Friday, 17 January 2025

பணிவே அழகு – பணிவின் பெருமையை விளக்கும் கதை!

பணிவே அழகு – பணிவின் பெருமையை விளக்கும் கதை!

ஒரு மனிதருக்கு எது அழகு என்று கேட்டால் எதைச் சொல்வீர்கள்?

பணம்தான் அழகா? எவ்வளவுதான் பணம் இருந்தாலும் பணிவுதான் அழகு.

வீரம்தான் அழகா? என்னதான் வீரம் இருந்தாலும் பணிவுதான் அழகு.

அறிவுதான் அழகா? எவ்வளவுதான் அறிவு இருந்தாலும் பணிவுதான் அழகு.

பணிவைப் போன்ற அழகு இந்த உலகில் எதுவுமில்லை. அதனால்தான் திருவள்ளுவர், ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்கிறார். பணிவுடையன் இன்சொலன் ஆதலே அணி என்றும் கூறுகிறார்.

பணிவுக்கு எதிரானதுதான் ஆணவம்.

ஆசைப்படுவதைக் கூட மனிதர்கள் ஒத்துக் கொள்வார்கள். தாம் ஆணவமாக இருக்கிறோம் என்பதை எந்த மனிதரும் ஒத்துக் கொள்ள மாட்டார்.

பிறப்பதற்கும் இறப்பதற்கும் இடையே வாழ்வது சில காலம். இந்த சில காலத்தில் எதற்கு ஆணவம்? எதற்கு கர்வம்? எதற்கு அகந்தை? வல்லவனுக்கு வல்லவன் பூமியில் உண்டு அல்லவா! இதை விளக்கும்படியான கதை ஒன்று.

ஓர் ஊரில் மெத்த படித்த மேதாவி ஒருவர் இருந்தார். பல நூல்களை அவர் படித்திருந்தார். அந்த ஊரில் எந்த சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்பதை அவ்வூர் மக்கள் பெருமையாகக் கருதினர். இதனால் அவருக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. தனக்குத் தெரியாத விசயங்களே இந்த உலகில் இல்லை என்று நினைத்துக் கொண்டார்.

இந்த எண்ணம் அவருக்கு அறிவுச் செருக்கையும் உண்டாக்கி விட்டது. இந்த அறிவுச் செருக்கினால் அவர் பார்ப்போரிடமெல்லாம் பதில் தெரியாத கேள்விகளைக் கேட்பதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டார். இவர் கேள்வி கேட்டு எதிரில் இருப்போர் பதில் தெரியாமல் விழிப்பதைப் பெருமையாகவும் கருத ஆரம்பித்து விட்டார்.

அவரது அறிவாற்றலை அறிந்த பலரும் அவரை பல ஊர்களிலும் அழைத்துப் பேச செய்தனர். அப்படி ஒரு முறை வெளியூரில் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் நின்று விட்டது.

எங்கும் ஒரே இருட்டு. அப்போது ஒரு சிறுமி ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வந்தாள். அந்தச் சிறுமியைக் கேள்வி கேட்டு விழிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார் அந்த மேதாவி மனிதர்.

அந்தச் சிறுமியிடம் இருட்டாக இருந்த இடத்தில் நீ மெழுகுவர்த்தியை ஏற்றினாய். வெளிச்சம் வந்தது. இந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது என்று கேட்டார்.

உடனே அந்தச் சிறுமி அந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டாள். இப்போது அந்த மேதாவியைப் பார்த்து, மெழுகுவர்த்தியை ஏற்றியதும் வெளிச்சம் வந்தது. இப்போது அணைத்ததும் வெளிச்சம் போய் விட்டது.  அந்த வெளிச்சம் எங்கே போனது என்று கேட்டாள் அந்தச் சிறுமி.

மேதாவி திகைத்து விட்டார். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிக்க ஆரம்பித்து விட்டார்.

அப்போதுதான் இந்த உலகில் தனக்குத் தெரியாத விசயங்களும் இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

தனக்கு எல்லாமும் தெரியும் என்ற ஆணவத்தில் மற்றவர்களைப் புண்படுத்துவது தவறு என்பதைப் புரிந்து கொண்டார்.

கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு என்பதையும் தெளிந்து கொண்டார்.

