Tuesday 2 August 2022

ஒற்றை எண்கள் – இரட்டை எண்கள் எளிய அறிமுகச் செயல்பாடு

ஒற்றை எண்கள் – இரட்டை எண்கள் எளிய அறிமுகச் செயல்பாடு

மாணவர்கள் நூறு வரை எண்களைச் சொல்லவும் எழுதவும் பழகிய பிறகு ஆசிரியர் ஒற்றை எண்கள் மற்றும் இரண்டை எண்கள் குறித்த அறிமுகச் செயல்பாட்டைச் செய்யலாம்.

ஒற்றை எண்களையும் இரட்டை எண்களையும் அறிமுகம் செய்யவும் மாணவர்களைப் புரிந்து கொள்ள செய்யவும் பல வழிமுறைகள் இருக்கின்றன. நாம் இப்போது பார்க்கப் போகும் இவ்வணுகுமுறை மிக எளிமையானது. இதற்காக துணைக்கருவிகளோ, விளக்க முறைகளோ எதுவும் தேவையில்லை.

மிக எளிமையான செயல்பாட்டால் மாணவர்களிடம் ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தலாம்.

நீங்கள் ஒரு எண்ணைச் சொன்னால் அதன் அடுத்த எண்ணைச் சொல்லுமாறு மாணவர்களிடம் கூறுங்கள்.

இதன்படி நீங்கள் ஒன்று கூறினால் மாணவர்கள் இரண்டு என்று கூறுவார்கள்.

மாணவர்கள் இரண்டு என்று கூறி முடித்ததும் நீங்கள் மூன்று என்று கூறினால் மாணவர்கள் நான்கு என்று கூறுவார்கள்.

மாணவர்கள் நான்கு என்று கூறி முடித்ததும் நீங்கள் ஐந்து என்று கூறினால் மாணவர்கள் ஆறு என்று கூறுவார்கள்.

இப்படியே நீங்கள் மாணவர்கள் கூறிய எண்ணுக்கு அடுத்த எண்களைக் கூறிக் கொண்டு செல்லுங்கள். மாணவர்களும் நீங்கள் கூறிய எண்ணுக்கு அடுத்த எண்ணைக் கூறிக் கொண்டே வருவார்கள்.

நீங்கள் 99 என்று கூறி மாணவர்கள் 100 என்று கூறியதும் இச்செயல்பாட்டை நிறுத்தி இப்போது கேள்வி கேளுங்கள்.

நீங்கள் கூறிய எண்கள் என்னவென்று மாணவர்களைப் பார்த்துக் கேளுங்கள். அவர்கள் 1, 3, 5, 7, 9, … என்று வரிசையாகக் கூறிக் கொண்டு போவார்கள்.

மாணவர்களிடம் அவர்கள் கூறிய எண்கள் என்னவென்று கேளுங்கள். அவர்கள் 2, 4, 6, 8, 10, … என்று வரிசையாகக் கூறிக் கொண்டு போவார்கள்.

இப்போது நீங்கள் மிக எளிமையாக ஒற்றை எண்களையும் இரட்டை எண்களையும் மாணவர்களிடம் அறிமுகம் செய்யலாம்.

நீங்கள் கூறிய எண்கள் ஒற்றை எண்கள் என்றும் மாணவர்கள் கூறிய எண்கள் இரட்டை எண்கள் என்றும் அறிமுகம் செய்யுங்கள்.

நீங்கள் கூறிய எண்கள் அனைத்தும் 1, 3, 5, 7, 9 என முடிவதை மாணவர்களிடம் உற்று நோக்கச் சொல்லுங்கள். ஒற்றை எண்கள் அனைத்தும் 1, 3, 5, 7, 9 இல் முடிவதை மாணவர்களை அறியச் செய்யுங்கள். அதைப் போலவே மாணவர்கள் கூறிய எண்கள் 2, 4, 6, 8, 0 என முடிவதையும் உற்று நோக்கச் சொல்லுங்கள். இரட்டை எண்கள் அனைத்தும் 2, 4, 6, 8, 0 இல் முடிவதை மாணவர்களை அறியச் செய்யுங்கள்.

இப்போது மாணவர்கள் ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள் பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

இப்போது மாணவர்களை ஒன்று என்று கூறச் செய்து நீங்கள் இரண்டு என்று கூறுங்கள். நீங்கள் இரண்டு என்று கூறியதும் அவர்களை மூன்று என்று கூறச் செய்யுங்கள். அவர்கள் மூன்று என்று கூறியதும் நீங்கள் நான்கு என்று சொல்லுங்கள். இப்படியே 100 வரை எண்களை அடுத்தடுத்து நீங்களும் மாணவர்களும் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டு போய் இப்போது மாணவர்கள் சொன்னது அனைத்தும் ஒற்றை எண்கள் என்பதையும் நீங்கள் சொன்னது அனைத்தும் இரட்டை எண்கள் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.

இப்படியாக நீங்கள் ஒரு எண் கூற மாணவர்கள் அடுத்த எண்ணைக் கூறும் இந்த விளையாட்டான செயல்பாட்டை வைத்து மிக எளிமையாக ஒற்றை எண்களையும் இரட்டை எண்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் ஒற்றை எண்களையும் இரட்டை எண்களையும் எளிமையாக வேறு முறைகளில் அறிமுகம் செய்திருந்தால் அதை இங்கு பகிருங்கள். பலருக்கும் அது உதவியாக இருக்கும்.

*****

No comments:

Post a Comment