Saturday, 27 August 2022

கணிதத் துணைக்கருவிகள்

கணிதத் துணைக்கருவிகள்

எந்த ஒரு பாடக் கற்பித்தலையும் எளிமையாக்குபவை துணைக்கருவிகள். கணிதம் கற்பிப்பதை எளிமையாக்குவதிலும் துணைக்கருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கணிதம் கற்பித்தலுக்குக் கரும்பலகையும் சாக்கட்டியும் போதுமான துணைக்கருவிகளே. அதற்கு மேல் முக்கியமான துணைக்கருவி என்றால் கற்பிக்கும் ஆசிரியரின் மனமும் மாணவர்களின் மனமும் எனலாம்.

கணிதத்தில் மனதின் பங்களிப்பு முக்கியமானது. கணிதம் சார்ந்த கருத்துகளை உள்வாங்குவதிலும் கட்டமைத்துக் கொள்வதிலும் மனதின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் முக்கியமானது.

மனதைக் கட்டமைத்துக் கொள்வதிலும் கணிதக் கருத்துகளை உள்வாங்கிக் கொள்வதிலும் துணைக்கருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனதைக் கணிதத்தின் பால் கொணரத் தக்க வகையில் கணிதத் துணைக்கருவிகள் அமைதல் நலமாகும்.

மாணவர்கள் வடிவியல் உருவங்களை வரைவதிலும், கட்டத்தாள் பயிற்சிகளில் ஆர்வமாக இருப்பதற்கும் காரணம் அவை கணிதத் துணைக்கருவிகளைக் கொண்டு கற்பிக்கப்படுவதுதான்.

வடிவியல் உருவங்களை வரைய கணித உபகரணப் பெட்டியும், கட்டத்தாள் பயிற்சிக்குக் கட்டத்தாள்களும் துணைக்கருவிகளாகத் துணை நின்று கணிதத்தை உள்வாங்கிக் கொள்வதற்கும் கணிதக் கருத்துகளைக் கட்டமைத்துக் கொள்வதற்கும் மனதிற்குத் துணை நிற்கின்றன.

கணிதத்தில் கரும்பலகையும் சாக்கட்டியும் முக்கிய துணைக்கருவிகள் என்பதால் சாக்கட்டிகளைப் பல வண்ணச் சாக்கட்டிகளாகப் பயன்படுத்துவது கூட மனிதர்களின் மனதைக் கணிதத்தை நோக்கி ஈர்க்கச் செய்யும் அற்புதமான துணைக்கருவிக்கான நுட்பம் ஆகும்.

துணைக்கருவிகள் அதிகம் பயன்படுத்த முடியாது என்று நினைக்கும் கணிதத் தலைப்புகளுக்கு எழுது அட்டைகள் (சார்ட்டுகள்), மின்னட்டைகள் போன்றவற்றைச் சாதாரணமாகப் பயன்படுத்தினாலும் அவை துணைக்கருவிக்கான ஒரு சுவாரசியத்தை மாணவர்கள் மனதில் ஏற்படுத்தும்.

தமிழக அரசால் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் வழங்கப்பட்டிருக்கும் கணித உபகரணப் பெட்டி துணைக்கருவிகளுக்கான ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அவற்றில் உள்ள கணித உபகரணங்களைக் கொண்டு பல கணிதத்  தலைப்புகளை எளிமையாக மாணவர்களின் மனதில் கொண்டு சேர்க்கலாம்.

முக்கிய கணிதக் கருத்துகளை குறிப்பாக சூத்திரங்களை ஸ்கெட் பேனாவால் அழகாக எழுதி படத்தொகுப்பாகத் தொகுப்பதும் ஒரு நல்ல துணைக்கருவியாக அமையும்.

கணிதம் தொடர்பான படங்களை ஒட்டியோ, வரைந்தோ தொகுப்பாக வைப்பதும் கணிதத்தின் பால் ஆர்வத்தை உண்டாக்கும் துணைக்கருவியாக அமையும்.

கணிதம் தொடர்பான செய்திகளை இதழ்களிலிருந்தும் இணையங்களிலிருந்தும் தொகுத்து ஒரு குறிப்பேடாகத் தொகுத்து வைப்பதும் துணைக்கருவியாக உதவும்.

கணிதக் கருத்தை எளிமையாக்கும் எந்த ஒரு பொருளும் கணிதத்திற்கான ஒரு துணைக்கருவியாகக் கொள்ளலாம்.

அதிக எண்ணிக்கையில் சேர்த்து வைக்கும் புளியங்கொட்டைகள் அல்லது மணிகள் எண்கள் தொடர்பான கணிதக் கருத்துகளைக் கற்பிக்கும் போது மாணவர்களின் புரிதலை அதிகப்படுத்தவும் செயல்முறையில் சொல்லிக் கொடுக்கவும் துணை நிற்கும் துணைக்கருவிகள் ஆகும்.

எந்த ஒரு துணைக்கருவியும் பயன்படுத்தாத இயலாத சூழலில் கற்பிக்கும் கணிதக் கருத்தின் சுருக்கத்தை ஒரு மின்னட்டையில் எழுதிக் காட்டுவதும் ஒரு துணைக்கருவிக்கான பயனைத் தரும்.

கணிதக் கருத்துகளை எளிமையாக மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கும் போது துணைக்கருவிகள் தேவையெனில் நினைத்தால் அதற்கேற்ப உங்கள் எண்ணத்தில் தோன்றும் துணைக்கருவிகளை அவசியம் பயன்படுத்துவது வேண்டப்படும்.

கரும்பலகையையும் சாக்கட்டியையும் கருத்துகளைச் சொல்லிப் புரிய வைக்கும் திறனும் போதும் என்று நினைத்தால் அவ்விடத்தில் கரும்பலகையும் சாக்காட்டியுமே போதுமான துணைக்கருவிகளாகக் கொள்ளத்தக்கனவே.

இதைத் தாண்டி வடிவியல் பெட்டி, வரைபடத்தாளைத் துணைக்கருவிகளாகக் கொண்டு பெரும்பாலான கணிதக் கருத்துகளை எளிமையாக கற்பித்து விடவும் இயலும்.

துணைக்கருவிகள் கற்பிப்பவரின் சுதந்திரத்திற்கும் தேர்வுக்கும் உட்பட்டதாகும் என்பதால் ஒரு வகுப்பறைக்குத் தேவையாக கணிதத் துணைக்கருவிகள் என்பது ஆசிரியரின் முடிவுக்கு உரியதாகும்.

•••••

No comments:

Post a Comment