Wednesday, 30 September 2026

ஆவி அடங்கும் முடிவுரை!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 100

ஆவி அடங்கும் முடிவுரை!

இவ்வலைப்பூவின் அன்பான வாசகர்களே! அமானுஷ்யங்களின் அட்ரஸ் என்ற தொடரின் மூலமாக நாம் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. நிழல்களின் நிஜம் தேடியும், வெளிச்சத்திற்குள் ஒளிந்திருக்கும் இருளைப் பார்த்தும் நாம் மேற்கொண்ட இந்த அமானுஷ்யப் பயணம், இன்றோடு ஒரு நிறைவான முற்றுப்புள்ளியை எட்டுகிறது.

அமானுஷ்யங்களின் அட்ரஸ் வெறும் பேய்க்கதைகளின் தொகுப்பு அல்ல; அது நம் அறியாமைக்கும் அறிதலுக்கும் இடைப்பட்ட எல்லைக் கோடு. நாம் எதை நம்ப மறுக்கிறோமோ, அல்லது எதை விளக்க முடியவில்லையோ, அதைத்தான் உலகம் அமானுஷ்யம் என்று முத்திரை குத்துகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், இயற்கையின் பிரம்மாண்டத்தின் ஒரு துளியைத்தான் நாம் இதுவரை தொட்டுப் பார்த்திருக்கிறோம்.

பேய், பிசாசு, அமானுஷ்யம், ஏழாம் அறிவு, எட்டாம் அறிவு, ஒன்பதாம் அறிவு,… என இவற்றைத் தாண்டியும் அறிவியல் வெளிச்சம் படாத மூலைகள் எவ்வளவோ இருக்கின்றன. இவை பற்றிப் பேசத் தொடங்கினால் நம் ஊரில் கூட்டத்திற்குப் பஞ்சமே இருக்காது. அப்படித்தான் ஆரம்பித்தோம் இந்தத் தொடரை. அமானுஷ்யங்களின் அட்ரஸ் என்ற பெயரில். இதுவரை நாம் எத்தனையோ விசித்திரமான இடங்களுக்குச் சென்றோம்; புரிந்துகொள்ள முடியாத மனிதர்களைச் சந்தித்தோம்; விளக்க முடியாத சம்பவங்களை அலசிப் பார்த்தோம். இன்று இதோ, இந்தத் தொடரின் கடைசிப் பக்கத்திற்கு வந்துவிட்டோம்.

இந்தத் தொடரில் நாம் பார்த்த கதைகள், சம்பவங்கள், செய்திகள், விளக்கங்கள் எல்லாமே ஏதோ ஒரு புள்ளியில் நம் மனதுடன் தொடர்புடையவை. சில உண்மைகள், பல கற்பனைகள், இன்னும் சில நம் நரம்புகளை முறுக்கேற்றும் விறுவிறுப்பான அனுபவங்கள். எத்தனையோ வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாகவும், கமெண்ட் பகுதியிலும் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிலர், "ஐயா! என் வீட்டிலும் இப்படி ஒரு நாள் நடந்தது..." என்று அலைபேசியில் ஆரம்பிப்பார்கள். அதைக் கேட்டு விட்டு, நள்ளிரவில் தனியாகப் படுக்கப் போகும்போது, லேசாக ஒரு பயம் தொற்றிக்கொள்ளும். அந்தப் பயம் இருக்கிறதே. அது ஒரு சுகமான போதை! அந்தப் போதை தரும் கிக்தான் அமானுஷ்யம்.

பேய்கள் இருக்கின்றனவா? ஆவிகள் அலைகின்றனவா? பிசாசுகள் திரிந்து கொண்டிருக்கின்றனவா? இல்லை, இல்லவே இல்லை. நமது பயம்தான் பேயாக, ஆவியாக, பிசாசாக உருவெடுக்கிறது. உண்மை எப்போதும் ஒரு புதிரான திரை போட்டுத்தான் தன்னை மறைத்துக்கொண்டிருக்கும். அந்தத் திரைதான் அமானுஷ்யங்களுக்கான புகலிடம். திரையை விலக்கினால் அமானுஷ்யங்கள் டாடா காட்டி விடும்.

