Friday, 27 September 2024

குழந்தைகளைப் பிரச்சனைகள் இன்றி வளர்ப்பது எப்படி?

குழந்தைகளைப் பிரச்சனைகள் இன்றி வளர்ப்பது எப்படி?

குழந்தைகளைப் பிரச்சனைகள் இன்றி வளர்க்க முடியுமா?

அவர்களை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க முடியுமா?

குழந்தைகளுக்குப் பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கையைக் கொடுக்க முடியாது. ஆனால் பிரச்சனைகள் வந்தால் தீர்க்கும் அறிவையும் திறமையையும் கொடுக்க முடியும்.

குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்கிறோம் என்ற பெயரில் குழந்தைகளைப் பலவீனமானவர்களாக ஆக்கி விடக் கூடாது. குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்ப்பதாக நினைத்தால், அவர்கள் பாதுகாப்பற்ற மனநிலையில்தான் வளர்வார்கள்.

அதே நேரத்தில் அவர்களைச் சரியாக வளர்க்க வேண்டும் என்று அடிக்கடி அறிவுரைகளைக் கூறி அவர்களின் அறிவை மலுங்கடித்து விடக் கூடாது. அவர்களுடைய அறிவு வளர்வதற்கு அறிவுரைகளைக் கூறாமல் ஒதுங்கி நிற்க வேண்டிய தருணங்களும் இருக்கின்றன.

குழந்தைகள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் சமாளித்துப் பழக வேண்டும். அடிபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப பெற்றோர்கள் விலகிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் இருக்கின்றன.

அப்படியானால் பெற்றோர்கள் செய்ய வேண்டியது எதுவுமே இல்லையா?

ஏன் இல்லை?

குழந்தைகள் தோல்விகளைக் கண்டு துவளும் போது அவர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்க வேண்டும்.

பிரச்சனையை எப்படி சமாளிப்பது எனத் தடுமாறும் போது அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

சோர்ந்து போய் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு உத்வேகம் ஊட்ட வேண்டும்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியது இதுவே.

குழந்தைகளை அவர்களுக்கான அனுபவங்களைப் பெற அனுமதியுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு துணிவும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்.

குழந்தைகளை அவர்களுக்கான அனுபவங்களைப் பெறுவதற்கான சுதந்திரத்தைத் தருவதற்கான துணிச்சல் பெற்றோர்களிடம் இருக்கிறதா? அது இருந்தால்தான் குழந்தைகள் துணிச்சல் மிகுந்தவர்களாக வளர்வார்கள்.

குழந்தைகள் பிரச்சனைகளை நம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை பெற்றோர்களிடம் இருக்கிறதா? அது இருந்தால்தான் குழந்தைகள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்வார்கள்.

ஆக குழந்தைகளைப் பிரச்சனைகளின்றி வளர்க்க முடியாது. பிரச்சனைகளோடுதான் வளர்க்க வேண்டும். பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களாகத்தான் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

குழந்தைகள் குழந்தைகளாக வளர்வதற்கு அவர்களுக்குரிய சுதந்திரத்தையும் துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் பெற்றோர்களாக இந்தியப் பெற்றோர்கள் மாறும் போது இந்தியக் குழந்தைகள் உலக அளவில் மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள்.

No comments:

Post a Comment