Friday, 14 February 2025

எதிர்பார்ப்புகள் பல விதம்! – ஒரு வித்தியாசமான கதை!

எதிர்பார்ப்புகள் பல விதம்! – ஒரு வித்தியாசமான கதை!

மனித மனம் கடலை விட ஆழமானது. மனித மனதின் ரகசியங்கள் அதிசயமானவை. அப்படிப்பட்ட மனதில் உள்ள எதிர்பார்ப்புகள் விசித்திரமானவை. மனித மனதின் எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாம் வித்தியாசப்படுகின்றன என்பதை விளக்கும் கதை ஒன்றை அறிவோமா?

ஒரு கடைக்கு நாய் ஒன்று வந்தது. அதன் வாயில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலும், பணமும் இருந்தது. அத்துடன் கழுத்தில், வாங்கிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கான பையும் மாட்டப்பட்டிருந்தது.

கடைக்காரர் புரிந்து கொண்டார்.

பட்டியலில் இருந்த பொருட்களைப் பையில் போட்டார். பொருட்களுக்கான பணத்தை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தையும் பையில் போட்டார்.

நாய் அவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பியது.

கடைக்காரருக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. இப்படி ஒரு பொறுப்பான நாயை அவர் இதுவரை பார்த்ததில்லை. அந்த நாயைப் பின்தொடர்ந்து போய் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு உண்டாகி விட்டது.

கடையைப் பார்த்துக் கொள்ளுமாறு வேலைக்காரர்களிடம் சொல்லி விட்டு நாயைப் பின்தொடர ஆரம்பித்து விட்டார்.

அந்த நாய் சாலை விதிகளைப் பின்பற்றி இடது புறமாகச் சென்று கொண்டிருந்தது. சாலையில் சிவப்பு விளக்கு எரியும் போது நின்றது. பச்சை விளக்கு எரிந்த பிறகு சாலையைக் கடந்து. பாதசாரிகள் கடக்கும் இடமாகப் பார்த்து சாலையைக் கடந்தது. இதையெல்லாம் பார்த்த கடைக்காரருக்கு வியப்பு தாங்க முடியவில்லை.

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று பேருந்திலும் ஏறியது. கடைக்காரரும் ஆர்வம் தாங்க முடியாமல் பேருந்தில் ஏறிக் கொண்டார். பையிலிருந்து பணத்தையும் ஒரு துண்டுசீட்டையும் கவ்வி எடுத்து நடத்துநரிடம் கொடுத்து பயணச்சீட்டையும் வாங்கிக் கொண்டது அந்த நாய். இதையெல்லாம் பார்க்க பார்க்க கடைக்காரருக்கு புல்லரித்துப் போய் விட்டது.

தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நாய் குரைத்து நடத்துநரைப் பேருந்தை நிறுத்த வைத்து இறங்கிக் கொண்டது. கடைக்காரரும் இறங்கிக் கொண்டார்.

நாய் தன்னுடைய வீட்டை நோக்கிப் போனது. கடைக்காரரும் போனார்.

வீட்டின் அழைப்பு மணியை அடித்தது நாய். கதவு திறக்கப்படுவதற்காக நாய் காத்திருந்தது. அப்போது கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த வீட்டுக்காரர் நாயை அடிக்க ஆரம்பித்து விட்டார்.

கடைக்காரர் அதிர்ச்சியாகி அந்த வீட்டின் உரிமையாளரிடம் அந்த நாய் எவ்வளவு பொறுப்பாக நடந்து கொண்டது என்பதை எடுத்துச் சொன்னார்.

எவ்வளவு பொறுப்பாக நடந்து என்ன பிரயோஜனம்? இந்த நாய் கடைக்குப் போகும்  போது வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு போயிருந்தால், தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி விட்டு கதவைத் திறந்துவிட அழைப்பு மணியை அடித்திருக்காது அல்லவா என்றார் வீட்டுக்காரர்.

கடைக்காரருக்கு இப்போது மனிதர்களை நினைத்து ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் போய் விட்டது.

என்னதான் கடமையைச் சரியாகச் செய்தாலும் மனிதர்களின் எதிர்பார்ப்பை எப்போதும் பூர்த்தி செய்ய முடியாது போலிருக்கிறது என்ற உணர்வுடன் கடையை நோக்கித் திரும்ப ஆரம்பித்தார் கடைக்காரர்.

உண்மைதானே? மனிதர்களின் மனது விசித்திரமானது. அந்த மனதில் அடங்கியிருக்கும் எதிர்பார்ப்புகள் அதை விட விசித்திரமானது இல்லையா?

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

1 comment:

  1. மனித மனம் விசித்திரமானது தான்.

    ReplyDelete