இந்த வலைப்பதிவில், இந்தத் தொடர் முழுவதிலும் என்னுடன் பயணித்த அன்பான வாசகர்கள் நீங்கள். ஒவ்வொரு நாளும் புதிய அத்தியாயத்துக்காகக் காத்திருந்து, விவாதித்து, விமர்சித்து, சிலாகித்து, உங்கள் ஆதரவுதான் இந்தத் தொடரை இவ்வளவு தூரம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

கதைகள் முடியும்; ஆனால் கேள்விக்குறிகள் முடிவதில்லை. அமானுஷ்யங்களின் அட்ரஸ் எங்கு இருக்கிறது என்று கேட்டால், அது வேறு எங்கேயோ இல்லை. நமது ஆழ்மனதின் இருண்ட அறைகளில்தான் இருக்கிறது.

இந்தத் தொடர் உங்களுக்கு ஏற்படுத்திய நடுங்க வைக்கும் பயம், சிந்திக்க வைத்த தருணம் மற்றும் முடிவில் கிடைத்த தெளிவு என இவை அனைத்தும் உங்களுடன் நீடிக்கும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் கருத்துக்களோடும், ஆதரவோடும் என்னுடன் பயணித்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இப்போதைக்கு இத்தொடரிலிருந்து விடைபெறுகிறேன்.

அடுத்ததொரு புதிய முயற்சியில், இன்னும் சுவாரஸ்யமான களத்தில் சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

முடிவாக, அட்ரஸைத் தேடுவதற்கு ஒரு எண்ட் கார்டு போடுவோம்!

*****

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 31

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 31

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

Tuesday, 29 September 2026

இத்தனை இரவுகளுக்குப் பின்னால்…

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 99

இத்தனை இரவுகளுக்குப் பின்னால்…

கடிகார முட்கள் இரவு பன்னிரண்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன. அறைக்குள் ஒரே அமைதி. மேசையில் எரிந்துகொண்டிருக்கும் சிறிய விளக்கின் மஞ்சள் வெளிச்சம் மட்டும் என் முகத்தில் விழுகிறது. மடிக்கணினியின் திரை நீல நிறத்தில் மினுமினுக்கிறது. இந்த அமைதியை மீறி, பக்கத்து வீட்டின் ஜன்னல் கதவு காற்றுக்கு அடித்துத் திறக்கும் சத்தம் மட்டும் அவ்வப்போது கேட்கிறது.

இவ்வளவு நாளும் நாம் தேடிய அமானுஷ்யங்கள் எங்கு இருக்கின்றன? பழைய பங்களாக்கள், பாழடைந்த வீடுகள், கைவிடப்பட்ட கட்டிடங்கள், முட்செடிகள் மண்டிய இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகள், மரண ஓலங்கள் கேட்ட கிராமத்து ஒதுக்குப் புறங்கள், விளக்கு வெளிச்சம் படாத ஊரகத்து வீடுகள், சூரிய ஒளி கூட நுழைய முடியாத அடர் வனப்பகுதிகள், தீவுகள் போன்றிருக்கும் தனித்த நிலப்பகுதிகள். இவையெல்லாம் வெறும் முகவரிகள்தானா? அல்லது, நாம் தேடிய முகவரி நாமேதானா? இந்தத் கேள்விகளுக்கான பதிலைத்தான் இந்த முழுத் தொடரிலும் அலசிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இன்றிரவு.

நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது.

இன்று மாலை ஒரு விசித்திரமான இமெயில் வந்திருந்தது.

"நீங்கள் தேடிக் கண்டுபிடித்ததாக நினைக்கும் கடைசி அமானுஷ்யத்தின் சாவி, உங்கள் மேஜையின் வலதுபக்க டிராயருக்குள் இருக்கிறது. திறந்து பாருங்கள். ஆனால், திரும்ப வர முடியாது."

நானென்ன பொழுதுபோக்காக அமானுஷ்ய கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று யாரோ நினைத்துவிட்டார்களோ என்னவோ? யாரோ என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள், அல்லது என் வாசகர்களில் ஒருவர் இப்படிக் குறும்புத்தனம் செய்யப் பார்க்கிறார் – நான் இதை எப்படிப் பார்ப்பது?