இந்தக் கதை பணிவுதான் மனிதருக்கு அழகு என்பதை உணர்த்துகிறது அல்லவா.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

Thursday, 16 January 2025

பணம் குறித்த ஆறு பழக்கங்கள்!

பணம் குறித்த ஆறு பழக்கங்கள்!

“ஆறு மனமே ஆறு – அந்த  

ஆண்டவன் கட்டளை ஆறு”

என்றார் கவியரசு கண்ணதாசன்.

அது போல பணம் குறித்து நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்களும் ஆறு உள்ளன. இந்த ஆறு பழக்கங்களையும் கடைபிடித்தால் உங்களிடம் இருக்கும் பணம் பெருகுவது உறுதி. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

1. வருங்கால முதலீடு

சேமிப்பே முதல் செலவு. எனவே, சேமிப்பிற்கான தொகையை எடுத்து வைத்து விட்டு மீதித் தொகையைச் செலவுக்கு ஒதுக்குங்கள். சேமித்த தொகையை உங்களது வளமான வருங்காலத்துக்கு முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த மற்றும் புரிந்த சரியான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். புரியாத திட்டங்களில் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

2. அவசரகால நிதி

உங்களது ஒரு மாதச் செலவைப் போல ஆறு மடங்கு தொகையை அவசரகால நிதியாக சேமித்து வையுங்கள். உங்களிடம் அவசரகால நிதி இல்லையென்றால் இன்றிலிருந்து அதற்கான தொகையைச் சேமிக்கத் தொடங்கி விடுங்கள். ஏனென்றால், அவசரகால நிதி இல்லாததே ஒருவரை அவசரத்துக்குக் கடன் வாங்க வைத்து, அதைத் தொடர்ந்து எதற்கெடுத்தாலும் கடன் வாங்குவதையே அவரது பழக்கமாக்கி விடுகிறது.

3. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு

உங்களது ஆண்டு வருமானத்தைப் போல 15 மடங்கு தொகைக்கு ஆயுள் காப்பீடு (Low Premium, More Coverage, Term Life Insurance) எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத நிலைமைகளைச் சமாளிக்க இவ்விரண்டும் எப்போதும் அவசியம் தேவைப்படுவதாகும்.

4. கடன் தவிர்த்தல்

பணத்தைச் சேர்த்த பின்பே பொருளை வாங்க வேண்டும். கடனில் வாங்க திட்டமிட வேண்டாம். கடன் அட்டைக் கடன் (கிரெடிட் கார்ட்), தனிநபர் கடன் (பர்சனல் லோன்) போன்றவை வேண்டவே வேண்டாம். ஏனென்றால், எந்தக் கடனாக இருந்தாலும் அது உங்கள் செல்வ வளத்தை வட்டியெனும் பெயரில் சுரண்டுகிறது.

5. திட்டமிட்டுப் பணம் சேர்த்தல்

பிள்ளைகளின் கல்விச் செலவு, திருமணச் செலவு,சொந்த வீடு, ஓய்வுகால நிதி போன்றவற்றிற்குத் திட்டமிட்டு மாதந்தோறும் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம், இரண்டாயிரம் என்று உங்கள் வருமானத்துக்கு ஏற்ப பகுத்துப் பணத்தைத் தொடர் வைப்பு அல்லது பரஸ்பர நிதியில் முதலீடு செய்து வாருங்கள். சிறிய தொகை என்றாலும், சிறு துளி பெரு வெள்ளம் ஆவது போல இருபது ஆண்டுகள் கழித்து நீங்கள் மாதந்தோறும் கட்டி வந்த சிறுதொகை பெரும் தொகையாக ஆகியிருக்கும்.

6. வருமான வரியைத் திட்டமிடுதல்

வருமான வரியை நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே திட்டமிட்டு, அதற்கேற்ப வரிச் சலுகை பெறும் வகையில் முதலீடுகள் மற்றும் வரவு செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வருமான வரியைத் திட்டமிட்டுக் கொள்ளாவிட்டால், வரி செலுத்தும் மாதத்தில் அம்மாத ஊதியம் முழுவதையும் கூட வருமான வரியாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். இது அம்மாதத்தைய உங்களது குடும்ப வரவு – செலவைப் பெரிதும் பாதிக்கும்.

மேற்கண்ட ஆறு பழக்கங்களையும் கடைபிடித்து, பணம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமலும், நிறைந்த செல்வத்தைப் பெற்ற பணக்காரராகவும் வாழுங்கள்.

நீங்கள் பணக்காரராக வாழ வாழ்த்துகள்!

*****

Wednesday, 15 January 2025

எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்ளலாம்?

எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்ளலாம்?

ஒருவருக்கு ஒரு வங்கிக் கணக்கே போதுமானது. அப்போதுதான் தனது வங்கிக் கணக்கை நிர்வகிப்பது அவருக்கு எளிதாக இருக்கும். இந்த வங்கிக் கணக்கையே சம்பளம் வாங்குவதற்கான வங்கிக் கணக்காகவும் வைத்துக் கொள்ளலாம்.

இருப்பினும் மாறி வரும் இக்கால சூழ்நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளையும் ஒருவர் வைத்துக் கொள்ளலாம். அப்படி எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்கிறீர்களா? அதற்கான பதிலைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

ஒருவர் சம்பள வங்கிக் கணக்குத் தவிர, தான் பணியாற்றும் பகுதிக்கு அருகில் உள்ள வங்கியில் இரண்டாவதாக ஒரு கணக்கை வைத்துக் கொள்ளலாம். இதனால் பணியாற்றும் இடத்தில் அவசரமாகப் பணம் எடுப்பது, செலுத்துவது மற்றும் இன்னபிற வங்கி சார்ந்த சேவைகளைப் பெறுவது எளிதாக இருக்கும். இந்த வங்கிக் கணக்கையே அவசரகால வங்கிக் கணக்காகவும் வைத்துக் கொண்டு, இக்கணக்கிற்குப் பணம் எடுக்கு அட்டை (ஏடிஎம் அட்டை), ஜிபே, இணைய வசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

பணியாற்றும் இடமும், வசிக்கும் வீடும் வேறு வேறு இடங்களில் இருக்கும் போது வீட்டிற்கு அருகில் இருக்கும் வங்கியில் மூள்றாவதாக ஒரு வங்கிக் கணக்கும் வைத்துக் கொள்ளலாம். இதற்கும் பணம் எடுக்கும் அட்டை (ஏடிஎம் அட்டை), ஜிபே, இணையவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு வீட்டுக் கணக்குத் தொடர்பான பரிவர்த்தனைகளை இதில் செய்து கொள்ளலாம். இணையரின் பொறுப்பில் கூட இவ்வங்கிக் கணக்கை ஒப்படைத்து, இருவருமாக இதைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ப கூட்டு வங்கிக் கணக்காகக் (Joint Account) கூட இவ்வங்கிக் கணக்கை வைத்துக் கொள்ளலாம். பணிக்குச் செல்லாத நாட்களில் ஏதேனும் பணப் பரிமாற்றங்கள் செய்ய வேண்டுமானால் வீட்டிற்கு அருகில் உள்ள இந்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆக ஒருவருக்கு,

1. சம்பள வங்கிக் கணக்கு,

2. பணியாற்றும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கியில் ஒரு வங்கிக் கணக்கு,

3. வீட்டுக்கு அருகே உள்ள வங்கியில் ஒரு வங்கிக் கணக்கு

என மூன்று வங்கிக் கணக்குகள் போதுமானது.

அதற்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாதா என்றால், வைத்துக் கொள்ளலாம். அதற்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை நீங்கள் பராமரிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கணக்கிற்கும் வருடாந்திர கட்டணம், குறுஞ்செய்தி கட்டணம், பராமரிப்புக் கட்டணம் என்று வங்கிக் கட்டணங்களை ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ செலுத்த வேண்டியிருக்கும். அது வீண்கட்டணம்தானே?

ஆக, எத்தனை வங்கிக் கணக்குகளை வைத்துக் கொள்ளலாம் என்று உங்கள் தேவையைக் கருத்தில் கொண்டு யோசித்து, ஒரு நல்ல முடிவை எடுங்கள். தேவையில்லாத வங்கிக் கணக்குகளை முடித்துக் கொள்ளுங்கள்.

*****

Tuesday, 14 January 2025

திருக்குறள் – உங்களுக்குத் தெரியுமா?

திருக்குறள் – உங்களுக்குத் தெரியுமா?

1) ஏழு என்ற எண்ணுப் பெயர் திருக்குறளில் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது?

எட்டு முறை.

 

2) ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ எனப் பாடியவர் யார்?

பாரதிதாசன்.

 

3) திருக்குறட்பாக்களில் அனிச்ச மலர் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது?

நான்கு முறை.

 

4) திருக்குறட்பாக்களில் யானை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது?

எட்டு முறை.

 

5) திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் கொண்ட இயல் எது?

ஊழியல்.

 

6) திருக்குறளை வக்கிரபோலி மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?

கிட்டு சிரோன்மணி.

 

7) திருக்குறளில் உயிரினங்கள் தொடர்பான சொற்கள் இடம் பெற்றுள்ள குறள்களின் எண்ணிக்கை எத்தனை?

46.

 

8) திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துகள் எவை?

ளீ, ங.

 

9) திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

வேலூர்.

 

10) கூகையும் காக்கையும் இடம் பெற்றுள்ள திருக்குறளின் எண் எது?

481.

 

11) திருக்குறள் – இலக்கணக் குறிப்பு தருக.

அடையடுத்த கருவியாகு பெயர்.

 

12) குறிப்பறிதல் இடம் பெற்றுள்ள அதிகார எண்கள் யாவை?

71, 110.

 

13) பற்றுக… எனத் தொடங்கும் குறளில் பற்று எனும் சொல் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?

ஆறு முறை.

 

14) ஒழிபியலில் இடம் பெற்றுள்ள அதிகாரங்கள் எத்தனை?

13.

 

15) உதடு ஒட்டாத குறளின் எண் யாது?

341.

Monday, 13 January 2025

பப்பெட் வழியில் முதலீடு செய்ய பத்து விசயங்கள்!

பப்பெட் வழியில் முதலீடு செய்ய பத்து விசயங்கள்!

முதலீட்டு உலகில் வாரன் பப்பெட்தான் பலருக்கும் ஆதர்சம். பப்பெட் எப்படி பப்பெட் ஆனார் என்பதற்கான பக்காவான பத்து வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை முதலீட்டுக்கான விதிமுறைகள் என்றே சொல்லலாம். அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போமா?

1. புரிந்து கொண்டு முதலீடு செய்தல் :

உங்களுக்குப் புரிந்த விசயங்களில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். புரியாத விசயங்களில் முதலீடு செய்யாதீர்கள்.

2. நீண்ட காலமுதலீட்டில் கவனம் வைத்தல் :

முதலீடு என்பதே நீண்ட காலத்துக்கானதுதான். குறுகிய கால முதலீடு என்பது ஒரு நேரத்தில் சூதாட்டமாக மாறி விடும்.

3. சரியான முதலீடுகளைத் தேர்வு செய்தல் :

எந்த ஒரு முதலீட்டையும் நீண்ட காலத்தில் எப்படி வளரும்? எப்படி லாபம் தரும்? என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி தேர்வு செய்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

4. பொறுமையோடும் ஒழுங்கோடும் இருத்தல் :

குழந்தை பிறந்த உடனே பெரியவராகி விடாது. விதை விதைத்த உடனே மரமாகி விடாது. முதலீடும் அப்படியே. அது பெரியதாக வளரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். முதலீட்டை ஓர் ஒழுங்கோடு பராமரிக்க வேண்டும்.

5. உள்ளார்ந்த மதிப்பை அறிதல் :

சந்தையின் மதிப்பை வைத்து ஒரு பொருளின் மதிப்பைத் தீர்மானித்து விடக் கூடாது. கத்தரிக்காயின் விளைச்சல் அதிகரித்தால் விலை குறையும். விளைச்சல் குறைந்தால் விலை அதிகரிக்கும். இந்த இரண்டு விலையும் கத்தரிக்காயின் விலை கிடையாது. கத்தரிக்காய்க்கு என்று கொடுக்க வேண்டிய ஒரு விலை இருக்கிறது இல்லையா? அதுதான் அதன் உள்ளார்ந்த மதிப்பு. இந்த மதிப்பை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.

6. விலை இறக்கத்தின் போது பொறுமையாக இருத்தல் :

தங்கமே ஆனாலும் ஒரு காலத்தில் கடுமையான விலை வீழ்ச்சியைச் சந்திக்கும். அப்போது விலை இறங்கி விட்டதே என நினைத்து இருக்கும் தங்கத்தை எல்லாம் விற்று விடக் கூடாது. மாறாக, தங்கத்தை வாங்குவதற்கு அதுவே அருமையான சந்தர்ப்பம் என்பதைப் புரிந்து கொண்டு தங்கத்தை வாங்கிக் குவிக்க வேண்டும்.

