Saturday, 21 March 2020

ஆதியைத் தேடி …

ஆதியைத் தேடி …

சில வகையான சங்கதிகளைப் படிக்கும் போது, அச்சங்கதிகள் தரும் மன உந்துதலுக்கு அளவே கிடையாது. அப்படி ஒரு மன உந்துதலைத் தந்த சங்கதி ஒன்றைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும். இதோ அந்தச் சங்கதி…
எல்லா வகையான உணவுகளையும் தின்று பார்த்துவிட்டு  நோயாளராகி இறுதியில் கம்பும் கேழ்வரகும் பழஞ்சோறும் நீராகாரமுமே சிறந்தது என்று உணர்ந்தோம்.
எல்லா வகையான உலோகங்களிலும் பண்ட பாத்திரங்கள் செய்துவிட்டு இறுதியில் மண்சட்டியும் மண்பானையுமே பக்க விளைவுகள் அற்றவை என்ற பக்குவத்திற்கு வந்திருக்கிறோம்.
எல்லா வகையான சொகுசுந்துகளிலும் நோகாது பயணித்துவிட்டு இறுதியில் கைகால் வீசி நடப்பது தான் உயிராற்றலைக் காப்பது என்று தெரிந்து கொண்டோம். 
எல்லா வகையான செருப்புகளையும் அணிந்து பார்த்துவிட்டு இறுதியில் வெறுங்காலோடு நடப்பதே சுரப்பிகளை ஊக்குவது என்று கண்டுபிடித்திருக்கிறோம்.
எல்லா வகையான ஈருருளிகளையும் வாங்கி ஓட்டிப் பார்த்துவிட்டு இறுதியில் மிதிவண்டி தான் உடலுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்றது என்று புரிந்து கொண்டோம். 
எல்லா வகையான செயற்கை உரங்களையும் வேதிப்பொருள்களையும் பயன்படுத்தி மண்ணைக் கெடுத்துவிட்டு இறுதியில் இலை தழை உரங்களும் பசுஞ்சாணமும் பஞ்சகவ்யமுமே உரமூட்டுவது என்று அறிந்து கொண்டோம். 
எல்லா வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திவிட்ட நாம் புதிதாய் ஒரு விதையை உருவாக்க முடியாது என்பதில் திகைக்கிறோம். இப்படி நிறையவே சொல்லலாம். இதில் இன்னும் ஒன்றேயொன்று மீதமிருக்கிறது.
எல்லா வகையான மாட மாளிகைகளையும் ஆடம்பரக் கட்டடங்களையும் கட்டுவதற்காக மலைகளையும் மரங்களையும் விளைநிலங்களையும் ஆற்றையும் காற்றையும் வரம்பின்றி அழித்த  நாம், இனி நம் மூதாதையர் வாழ்ந்ததுபோல் கீற்றுவேய்ந்த கூரை வீடுகள் தாம் சிறப்பு என்ற இடத்திற்கும், அவற்றில் வசிப்பதற்கும் வந்தே ஆகவேண்டும்.
எல்லாவற்றுக்கும் இறுதியிலும் ஆதியைத் தேடும் முயற்சி நடக்கும்! உடல் நோயற்று இருப்பதும், மனம் கவலையற்று இருப்பதுமே முதல் இன்பம், அதை நோக்கி பயணிப்பதே வாழ்க்கை.


No comments:

Post a Comment