Thursday, 19 March 2020

நிர்பயா வன்கொடுமை வழக்கு – சம்பவத்திலிருந்து தண்டனை வரை

நிர்பயா வன்கொடுமை வழக்கு
– சம்பவத்திலிருந்து தண்டனை வரை

டில்லி துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சம்பவம் நடைபெற்று 7 ஆண்டுகள் ஆன நிலையில் குற்றவாளிகள் நால்வரும் 20.03.2020 (வெள்ளி) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16 - ஆம் தேதி தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி (நிர்பயா) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
குற்றவாளிகள் 6 பேரில் ஒருவரான ராம்சிங், விசாரணையின்போது திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவர் பெயர் குறிப்பிடாத இடத்துக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டார்.
இதர நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
பின்னர் 2017-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அந்த நால்வரின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டது.
குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தியும், அவர்களால் தூக்குத் தேதியை தள்ளிப்போட மட்டுமே முடிந்தது. இதன் காரணமாக, நால்வரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதிகள் மூன்று முறை நிர்ணயிக்கப்பட்டு, இறுதியாக 20.03.2020 (வெள்ளிக்கிழமை) அன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
நிர்பயா வன்கொடுமை சம்பவத்திலிருந்து தண்டனை வரையிலான அவ்வழக்குக் கடந்து வந்த பாதையினைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
பாலியல் வன்கொடுமை முதல் தூக்கு வரை:
டிசம்பர் 12, 2012 :
            தில்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவியும், அவரது நண்பரும் சினிமா பார்ப்பதற்காக தனியார் பேருந்தில் சென்றனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பலால் அந்த பெண் கடுமையாகத் தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, நண்பருடன் சேர்ந்து அவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதன்பிறகு, அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டிசம்பர் 17, 2012 :
            பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ், வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகியோரை தில்லி காவல் துறையினர் அடையாளம் கண்டனர்.
டிசம்பர் 21, 2012 :
            இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனைக் கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினர் தெரிவித்தனர். முக்கியக் குற்றவாளியான முகேஷை பெண்ணின் நண்பர் அடையாளம் கண்டார்.
டிசம்பர் 22, 2012 :
            இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 6-வது நபரான அக்சய் தாக்குர் பிகாரில் பிடிபட்டார்.
டிசம்பர் 26, 2012 :
            கடந்த 11 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த நிர்பயா, சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டிசம்பர் 29, 2012 :
            சிங்கப்பூரில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிர்பயா இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு உயிரிழந்தார்.
பிப்ரவரி 2, 2013 :
            பாலியல் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மீதும் விரைவு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மார்ச் 11, 2013 :
            இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராம் சிங் திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆகஸ்ட் 31, 2013 :
            இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனை 3 ஆண்டுகள் சிறார் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டது.
செப்டம்பர் 10, 2013 :
            இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அக்சய் சிங் தாக்குர், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் முகேஷ் ஆகியோரை தில்லி நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது.

செப்டம்பர் 13, 2013 :
            நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வருக்கும் தில்லி உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மார்ச் 13, 2014 :
            நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
மார்ச் 15, 2014 :
            முகேஷ் மற்றும் பவன் குப்தாவின் மரண தண்டனையை நிறைவேற்ற மார்ச் 31, 2014 வரை இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிசம்பர் 20, 2015 :
            இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளியில் இருந்து, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவர் பெயர் குறிப்பிடாத இடத்துக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டார்.
டிசம்பர் 21, 2015 :
            இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தில்லி மகளிர் ஆணையம் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மே 5, 2017 :
            நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. மரண தண்டனையை உறுதி செய்த தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
டிசம்பர் 15, 2017 :
            மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வருள் வினய் சர்மா மற்றும் பவண் குமார் குப்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். முன்னதாக, முகேஷ் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் டிசம்பர் 12-ஆம் தேதி நிறைவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 9, 2018 :
            மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று பேரின் சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டிசம்பர் 13, 2018 :
            நிர்பயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரது மரண தண்டனையையும் உடனடியாக நிறைவேற்றக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
பிப்ரவரி 14, 2019 :
            நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை நடைமுறையை துரிதப்படுத்துமாறு நிர்பயாவின் பெற்றோர்கள் தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அக்டோபர் 30, 2019 :
            கருணை மனுவைத் தவிர அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டதாக திகார் சிறை அலுவலர்களால் குற்றவாளிகள் நால்வரிடமும் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் 8, 2019 :
            குற்றவாளிகளுள் ஒருவரான வினய் சர்மா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன் கருணை மனுவைத் தாக்கல் செய்தார்.
டிசம்பர் 1, 2019 :
            வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்கக் கோரி தில்லி அரசு பரிந்துரைத்தது.
டிசம்பர் 6, 2019 :
            வினய் சர்மா கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு  அனுப்பியது.
டிசம்பர் 10, 2019 :
            மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக அக்சய் சிங் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

டிசம்பர் 18, 2019 :
            மரண தண்டனைக்கு எதிராக அக்சய் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜனவரி 7, 2020 :
            நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் ஜனவரி 22-ஆம் தேதி தூக்கிலிட வேண்டும் என தில்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.
ஜனவரி 17, 2020 :
            நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என தில்லி நீதிமன்றம் புதிய தேதியை அறிவித்து உத்தரவிட்டது.
பிப்ரவரி 17, 2020 :
            நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என தில்லி நீதிமன்றம் மூன்றாவது முறையாக தேதி நிர்ணயித்தது.
மார்ச் 4, 2020 :
            வினய் குமார், அக்சய் தாக்குர் மற்றும் முகேஷ் சிங் ஆகியோரது கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடைசியாகத் தாக்கல் செய்யப்பட்ட பவன் குப்தாவின் கருணை மனுவையும் நிராகரித்தார்.
மார்ச் 5, 2020 :
            நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என தில்லி நீதிமன்றம் மீண்டும் புதிய தேதியை நிர்ணயித்தது.
மார்ச் 18, 2020 :
            நால்வரையும் தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை, தூக்கிலிடும் ஊழியரான பவன் ஜல்லத் மேற்கொண்டார்.
மார்ச் 19, 2020 :
            நிர்பயா வழக்கு குற்றச் சம்பவம் நடைபெறும்போது தான் தில்லியிலேயே இல்லை என்று முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.
மார்ச் 20, 2020 :
            முகேஷ் சிங் (32),  பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (31) ஆகிய நால்வரும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.


No comments:

Post a Comment