என் விரல்கள் என் சுயக் கட்டுப்பாட்டை மீறி, அந்த மேஜையின் வலதுபக்க டிராயரை நோக்கி நகர்ந்தன. என் கை நடுங்கியதா? தெரியவில்லை. ஆனால் நரம்புகள் லேசாக முறுக்கேறின. த்ரில்லர் சினிமாக்களில் வருவது போல ஒரு மெல்லிய பின்னணி இசை என் காதுகளில் ஒலிப்பது போல் இருந்தது.

ட்ராயரை இழுத்துத் திறந்தேன்.

அங்கே, ஒரு பழைய காலத்து டேப் ரெக்கார்டர் இருந்தது. பிளாஸ்டிக் மஞ்சள் நிறமாக மங்கிக்கிடந்தது. அதன் உள்ளே ஒரு ஆடியோ கேசட். அந்தத் டேப்பின் மேல் ஒரு லேபிள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் என் சொந்தக் கையெழுத்திலேயே, ஆனால் நான் எப்போது, எதற்காக அதை எழுதினேன் என்று ஞாபகமே இல்லாத ஒரு தேதியில், இப்படி எழுதியிருந்தேன்.

"இதை இன்றிரவு 12:05 மணிக்கு ஒலியேற்றுக."

அதைப் பார்த்ததும் கொஞ்சம் பயந்துவிட்டேனோ என்னவோ? வியர்வை லேசாக நெற்றியில் துளிர்த்தது. இது என்ன சதியோ? அல்லது என் ஆழ்மனம் எனக்கு வைக்கும் பொறியோ? மனித மனம் ஒரு விசித்திரமான மாயம். நாம் எதை நம்ப மறுக்கிறோமோ, அதை நம் ஆழ்மனம் நம்பவைத்துவிடும்.

நான் கடிகாரத்தைப் பார்த்தேன்.

சரியாக 12:00 ஆகியிருந்தது.

இன்னும் ஐந்து நிமிடங்கள்.

இந்த ஐந்து நிமிடங்களில் என் வாழ்நாளில் நடந்த பல சம்பவங்கள் ஒரு சினிமா ரீலைப் போல கண்முன்னே ஓடி மறைந்தன. நான் ஏன் இந்த அமானுஷ்யப் பயணத்தைத் தொடங்கினேன்?

கடிகாரம் சரியாக 12:05 ஐக் காட்டியது.

என் இதயத் துடிப்பு எகிறியது. நான் அந்த டேப் ரெக்கார்டரின் ப்ளே பொத்தானை அழுத்தப் போகும் அந்தத் தறுவாயில், வீட்டின் வரவேற்பறையில் யாரோ மெல்ல நடக்கும் சத்தம் கேட்டது.

அந்தப் பழைய காலத்து லெதர் செருப்புச் சத்தம்!

அதுவரை என் அறைக் கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்போது எப்படித் திறந்தது?

அந்த டேப் ரெக்கார்டரிலிருந்து ஒரு மெல்லிய ஹிஸ் சத்தத்துடன் என் சொந்தக் குரலே ஒலிக்க ஆரம்பித்தது: "உங்களைத்தான் எதிர்பார்த்தேன். உள்ளே வாருங்கள்!"

நான் டேப் ரெக்கார்டரை ஆப் செய்ய முயன்றேன். ஆனால், என் விரல்கள் அந்தப் பொத்தானை அழுத்த மறுத்தன. அது தானாகவே சுழன்றுகொண்டிருந்தது.

வெளிச்சமில்லாத அந்த வரவேற்பறையின் இருளில், ஓர் உருவம் என் அறையை நோக்கி நடந்து வந்தது. காலடிச் சத்தம் இப்போது என் வாசற்படியில் நின்றுவிட்டது.

என் கையில் இருந்த பேனா நழுவிக் கீழே விழுந்தது.

