டுவார் என்பது உலகறிந்த விசயம். குறிப்பாக கொரோனா விஷயத்தில் சுகாதாரத் துறை நிபுணர்களின் எச்சரிக்கையை தற்போதைய அமெரிக்க அதிபரின் தலைமையிலான நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. இதன் விளைவை அமெரிக்க மக்கள் இன்று எதிர்கொள்கிறார்கள்.
Ø கோவிட் – 19 பாதிப்பால் கடுமையான சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர்கள் அவசியம் என்தை உணர்ந்து மார்ச் 15 நிலவரப்படி, கையிருப்பில் வெறும் 12,700 வென்ட்டிலேட்டர்கள் மட்டுமே இருப்பதாக அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், போதுமான வென்ட்டிலேட்டர்கள் இருப்பதாக அமெரிக்க துணை அதிபர்  அப்போது சமாதானம் சொன்னார்.

Ø பல மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் கதறிக்கொண்டிருந்த நிலையில், உபரியாக இருக்கும் மருத்துவ உபகரணங்களை இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி உதவ முடியும் என்று பேசிக்கொண்டிருந்தார் அமெரிக்க அதிபர்.
Ø நிலைமை இப்படி இருக்கையில் அமெரிக்காவில் கொரோனா எட்டிப்பார்த்த ஆரம்பக் கட்டத்தில், வென்ட்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை டன் கணக்கில் சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்திருக்கும் விஷயம் தற்போது வெளியாகி வருகிறது.
Ø மார்ச் 28, 2020 லிருந்து தற்போதைய நாள் வரையிலான கணக்கின்படி, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில், உலகிலேயே முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.
Ø தற்போதைய அமெரிக்காவின் கொரோனா பலிகளின் எண்ணிக்கையானது  2001 செப்டம்பர் 11இல் உலக வர்த்தக மையக் கட்டிடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைவிட அதிகம்.
Ø இன்றைய நிலையில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் 2 லட்சம் வரையிலான மரணங்கள் ஏற்படலாம் அமெரிக்க அரசால் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருக்கும் சுகாதார ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பிர்க்ஸ் கூறுகிறார்.
Ø பிப்ரவரி மாதம் இறுதிவரை கூட கொரோனா பரிசோதனை விஷயத்தில் அமெரிக்க அரசு மிகுந்த அலட்சியத்துடன்தான் நடந்துகொண்டது என்ற தகவல் கொரோனா பரிசோதனைக்காக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention- CDC) உருவாக்கிய உபகரணங்கள் குறைபாடு கொண்டவை என்பதிலிருந்து தெரிய வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Ø சமூக விலக்கத்தால் கொரோனா பரவலைவிட அதிக மரணங்கள் ஏற்படும் என்றும், ஒரு சில வாரங்களிலேயே அமெரிக்காவின் தொழில் நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் மார்ச் மாத இறுதி வரை பேசி வந்தார் அமெரிக்க அதிபர். அதன்பின் கொரோனா வைரஸ் அமெரிக்காவின் பல மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக விலக்கத்தைத் தொடர்வது என்று முடிவெடுத்தார் அமெரிக்க அதிபர்.
ஆரம்பத்திலிருந்தே கொரோனா விஷயத்தில் அமெரிக்க அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், அமெரிக்காவின் நிலை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது என்ற குரல் தற்போது அமெரிக்கா எங்கும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment