Saturday 21 September 2024

சாதிக்க எதுவும் தடையில்லை! பாரா ஒலிம்பிக்கில் சாதித்த இந்தியா!

சாதிக்க எதுவும் தடையில்லை!

பாரா ஒலிம்பிக்கில் சாதித்த இந்தியா!

பாரிசில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்கில் கூட இந்தியா இந்த அளவுக்குப் பதக்கங்களை வெல்லவில்லை. பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 29 பதக்கங்களை வென்றிருக்கிறது.

இதற்கு முன் 2020 இல் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கிலும் இந்தியா சாதனை படைத்திருக்கிறது. அப்போது இந்தியா 19 பதக்கங்களை வென்றிருக்கிறது. இதுவும் அப்போது இந்தியா ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

இந்த முறை இந்தியா பாரா ஒலிம்பிக்கில் பெற்றுள்ள 29 பதக்கங்களில் 7 பதக்கங்கள் தங்கப் பதக்கங்கள். பதக்கப்பட்டியலில் இந்தியாவின் இடம் 18.

அது சரி இந்த பாரா ஒலிம்பிக் என்றால் என்னவென்று தெரியுமா? மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியே பாரா ஒலிம்பிக் போட்டியாகும். வழக்கமாக நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றதும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பாரா ஒலிம்பிக் எப்போது ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா? 1960 இல் ஆரம்பிக்கப்பட்டது.

பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஏன் ஆரம்பிக்கப்பட்டன தெரியுமா? இரண்டாம் உலகப் போரில் காயமுற்ற ராணுவ வீரர்களுக்கு மறுவாழ்வும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. 1948 இல் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அவர்களுக்கான சில போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் 1960 இல் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் என்று தனித்து நடத்தப்பட்டன.

2024 பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அவனி லெகாரா ஒரு விபத்தால் வீல் சேரில் வாழ்க்கையை நடத்துபவர்.

வில்வித்தைப் போட்டியில் வெண்கலம் வென்றிருக்கும் சீத்தல் தேவி இரண்டு கரங்களும் இல்லாதவர். இரண்டு கரங்களும் இல்லாமல் வில் வித்தைப் போட்டியில் கலந்து கொண்ட முதல் வீராங்கனை இவர்தான். தோள்பட்டை மற்றும் தாடையின் உதவியுடன் இவர் அம்பை எய்திப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

இந்த பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர்களின் பங்கும் அளப்பரியது.

காஞ்சிபுரம் துளசிமதி முருகேசன் பாட்மின்டனில் வெள்ளி வென்றிருக்கிறார்.

திருவாருர் மனிஷா ராமதாஸ் பாட்மின்டனில் வெண்கலம் வென்றிருக்கிறார்.

சேலம் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றிருக்கிறார். இவர் ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கமும், டோக்கிய பாரா ஒலிம்பிக்கில் வெள்ளியும் தற்போது வெண்கலமும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக மூன்று பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

சாதிக்கப் பிறந்தவர்கள்தானே மனிதர்கள்.

சாதனைக்கு எதுவுமே தடையில்லை.

தோல்விகளோ, ஊனமோ எதுவுமே தடையில்லை.

சாதிக்க வேண்டும் என்று துணிந்து எழுந்து விட்டால் சாதனையே எல்லை. அதை நம் இந்திய வீரர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அவர்களின் உத்வேகத்தையும் சாதனைகளையும் மனதில் கொண்டு நாமும் சாதனை படைக்க நம்மை நாமே தூண்டிக் கொள்வோம். சாதித்துக் காட்டுவோம். சாதிக்கப் பிறந்தவர்கள் நாம் என்பதை நிரூபிப்போம்.

No comments:

Post a Comment