அந்த உருவம் நிழலாக என் மேஜை விளக்கின் வெளிச்சத்திற்குள் நுழைந்தது. யாரது என்று பார்க்க நிமிர முயன்றேன். ஆனால், என் கழுத்து ஒரு இன்ச் கூட நகரவில்லை. அப்போது, அந்த உருவம் என் காதுக்கு அருகில் குனிந்து, மிக மெல்லிய குரலில் சொன்னது, "நீங்கள் யாருக்காக இந்தத் தொடரை எழுதினீர்கள் என்று நினைக்கிறீர்கள்? நான் உங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது, எழுதுவதை நிறுத்துங்கள்!"

சரியாக அந்த நொடியில், என் மடிக்கணினியில் இருந்த ஸ்கிரீன் திடீரென அணைந்தது. சிறிய விளக்கின் வெளிச்சமும் டொக். முழு இருள்.

என் கைபேசி திடீரென ரிங் ஆனது. திரையில் ஒளிரும் பெயர், "நானேதான்!"

***

இதைப் படிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

ஆகா, அமானுஷ்ய மறுபடியும் ஆரம்பித்து விட்டது என்றுதானே? அல்லது இதற்கான சஸ்பென்ஸை உடைத்தாக வேண்டும் என்றுதானே?

ஏன் இதை எழுதினேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அமானுஷ்யங்கள் எப்படி எழுதப்படுகின்றன என்பதை விளக்குவதை விட, அதை எழுதியவனே இப்படி எழுதிக் காட்டினால் அதிலுள்ள உண்மை உங்களுக்குப் புலப்பட்டு விடும் என்பதற்காகத்தான்.

உண்மையில், மேலே சொன்ன எதுவும்எனக்கு நடக்கவுமில்லை, என் நெற்றி வியர்க்கவும் இல்லை. எல்லாம் அமானுஷ்யத்தைக் கூட்டுவதற்காக இட்டுக் கட்டி எழுதப்படுவதைதான். நம்மைச் சுற்றிச் சொல்லப்படும் அமானுஷ்ய கதைகளும், வதந்திகளும் கூட இப்படி இட்டுக் கட்டி சொல்லப்படுபவைதான்; பரப்பப்படுபவைதான்.

நம்மைச் சுற்றிக் காணப்படும் அமானுஷ்யங்கள் அனைத்தும் இப்படி சொல்லப்பட்டு அல்லது எழுதப்பட்டு அதன் மூலம் கை, கால், மூக்கு, முழி வைத்துப் பெரிதாக்கப்பட்டவைதான். அறிவியலின் துணை கொண்டு ஆராய்ந்து பார்த்தால் அத்தனையும் டுபாக்கூர் என்பது புலப்பட்டு விடும்.

ஒரு வகையில், அறிவியல் எல்லாவற்றையும் அளந்துவிட்டது என்று நினைக்கிறோம். குவாண்டம் இயற்பியல், பிரபஞ்சத்தின் விளிம்பு, வெளிக்கோள்களுக்குப் பயணம் என்று மனிதனின் அறிவு எங்கேோ சென்றுவிட்டது. ஆனாலும், நள்ளிரவில் வீட்டின் மூலையில் கேட்கும் விசித்திரமான காலடிச் சத்தம், காரணமின்றி மேஜையிலிருந்து கீழே விழும் பேனா, இரவில் நெஞ்சை அடைக்கும் அந்தத் திடீர் குளிர் காற்று இவையெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. அறிவியல் என்னதான் விளக்க முயன்றாலும், மனதின் பயமும் சந்தேகமும் எல்லாவற்றையும் வென்று விடுகிறது.

அறிவியல் என்பது ஓர் ஒளிவிளக்கு. அது எதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதோ, அதை நாம் பார்க்கிறோம். அந்த வெளிச்சத்திற்கு வெளியே இருப்பதுதான் அமானுஷ்யம். ஆனாலும் அது அமானுஷ்யம் அல்ல; தற்போதைக்கு நம் கண்களுக்குப் புலப்படாத அறிவியல். அவ்வளவுதான். கொஞ்சம் அறிவியலின் துணையோடு ஆராய்ந்தால் அந்த அமானுஷ்யம் புட்டுக் கொள்ளும்.

கிட்டதட்ட 99 நாட்கள் நாம் அமானுஷ்யங்களோடு பயணித்திருக்கிறோம். நாளை நூறாவது நாள். அந்தத் தலைப்புக் கூட அமானுஷ்யமாக இருக்கிறது இல்லையா!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Monday, 28 September 2026

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 30

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 30

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

வேனிஷிங் ஹிட்ச்ஹைக்கர்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 98

வேனிஷிங் ஹிட்ச்ஹைக்கர்

காரில் தனியாகப் பயணம். இரவு நேரம். வழியில் ஒரு பெண் லிப்ட் கேட்கிறாள். ஏற்றிச் செல்கிறீர்கள். திடீரென்று காணாமல் போய்விடுகிறாள். தேடினால், அவள் பல ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் விபத்தில் இறந்தவள் என்கிறார்கள். இதுதான் வேனிஷிங் ஹிட்ச்ஹைக்கர். உலகெங்கும் பரவியிருக்கும் அமானுஷ்ய நகர்ப்புறக் கட்டக்கதை இது. மனித மூளையின் பயமும் கற்பனையும் சேர்ந்து உருவாக்கும் மாயம்!

இப்படிப்பட்ட கட்டுக்கதைகள் வெறும் சாதாரண வதந்திகள் மட்டும் அல்ல; அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு குளோபல் விசித்திரம். இந்த விசித்திரப் பயணங்களில் பல சுவாரஸ்யமான பரிமாணங்கள் உண்டு.

மிகவும் பிரபலமாக பேசப்படும் கதை இதுதான். நள்ளிரவில் ஒரு பெண் லிப்ட் கேட்பாள்; தான் செல்ல வேண்டிய முகவரியைக் கூறி அங்கே இறக்கிவிடச் சொல்வாள். ஆனால், அந்த குறிப்பிட்ட வீட்டின் முன் சென்று கார் கதவைத் திறந்து பார்த்தால், அவள் அங்கே இருக்க மாட்டாள். குழப்பத்துடன் சென்று வீட்டின் கதவைத் தட்டி விசாரித்தால், வீட்டார் மிகவும் இயல்பாக, "அது எங்கள் மகள்தான்; ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் நடந்த விபத்தில்தான் அவள் இறந்துவிட்டாள்." என்று கூறுவார்கள். இவ்வகை ஆவிகள் அட்ரஸ் கொடுக்கும் வகையறாவைச் சேர்ந்தவை. மனித மனதின் பயமும் சில சம்பவக் கோர்வைகளும் எதேச்சையாக இணைந்து கொள்வதுதான் இது போன்ற அமானுஷ்ய கதைகளின் பின்னணி.

இரவு நேர விருந்து ஒன்றில் அழகிய பெண்ணைச் சந்தித்து, அவளை வீட்டில் கொண்டு போய்விடுவதாகக் காரில் ஏற்றிச் செல்லும் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி பயங்கரமானது. பாதியிலேயே அவள் மறைந்துவிடுவாள். அவள் அளித்த முகவரியைத் தேடிச் சென்றால், அது ஒரு சுடுகாடாக இருக்கும். மேலும், அங்கே ஒரு கல்லறையின் மேல் அவள் அணிந்திருந்த கோட் அல்லது செயின் கிடக்கும். பதின்வயது இளைஞர்களை அச்சுறுத்துவதற்காகவே பரப்பப்பட்ட ஒரு நீதிபோதனை கதையாகவே இது பார்க்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் பேர்ல் ஹார்பர் அருகே ஒரு வயதான பாட்டி லிப்ட் கேட்டதாக ஒரு வரலாறு உண்டு. காரை விட்டு இறங்கும் போது, அதற்கான கட்டணமாகப் பணத்திற்குப் பதிலாக ஒரு ஜோசியம் கூறினார், "அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு பிணத்தைப் பார்ப்பாய்; அடுத்த ஆறு மாதத்தில் ஹிட்லர் இறந்துவிடுவான்." என்றார். சொன்னபடியே அதைக் கேட்டவருக்கு அனைத்தும் நடந்தன, அந்தப் பாட்டியும் மறைந்துபோனார். சில நேரங்களில் இப்படிக் குத்துமதிப்பாக அடித்து உண்மையாகி விடுவதும் உண்டு. எதுவும் இந்த உலகில் நடக்காது என்பதில்லை. எல்லாவற்றிற்கும் சாத்தியக்கூறுகள் உண்டு.