7. பணப்புழக்கம் மற்றும் லாபத்தைக் கவனித்தல் :

நீங்கள் எந்த ஒன்றில்முதலீடு செய்ய நினைத்தாலும் அதன் பணப்புழக்கத்தையும் அதில் கிடைக்கும் லாபத்தையும் கவனிக்க வேண்டும். வீட்டுமனை விற்பனை மந்தமாக உள்ள இடத்தில் இடத்தை வாங்கிப் போட்டு விட்டு, அதை விற்க முடியாமல் தடுமாறுவதும், கொல்லன் தெருவில் போய் ஊசி விற்று லாபம் பார்க்க முடியவில்லை என்று அல்லாடுவதும் கூடாது.

8. அதிகக் கடன் என்றால் தவிர்த்து விடுங்கள் :

அதிகக் கடன் உள்ள நபர்களோடு அல்லது நிறுவனங்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்களை நம்பி முதலீடும் செய்யாதீர்கள்.

9. பிரித்து முதலீடு செய்யுங்கள் :

உங்களிடம் இருக்கும் மொத்த பணத்தையும் வீட்டுமனையில் மட்டுமே முதலீடு செய்யாதீர்கள். எப்போது வேண்டுமானாலும் வீட்டுமனைகளின் விலை வீழ்ச்சி அடையலாம். அதே போல, தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யாதீர்கள். பங்குகளில் மட்டும் முதலீடு செய்யாதீர்கள். கடன் பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யாதீர்கள். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும் இவற்றின் விலை வீழ்ச்சி அடையலாம். கலந்து முதலீடு செய்யுங்கள். ஒன்றில் விலை வீழ்ச்சி அடைந்தாலும் மற்றவற்றில் முதலீடு உங்கள் மதிப்பைக் குறையாமல் காப்பாற்றும்.

10. கற்றுக் கொண்டே இருங்கள் :

சிறந்த முதலீட்டாளராக இருக்க விரும்பினால் நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அரசாங்கத்தின் பொருளாதா முடிவுகள், நிதிச் சந்தையின் போக்குகள், புதுப்புது முதலீடுகள் என்று எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும். இவற்றின் மாற்றங்களைப் புரிந்து கொண்டு முதலீட்டு உலகில் நீங்கள் சக்கரவர்த்தியாக நீடிக்க வேண்டுமென்றால் நீங்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

பப்பெட் வழியில் முதலீடு செய்ய உங்களுக்குத் தேவையான பத்து விசயங்கள் இவைதான். இவற்றைப் புரிந்து கொண்டு முதலீடு செய்தால் நீங்களும் பப்பெட் ஆகி விடலாம்.

Sunday, 12 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 13.01.2025 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) தமிழகத்தில் நூறாண்டுகளைக் கடந்து செயல்படும் 2238 பள்ளிகளில் ஜனவரி 22 முதல் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

2) தேசிய கல்விக் கொள்கையால் பாரம்பரிய இந்தியக் கல்வி திரும்பும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

3) தமிழ்தான் தமிழர்களை இணைக்கும் தொப்புள் கொடி என அயலகத் தமிழர் தினத்தில் பேசிய முதல்வர் தெரிவித்துள்ளார்.

4) பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5) சமூக ஊடகங்களால் இந்திய ஜனநாயகம் வலுவடைந்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

6) இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டு நலிவடையும் சர்வதேச நிதியம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

7) உலகின் சக்திவாய்ந்த கடவுசீட்டு வரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு 85வது இடம் கிடைத்துள்ளது.

8) உலகின் வெப்பமயமான ஆண்டாக 2024 அறிவிக்கப்பட்டுள்ளது.

9) தொலைதொடர்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

10) அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் பலியாகியுள்ளனர். 12000 கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன.

English News

1) 2238 schools in Tamil Nadu that have been functioning for over a century will celebrate their centenary from January 22.

2) Governor R.N. Ravi has said that traditional Indian education will return with the National Education Policy.

3) The Chief Minister, speaking on the World Tamil Diaspora Day, said that Tamil is the umbilical cord that connects Tamils.

4) A bill to impose the death penalty for those involved in sexual crimes has been introduced in the Legislative Assembly.

5) The Prime Minister has said that Indian democracy has been strengthened by social media.

6) The International Monetary Fund has released a forecast that the Indian economy will weaken this year.

7) Singapore has topped the list of the world's most powerful passports. Japan is in second place. India has got 85th place.

8) 2024 has been declared the world's warmest year.

9) The revenue of telecommunication companies has increased by 10 percent.

10) 16 people have died in a wildfire in the city of Los Angeles in the United States. 12,000 buildings have been destroyed.

Saturday, 11 January 2025

ஏன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை? – ஒரு சிறிய கதை!

ஏன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை? – ஒரு சிறிய கதை!

ஏன் இந்த உலகில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் ஏமாற்றுபவர்கள்தான் இந்த உலகில் எத்தனை எத்தனை?

ஏன் இப்படி ஒரு நிலைமை?

அதிலும் அரசியல்வாதிகள் இருக்கிறார்களே! அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளைத் தண்ணீரில்தான் எழுத வேண்டும்.

ஏன் அப்படி என்கிறீர்களா? அதைப் புரிந்து கொள்ள நீங்கள் இந்தக் கதையைக் கேளுங்கள்.

ஓர் அரசியல்வாதி, தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார். மக்கள் தங்கத் தட்டில் சாப்பிடுவார்கள் என்றார். உழைக்காமலேயே சம்பாதிக்கலாம் என்றார். மாதந்தோறும் தேவையான பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்றார்.

மக்களும் அவரது வாக்குறுதிகளை நம்பி அவரைத் தலைவராக்கினர்.

அவர் தலைவரானார்.

ஆனால், நாட்டில் தேனாறு ஓடவில்லை. பாலாறும் ஓடவில்லை. ஏற்கனவே நன்றாக ஓடிக் கொண்டிருந்த ஆறுகள் ஓடாமல் வறண்டு போனதுதான் மிச்சம்.

மக்களும் தங்கத் தட்டில் சாப்பிடவில்லை. வழக்கமாக சாப்பிடும் நெளிந்து போன அலுமினிய தட்டில்தான் கால் வயிற்றுக்கும் அரை வயிற்றுக்கும் சாப்பிட்டார்கள்.

மக்கள் என்னதான் உழைத்தாலும் வாழ்க்கையை ஓட்டுவதற்கேற்ப சம்பாதிக்கவும் முடியவில்லை. கையில் பத்து பைசாவைப் பார்ப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் அலைந்தனர். விலைவாசி அவ்வளவு அதிகமாக இருந்தது.

இப்போது அந்தத் தலைவரைப் பார்த்து அவரது அந்தரங்க செயலாளர் கேட்டார், ஐயா நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்னவோ நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்தீர்களே. அவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லையே என்று.

தலைவர் சிரித்தார். தனது அந்தரங்க செயலாளரைத்  தூண்டிலோடு மீன் பிடித்து வருவோம் வா என்று அழைத்துக் கொண்டு போனார்.

அவர்கள் இருவரும் தூண்டிலில் புழுக்களை மாட்டி ஏராளமான மீன்களைப் பிடித்தார்கள்.

இப்போது தலைவர் அந்தரங்க செயலாளரைப் பார்த்து, இப்போதுதான் மீன்களைப் பிடித்து விட்டோமே, இப்போது இந்தப் புழுக்களை மீன்களுக்கு உணவாகக் கொடுப்போமா எனக் கேட்டார்.

அதற்கு அந்தச் செயலாளர், இனி அந்த மீன்களுக்கு எதற்குப் புழுக்கள் என்றார்.

உடனே தலைவர், வாக்குறுதிகளும் அப்படித்தான். ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான். ஆட்சியைப் பிடித்து விட்டால் அவற்றை ஏன் நிறைவேற்ற வேண்டும்? அப்படி நிறைவேற்றுவது என்பது தூண்டிலில் புழுக்களை மாட்டிப் பிடித்த மீன்களுக்கு புழுக்களை எடுத்து உணவாகக் கொடுப்பதைப் போன்றது என்றார்.

அந்தச் செயலாளர் புரிந்து கொண்டார்.

நீங்களும் புரிந்து கொண்டீர்கள்தானே?

இப்போது தெரிகிறதா? யாரும் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்ற மாட்டேன்கிறார்கள் என்று, அதுவும் அரசியல்வாதிகள் அறவே ஏன் நிறைவேற்ற மாட்டேன்கிறார்கள் என்று.

இக்கதை உங்களது புரிதலுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

*****

Friday, 10 January 2025

உலகத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? – உங்களுக்காகவே ஒரு கதை!

உலகத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? –

உங்களுக்காகவே ஒரு கதை!

ஓர் ஊரில் முனிவர் ஒருவர் இருந்தார்.

அவரைப் பார்க்க நான்கு பேர் வந்தார்கள்.

அவர்களுக்கு ஒரு சந்தேகம்.

அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவே முனிவரிடம் வந்தார்கள்.

இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லையே. அதை எப்படி புரிந்து கொள்வது என்று தங்கள் சந்தேகத்தை முனிவரிடம் கேட்டார்கள்.

முனிவர் தனக்குத் தெரியவில்லை என்று பொட்டில் அடித்தாற் போல பதில் சொல்லி விட்டார்.

மிகப் பெரிய முனிவரான உங்களுக்கு எப்படி விடை தெரியாமல் இருக்கும் என்று அந்த நான்கு பேரும் கேட்டார்கள்.

அதற்கு அந்த முனிவர் இதற்கு உங்களுக்குப் பதில் தெரிய வேண்டும் என்றால் உங்கள் நான்கு பேரையும் புஷ்பக விமானத்தில் அழைத்துச் செல்கிறேன். போகிற வழியில் நீங்கள் சில காட்சிகளைப் பாருங்கள். அதைப் பற்றி உங்களுடைய கருத்தைச் சொல்லுங்கள். உங்கள் கருத்து சரியாக இருந்தால் நீங்கள் புஷ்பக விமானத்தில் இருக்கலாம். தவறாக இருந்தால் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்து விடுவீர்கள் என்றார்.

நான்கு பேரும் அதை ஏற்றுக் கொண்டு முனிவருடன் புஷ்பக விமானத்தில் ஏறினர்.

அவர்கள் போகிற வழியில் தன் குட்டிகளுடன் பசியோடு இருக்கும் புலி ஒன்றைக் கண்டனர். அந்தப் புலி தன் குட்டிகளின் பசியைத் தீர்ப்பதற்காகத் தீவிரமாக இரை தேடிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் தாகத்தால் தவித்த மான் ஒன்று தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள தன் குட்டிகளோடு அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தது. மானைப் பார்த்த புலி அதை அடித்துக் கொன்றது. அந்த மானை இரையாக தன் குட்டிகளுக்குக் கொடுத்தது.

இந்தக் காட்சியைக் காட்டிய முனிவர் அது பற்றிய கருத்தைக் கேட்டார்.

உடனே ஒருவர் இது மிகவும் தவறானது. இப்போது மான் குட்டிகளுக்கு தாய் இல்லாமல் போயிற்றே என்றார்.

உடனே அவர் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்தார்.

இப்போது முனிவர் இரண்டாம் ஆளைப் பார்த்து அவரது கருத்தைக் கூறுமாறு கேட்டார்.

முதல் ஆள் கீழே விழுந்ததைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட அவர் இது மிகவும் சரியானது. புலிகளுக்கு இரையாகத்தானே மான்கள் இருக்கின்றன என்றார்.

உடனே அவர் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்தார்.

இப்போது மூன்றாவது ஆளைப் பார்த்து முனிவர் அவரது கருத்தைக் கேட்டார்.

இரண்டு ஆட்கள் கீழே விழுந்ததைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட அவர் இது சரியும் இல்லை, தவறும் இல்லை என்றார்.

உடனே அவரும் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்தார்.

இப்போது கடைசி ஆளைப் பார்த்து முனிவர் கருத்து கேட்டார்.

அவர் எனக்குத் தெரியவில்லை என்றார்.

அவர் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழவில்லை.

இப்போது முனிவர் இந்த உலகில் பல விசயங்கள் இருக்கின்றன. தெரியாத விசயங்களுக்குத் தெரியாது என்று பதில் சொல்வதுதான் சிறந்தது. சாமர்த்தியமாகப் பதில் சொல்வதாக நினைத்துத் தெரியாத கேள்விகளுக்குப் பதில் சொல்லி சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை என்றார்.

அந்த நான்காமவர் இப்போது புரிந்து கொண்டார்.

உங்களுக்குப் புரிந்ததா?   

