எதையும் நேர்மறையாக அணுக ஆறு அணுகுமுறைகள்!
வாழ்க்கையில்
இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும்.
தர்ம சங்கடமான நிலைக்கு நீங்கள் ஆளாகக் கூடும். அப்போது நீங்கள் எப்படி நடந்து
கொள்கிறீர்கள் என்பது முக்கியமானது. அப்போது எப்படி நேர்மறையாகச் செயல்பட முடியும்
என்று நீங்கள் கேட்கலாம். எப்போதும் ஒருவர் நினைத்தால், நேர்மறையாகச் செயல்பட முடியும்.
அப்படி இக்கட்டான மற்றும் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் நேர்மறையாகச் செயல்படுவதற்கான
ஆறு அணுகுமுறைகளை இங்கு காண்போமா?
நேரத்தோடு
செல்ல வேண்டிய இடத்துக்குத் தாமதமாகச் சென்று விடுகிறீர்கள். இந்த இக்கட்டை நீங்கள்
எப்படி எதிர்கொள்வீர்கள்? நிச்சயம் நீங்கள் மன்னிப்பு கேட்பீர்கள். அப்போது நீங்கள்
மன்னிப்பு கேட்பதை விட, எனக்காகக் காத்திருந்ததற்காக நன்றி என்று சொல்லுங்கள். இதுதான்
அந்தச் சூழ்நிலையை நேர்மறையாக அணுகுவதற்கான சரியான வழிமுறை.
யாராவது
உங்களிடம் பிரச்சனை என வரும் போது என்ன செய்வீர்கள்? அதற்கான தீர்வைத் தெரியவில்லை
என்று சொல்வதை விடவோ, யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன் என்பதை விடவோ இந்தப் பிரச்சனைக்கான
தீர்வைச் சொல்ல கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள் என்று சொல்லுங்கள். அதுதான் அந்தச் சூழ்நிலையை
நேர்மறையாக அணுகுவதற்கான சரியான வழிமுறை. கால அவகாசம் அந்தப் பிரச்சனைக்கான தீர்வை
உங்களுக்குத் தரும்.
மாறுபட்ட
கருத்துகளைக் கொண்டவர்களிடம் பேசும் போது என்ன செய்வீர்கள்? வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்களா?
வாக்குவாதம் முற்றி சண்டையாக உருவெடுக்கும் போது மன்னிப்பு கேட்பீர்களா? ஆனால், வாக்குவாதத்தில்
ஈடுபடாமலோ, மன்னிப்பு கேட்காமலோ தங்களது கருத்தை ஏற்க முடியவில்லை என்பதைப் பணிவாக
வெளிப்படுத்துங்கள். இதுதான் அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான நேர்மறையான அணுகுமுறை.
ஒரு
வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது இன்னொரு வேலை வரும் போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்?
இருக்கிற வேலையே முடியாத போது, இன்னொரு வேலையா எனத் தடுமாறுவீர்களா? அதை வேண்டாம் என்று
தவிர்ப்பீர்களா? அதைச் செய்ய இயலாது என்று சொல்வதை விடவும், தற்போது செய்து கொண்டிருக்கும்
வேலையைக் குறிப்பிட்டு அதன் காரணமாக புதிய வேலையை ஏற்க இயலவில்லை என்பதைத் தெரிவிக்கவும்.
இதுதான் அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறை.
குறிப்பிட்ட
காலத்தில் முடிக்க வேண்டிய ஒரு வேலையை அந்தக் காலத்துக்குள் முடிக்க இயலாமல் தாமதமாகிறது
எனும் போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்? அதற்கு எப்படி வினையாற்றுவீர்கள்? மன்னிப்பு
கேட்பீர்களா? அதற்காக மன்னிப்பு கேட்பதை விட, என்ன காரணத்திற்காக அந்த வேலை தாமதமாகிறது
என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அத்துடன் இந்தத் தேதிக்குள் இந்த வேலையை முடித்து
விடுவேன் என்பதற்கான உத்தரவாதத்தையும் தாருங்கள். அதுதான் அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான
ஆக்கப்பூர்வமான வழிமுறை.
ஒரு
தவறு நடந்து விடுகிறது. இது என்ன ஒரு மோசமான சூழ்நிலை பாருங்கள். அப்போது என்ன செய்வீர்கள்?
மன்னிப்பு கேட்பீர்களா? நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்பதை விட, வருங்காலத்தில் இப்படி
நேராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதிபட தெரிவியுங்கள். அதுதான் அந்தச் சூழ்நிலையை
எதிர்கொள்வதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறை.
இப்படி
இக்கட்டான அல்லது நெருக்கடியான சூழ்நிலைகளில் இந்த ஆறு அணுகுமுறைகளையும் கடைபிடிக்கும்
போது எதிர்மறையான சூழல்களிலும் நீங்கள் நேர்மறையாகப் பளிச்சிடுவீர்கள்.
*****
No comments:
Post a Comment