ஹவாய் தீவுகளில் பெலே என்ற எரிமலைக் கடவுள் இப்படித்தான் லிப்ட் கேட்டு வருவார் என்ற ஐதீகமும் நிலவுகிறது. கதைகளை எப்படி வேண்டுமானாலும் கட்டி விடலாம். அதற்கு கை, கால், வாய், மூக்கு, நாக்கு வைப்பதெல்லாம் மனிதர்களின் கற்பனைகளே.

இப்போது கேள்வி இதுதான். இந்த விசித்திரக் கதைகளில் அதிகமானவை ஏன் பெண்களையே மையமாகக் கொண்டுள்ளன? இரவில் தனியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற மனிதனின் இயல்பான குணம் இதற்கு ஒரு உளவியல் காரணமாகச் சொல்லப்படுகிறது. விபத்துகளில் அகால மரணமடைந்தவர்கள், தாங்கள் போய்சேர வேண்டிய இலக்கை நோக்கி இன்றும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த நடுகாட்டு அல்லது சுடுகாட்டுப் பயணங்கள்.

சாலையில் தனியாக நிற்பவர்களுக்கு உதவுவது நற்குணம்தான். ஆனால், ஜிபிஎஸ்  இல்லாமலேயே சுடுகாட்டுக்குச் சரியாக வழி காட்டும் ஒரு பயணியைச் சந்தித்தால், அது கூகுள் மேப்ஸ் கோளாறு அல்ல. மனதின் பயம் செய்கின்ற வேலை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, அதை வைத்து அமானுஷ்ய கதைகளை அவிழ்த்து விட்டு விடக் கூடாது!

இன்று இரவு நீங்கள் கார் ஓட்டும்போது யாராவது லிப்ட் கேட்டால், துணிவிருந்தால் வண்டியை நிறுத்துங்கள். துணிவில்லை என்றால் தயங்காமல் ஆக்சிலரேட்டரை அழுத்துங்கள்! அநாவசியமாக வண்டியை நிறுத்தி ஒரு பேய்க் கதையைப் பரப்புவதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள்?

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 29

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 29

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

Sunday, 27 September 2026

பின் இருக்கை பிரமைகள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 97

பின் இருக்கை பிரமைகள்!

ஈ.சி.ஆர் சாலையில் கோவிந்த் முழி பிதுங்கி நின்ற அதே நள்ளிரவில், கோட்டூரில் வீடொன்றில் தமிழரசனும் கணேசும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

கணேஷ் ஆரம்பித்தான். "தமிழ்! நீ நேத்து சொன்ன அந்த வேனிஷிங் ஹிட்ச்ஹைக்கர் சம்பவங்கள் இருக்குல்ல? அதுல ஒரு லாஜிக்கே இல்ல. ஆவிக்கு ஏன் கார்ல லிப்ட் கேக்கணும்? அது பாட்டுக்குப் பறந்து போயிருக்கலாமே?"

தமிழரசன் குறும்புத்தனமாகப் புன்னகைத்தபடி சொன்னான், "கணேஷ்! உனக்கு ஒரு பேசிக் சயின்ஸ் புரியலை. ஆவிகளுக்கும் தெர்மோடைனமிக்ஸ் விதிகள் பொருந்தும். அதுங்களுக்குனு ஒரு எனர்ஜி தேவை. அது சொந்தமா டிராவல் பண்ணினா பேட்டரி சீக்கிரமா டவுன் ஆயிடும். அதனாலதான் ஷேர் ஆட்டோ, டாக்ஸினு பார்த்து ஏறுது."

"டேய் தமிழ்! காமெடி பண்ணாதே. இதுல ஏதோ ஒரு சைக்கலாஜிக்கல் டிஸ்ஆர்டர் இருக்கு. மனுஷனோட மூளை ஹாலுசினேஷன் ஸ்டேஜுக்குப் போகும்போதுதான் இந்த மாதிரி நிழல்கள்லாம் கண்ணுக்குத் தெரியும்." என்று கணேஷ் தன் லேப்டாப்பைத் தட்டினான்.

