இரண்டில் ஒன்று பார்த்து விடுங்கள்!
– வெற்றி பெறுவதற்கான வழியைக் கூறும் கதை!
ஒரு
நொடி நேரம்தான். முடிவெடுப்பதில் எடுக்கும் தாமதம் உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும்
பாதித்து விடலாம்.
நிலவில்
காலடி எடுத்து வைக்க எட்வின் ஆல்ட்ரினும், நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் விண்கலத்தில் அனுப்பப்பட்டார்கள்.
நிலவில் காலடி எடுத்து வைக்குமாறு எட்வின் ஆல்ட்ரினுக்கு கட்டளை வழங்கப்பட்டது. அவர்
ஒரு நொடி தாமதித்து விட்டார். அடுத்து நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு அந்தக் கட்டளை வழங்கப்பட்டதும்
அவர் உடனடியாகக் காலடி எடுத்து வைத்து விட்டார். நிலவில் முதலில் காலடி வைத்த பெருமை
நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்குக் கிடைத்துவிட்டது. ஒரு நொடி நேரத்தில் வரலாறே மாறி விட்டது.
எட்வின் ஆல்ட்ரினின் ஒரு நொடி தயக்கம் அவருக்குக் கிடைக்க வேண்டிய உலகப் புகழைத் தடுத்துவிட்டது.
சரியான
நேரத்தில் துரிதமாக முடிவெடுக்க வேண்டியது அவசியம். இதை விளக்கும்படியான கதை ஒன்றை இன்று அறிவோமா?
ஒரு
புலி பசியோடு அலைந்து கொண்டிருந்தது.
இரண்டு
நாட்களாக அதன் கண்களில் எந்த இரையும் அகப்படவில்லை.
அப்போது
அதன் கண்களில் இரண்டு மான்கள் தென்பட்டன.
அந்த
இரண்டையும் துரத்த ஆரம்பித்தது அந்தப் புலி.
இரண்டு
மான்களும் வேகமாக ஓடின.
ஓரிடத்தில்
பாதை இரண்டாகப் பிரிந்தது.
ஒரு
மான் வலது புறமுள்ள பாதை வழியாகவும் மற்றொரு மான் இடது புறமுள்ள பாதை வழியாகவும் ஓடியது.
புலிக்கு
ஒரு கணம் எந்தப் பக்கம் ஓடும் மானைத் துரத்துவது என்ற குழப்பம் வந்தது. முடிவெடுக்க
சில விநாடிகள் யோசித்து, இடது புறம் ஓடிய மான் மெதுவாக ஓடுவதாக நினைத்து அந்தப் பக்கம்
துரத்திச் சென்று அதைப் பிடிக்கலாம் என்று முடிவெடுத்தது. அது முடிவெடுத்து துரத்திச்
செல்வதற்குள் அந்த மான் பல அடி தூரம் ஓடிப் போயிருந்தது. சிறிது தூரம் ஓடிப் பார்த்த
புலிக்கு அந்த மானைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை போயிருந்தது. உடனே அங்கிருந்து
திரும்பி வந்து வலது புறம் ஓடிய மானைத் துரத்திப் பிடிக்கலாம் என்று அந்தத் திசையில்
ஓடியது. அந்த மான் சென்ற தடம் கூட தெரியவில்லை.
இப்போது
கண்ணில் பட்ட இரண்டு மானையும் இழந்து விட்டு பசியோடு நின்றது அந்தப் புலி.
இப்படித்தான்
சரியான நேரத்தில் துரிதமாக முடிவெடுக்க தெரியாவிட்டால் கையில் அகப்பட்டதையும் இழக்க
நேரிடும்.
ஓர்
இலக்கை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இத்தகைய இரட்டை மனநிலையை விட்டு விட வேண்டும்.
ஒருமித்த மனதோடு ஒன்றை நோக்கி முயல்பவர்கள் கருதிய இலக்கை அடைவார்கள். இரண்டில் ஒன்றைத்
தீர்மானிக்க முடியாதவர்கள் இரண்டையும் இழந்து போய் நிற்பார்கள்.
ஆகவே
சரியாகவும் துரிதமாகவும் முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் விரைவாக முடிவெடுங்கள். வெற்றி
பெறுங்கள்.
இந்தக்
கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத்
தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment