Sunday 22 March 2020

உலக நீர் நாள் – மார்ச் 22

உலக நீர் நாள் – மார்ச் 22


நீருக்கான பிரச்னைகளைத் தீர்க்கவும், சரி செய்யவும் மார்ச் 22ஆம் நாளை 'உலக நீர் நாள்' ஆக கொண்டாட வேண்டும் என ஐ.நா.வின் அறிவிப்பைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22 ஆம் நாள் உலக நீர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் உலக நீர் நாளுக்காக ஒரு மையக் கரு வழங்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டின் மையக் கருவாக 'காலநிலை மாற்றம் மற்றும் நீர்' என்ற மையக் கரு வழங்கப்பட்டுள்ளது.
உலக நீர் நாளில் நீரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் நீர் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பேசுவது, தெரிந்து கொள்வது, மாற்றுத் திட்டங்களை வடிவமைப்பது எனச் செயல்பட வேண்டும்.
இன்றைய நாளில் மூன்று மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை, பத்து நாட்களுக்குள் கொட்டித் தீர்த்துவிடுகிறது. அதனால் மழைநீர் வெள்ளமாக மாறி வெளியேறி விடுகிறது. அதைத் தொடர்ந்து கோடைகாலங்களில் வறட்சி ஏற்படுகிறது. வெள்ளமும் வறட்சியும் ஒரே ஆண்டில் ஏற்படுகின்றன.
உலக அளவில் அனைத்து அரசுகளுக்கும் உள்ள தலையாய கடமை மக்களுக்கான குடிநீர், உழவிற்கான நீர், தொழிற்சாலைகளுக்கான நீர் மற்றும் சூழல் தன்மையைக் காப்பாற்றுவதற்கான நீர் (வனவிலங்குகள், உயிரினங்கள், காடுகள் பாதுகாப்பு) என அனைத்துப் பிரிவினருக்கும் தேவையான நீரை வழங்குவது ஆகும்.
மக்களுக்கான குடிநீர் மிகவும் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது. இந்திய அரசின் இன்றைய நீர்ச் சட்டத்தின்படி குடிநீருக்கு முதல் முக்கியத்துவம் தர வேண்டும்.
மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சமுதாயத்துக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவும், தொழிற்சாலைகளுக்கான நீர் முக்கியமாகிறது.
நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கும் நீரானது பயன்படுத்திய பிறகு கணிசமான அளவு கழிவுநீராக மாறுகிறது. இந்தக் கழிவுநீரை மறுசுழற்சி செய்து மேலாண்மை செய்ய வேண்டியது முக்கியமாகிறது.
நீரைப் பயன்படுத்தும் அனைத்துத் துறையினரும் ஏதோவொரு வகையில் அதிகமாகப் பயன்படுத்தி விரயமாக்கி வருவது கட்டுபடுத்த வேண்டியதும் முக்கியமாகிறது. 

நல்ல நீர் மாசடைவதாலும், நன்னீரில் கழிவுநீர் கலந்து விடுவதாலும் 65 விழுக்காடு மக்கள் இன்று பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்னும் எதிர்சவ்வூடு பரவல் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கும் நீரைக் குடிப்பவர்களாக மாறியுள்ளனர். இவ்வாறு சுத்தகரிப்பதால் 60 சதவீத நீர் வீணாகிறது. 40 சதவிகிதம் மட்டுமே குடிநீராக மாற்றப்படுகிறது.
சமீபகாலமாக நீருக்காக நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்படுகிறது. நமது பயன்பாட்டுக்கான சரிபாதி நீர், நிலத்திலிருந்துதான் எடுக்கப்படுகிறது. நிலத்தடி நன்னீர் நீர் மட்டம் குறையும் போது கடல்நீர் உட்புகுவதும் பல இடங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில் நீர் குறித்த விழிப்புணர்வும், நீரை மேலாண்மை செய்வதில் அதிக கவனமும் தேவைப்படுகிறது. அதற்கேற்ப,
Ø நீர் நிலைகளைப் பராமரிப்பது,
Ø குழாய்நீர், சொட்டுநீர், தெளிப்பு நீர்ப் பாசன முறைகளை விரிவுபடுத்துவது,
Ø மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும், அலுவலக வளாகங்களிலும் நிறுவுவது,
Ø மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது,
Ø கழிவுநீரை சுத்திகரிப்பது,
Ø இயற்கை வேளாண்மையில் 40 சதவிகிதம் நீர் சேமிக்கப்படும் என்பதால் இயற்கை வேளாண்மைக்கு மாறுவது
என்பன குறித்த முன்னெடுப்புகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது உலக நீர் நாளின் மூலம் நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணியாகும். நீரின்றி அமையாது உலகு என்பதால் இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் உலக நீர் நாளில் நீருக்கான பாதுகாப்பு, நீருக்கான விழிப்புணர்வு, நீருக்கான மேலாண்மை குறித்த கருத்துகளை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டியது முக்கிய கடமையாகும்.


No comments:

Post a Comment