அப்போது திடீரென்று மேஜை மீது இருந்த கணேஷின் அலைபேசி ரீங்காரமிட்டது. மணி நள்ளிரவு இரண்டரையை நெருங்கிக் கொண்டிருந்தது.

கணேஷ் போனை எடுத்து காதில் வைத்தான். மறுமுனையில் கோவிந்தின் நடுங்கிய குரல், "தமிழா? கணேஷா? யார் போன்ல? நான் ஈ.சி.ஆர் ரோட்ல மாட்டியிருக்கேன். பேய். பேய் என்னைக் கொல்றதுக்கு வருதுப்பா!"

கணேஷ் போனை ஸ்பீக்கருக்கு மாற்றினான். "டேய் கோவிந்த்! என்ன இது சின்ன பிள்ளையாட்டம்? நாம பாக்காத பேயா? எல்லாம் சுத்த ஹம்பக். ஈ.சி.ஆர்ல பேய் இருக்குன்னா, அது ரோட் டேக்ஸ் கட்டிச்சா இல்லியா? இல்ல அரசாங்கத்தை ஏமாத்திக்கிட்டு அது இருக்குதா என்ன?"

மறுமுனையில் கோவிந்த் அழுதுகொண்டே கத்தினான்: "யோவ் கணேஷ்! நான் ஜோக் சொல்லல. பின்சீட்ல உக்காந்திருந்த பொண்ணு காணாம போயிட்டா. சீட் மேல 1996 டேட் போட்ட ரசீது ஒண்ணு கிடக்கு. இப்போ காரோட முன்பக்கக் கண்ணாடி மேல யாரோ கையால தட்டுற சத்தம் கேக்குது!" தடாலென்று போன் கட் ஆனது.

கணேஷ் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். "இந்தக் கோவிந்துக்குப் பேய்கிட்டே போய் மாட்டிக்கிறதே வேலையா இருக்கு. அவன் பேசாம ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றதுக்கு பேய், பிசாசு வெச்சு பிசினஸ் பண்ணலாம்."

அதற்கு மேல் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று, தமிழரசன் தயாரானான். "கிளம்பு கணேஷ். ஆவி இருக்கோ இல்லையோ, இப்போதைக்குக் கோவிந்தைக் காப்பாத்த வேண்டியது நம்ம வேலை!"

இரவு மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. கணேசும் தமிழரசனும் ரெனால்ட் டிரைபர் காரில் ஈ.சி.ஆர் சாலையின் இருண்ட பிரதேசத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தார்கள். காரின் ஸ்டீயரிங் வீலை இறுகப் பற்றிக் கொண்டு கணேஷ் ஓட்ட, தமிழரசன் கூகுள் மேப்ஸை ஆவேசமாகத் தட்டிக் கொண்டிருந்தான்.

"கணேஷ்! கோவிந்த் போன் பண்ணி லொகேஷன் அனுப்பியது அந்தப் பழைய சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்கிற பாலம்தான். வண்டியைத் கொஞ்சம் வேகமா விடு!" என்றான் தமிழரசன்.

"தமிழரசன்! டென்ஷனைக் குறை. அந்த ஆவிக்குப் பின்சீட்டுல உட்கார்ந்து பழக்கம் இருக்கோ இல்லையோ, நமக்கு இந்த மாதிரி ஊதாரித்தனமான நள்ளிரவுப் பயணங்கள் ரொம்பப் பழக்கம். அதுவும் இந்த விஜயராமன் அமானுஷ்யங்கள் பத்தி கட்டுரை எழுத ஆரம்பிச்சதிலேந்து இதே வேலையா போச்சு!" என்று கணேஷ் தன் டிரேட்மார்க் புன்னகையுடன் கியரை மாற்றினான்.

சரியாக மூன்று மணி ஐந்து நிமிடம். கோவிந்தின் கார் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கே கோவிந்த் கதவடைக்கப்பட்ட தனது காருக்குள் நடுங்கியபடி, ஸ்டீயரிங் மீது தலையை வைத்துக் குப்புறக் கிடந்தான்.

கணேசும் தமிழரசனும் காரை விட்டு இறங்கி, கோவிந்தின் காரைத் தட்டினார்கள். கதவைத் திறந்த கோவிந்த், வியர்வை கொட்டக் கத்தினான், "டேய் கணேஷ்! டேய் தமிழ்! அவங்க மறுபடியும் வந்தாங்க! கண்ணாடில தட்டிட்டுப் போனாங்க."

தமிழரசன் காரின் பின்சீட்டை டார்ச் லைட் அடித்துப் பார்த்தான். அங்கே எதுவுமில்லை. ஆனால், இருக்கையின் மீது ஒரு பழைய, கிழிந்த மஞ்சள் நிறப் பிளாஸ்டிக் கவரும், அதன் மேல் 1996ஆம் ஆண்டுத் தேதியிட்ட அந்த ரசீதும், ரோஜாக்களும் அப்படியே கிடந்தன.

தமிழரசன் அந்த ரசீதைத் தன் கையில் எடுத்து, பாக்கெட்டில் இருந்த மேக்னிபைங் கிளாஸை வைத்து உற்றுப் பார்த்தான். பிறகு சிரித்துக்கொண்டே சொன்னான், "கோவிந்த்! நீ தப்பிச்சிட்ட! இது பேயும் இல்ல, பிசாசும் இல்ல. இது சுத்தமான மனித கையெழுத்து. பத்து மணி நேரத்துக்குள்ளதான் எழுதியிருக்கணும். முப்பது வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் கிடையாது!"

கோவிந்த் அதிர்ச்சியோடு விழித்தான். "என்ன சொல்றே தமிழ்? நான் கண்ணால பார்த்தேனே!"

தமிழசரன் விளக்க ஆரம்பித்தான். "இந்த ரசீதுல இருக்கிற மை இன்னைக்கும் அழியாம இருக்குன்னா, இது முப்பது வருஷத்துக்கு முந்திய பழைய ரசீது கிடையாது. ஏதோ ஹார்பர் டீட்டெய்லிங்கிற்காக ரசீது பேப்பர்லயே அந்தப் பொண்ணு நோட் பண்ணி வெச்சிருக்கிறதா இருக்கணும். அந்தப் பொண்ணு ஹார்பர் டியூட்டியால அன்டைம்ல லிப்ட் கேட்ட வந்த பொண்ணுதானே."

"அந்த ரோஸஸ்?"

"அது உனக்குக் கொடுக்க வந்ததுன்னு நினைச்சியாக்கும்? பொண்ணுங்களுக்கு ரோஜாப் பூக்கள் பிடிச்சது இல்லையா? வர்ற வழியில வாங்கியிருக்கலாம். அல்லது முன்னாடியே வாங்கி வெச்சிருக்கலாம். அது ஏன் ஸ்கூட்டியோட கிடக்கணும்ன்னு கையோடு எடுத்து வந்திருக்கலாம்."

"அப்ப அந்தப் பெண் எங்க போனா?" என்று கோவிந்த் பதறினான்.

"நீ வண்டியை எண்பதுல இருந்து நூற்றி இருபதுக்கு ஸ்பீடு ஏத்தின உடனே, அவ பயந்துபோய் அடுத்த டர்னிங்ல இருக்கிற பெட்ரோல் பங்க் பாத்ரூம் பக்கத்துல இறங்கி ஓடியிருப்பா! நீதான் கற்பனை பண்ணி ஒரு த்ரில்லர் மூவியே ஓட்டிட்ட." என்றான் கணேஷ்.

"அப்போ இதுவும் பேய் இல்லையா?" என்றான் கோவிந்த் அப்பாவியாக.

"அப்போன்னு இல்ல, எப்பவும் இந்த உலகத்தில் பேய்கள் இல்ல கோவிந்த். ஆனா, நடுராத்திரியில தனியா கார் ஓட்டும்போது வர்ற பயம் இருக்கே, அதுதான் இருக்குறதுலயே பெஸ்டான பேய்ப் படம்!" தமிழரசன் சொல்ல, கோவிந்த் சிரிக்க ஆரம்பித்தான்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****