இந்த உலகத்தை இப்போது புரிந்து கொள்ள முடிகிறதா?

புரிந்து கொள்ள முடிந்தால் உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி! வணக்கம்!

*****

Thursday, 9 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 10.01.2025 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) கோயம்புத்தூரில் 2 மில்லியன் சதுர அடியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

2) கோயில்களுக்குச் சொந்தமான 1100 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

3) 2 கோடியே 21 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4) பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) புதிய விதிகளுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.

5) திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். பலியாகியுள்ளோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணத் தொகையை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

6) பெண்கள் பணி புரிவதற்கான பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது.

7) இந்தியாவில் மின்சார கார் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. டாடா நிறுவனம் மின்சார கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.

8) ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்.ஐ.சி) இல் உரிமை கோரப்படாத தொகை 22,237 கோடி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

9) டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவின் பும்ரா முதலிடம் பிடித்தார்.

English News

1) The Chief Minister has announced that an artificial intelligence technology park will be set up in Coimbatore on 2 million square feet.

2) The Hindu Religious Endowments Department has said that 1100 kg of gold belonging to temples is deposited in banks.

3) The Tamil Nadu government has announced that Pongal gift packages will be given to 2 crore 21 lakh families.

4) A resolution against the new rules of the University Grants Commission (UGC) was unanimously passed in the Tamil Nadu Legislative Assembly.

5) 6 people have died in a stampede in Tirupati. The Andhra Pradesh government has announced a compensation of Rs 25 lakh each to the families of the victims.

6) Bengaluru tops the list of safest cities for women to work. Chennai is second.

7) Electric car sales in India have increased by 20 percent. Tata is the number one in electric car sales.

8) Life Insurance Corporation (LIC) has reported that there is an unclaimed amount of Rs 22,237 crore.

9) India's Bumrah has topped the Test cricket rankings.

Wednesday, 8 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 09.01.2025 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக வி. நாராயணன் ஜனவரி 14 அன்று பொறுப்பேற்கிறார்.

2) வி. நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கே. சிவனுக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது.

3) நாட்டில் அதிக அளவு வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

4) பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

5) பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

6) ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நேற்று கூடியது.

7) திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 126 பலியாகியுள்ளனர். திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவானது.

8) சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து கிலோ 110 ரூபாயாக அதிகரித்தது.

9) இந்தியாவில் மைக்ரோசாப்ட் 25,700 கோடி முதலீடு செய்ய உள்ளது.

English News

1) V. Narayanan will take charge as the chairman of the Indian Space Research Organisation (ISRO) on January 14.

2) V. Narayanan is from Kanyakumari district. It is noteworthy that V. Narayanan from Tamil Nadu will take charge as the chairman of the Indian Space Research Organisation after K. Sivan.

3) Tamil Nadu is the top state in the country in terms of providing the highest number of jobs.

4) The Chief Minister will launch the Pongal Gift Package Scheme today.

5) The Chief Minister has said that crimes against women will be suppressed with strong acts.

6) The first meeting of the Joint Parliamentary Committee on the One Nation, One Election Bill was held yesterday.

7) 126 people have died in the earthquake in Tibet. The earthquake in Tibet was recorded as 6.8 on the Richter scale.

8) The price of small onions has increased to Rs 110 per kg.

9) Microsoft is set to invest Rs 25,700 crore in India.

NMMS தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

NMMS தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் திட்டத் தேர்வுக்கான (NMMS) விண்ணப்பங்களை இணையவழியில் (ஆன்லைன்) 09.01.2025 முதல் 25.01.2025 வரை பதிவேற்றம் செய்யலாம். இது குறித்த மேலதிக தகவல்களைக் கீழே காண்க.


Tuesday, 7 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 08.01.2025 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிப் பட்டங்கள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

2) பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

3) ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 இல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 இல் நடைபெறுகிறது.

4) சென்னை தீவுத்திடலில் 49வது பொருட்காட்சி தொடங்கியது.

5) சென்னை மாநகராட்சி பேருந்துகளில் திறன்மிகு அட்டை (ஸ்மார்ட் அட்டை) பயன்படுத்திப் பயணிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

6) ஐந்து நாட்கள் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

7) இந்தியாவில் விரைவில் புல்லட் ரயில் இயக்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

8) டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5 இல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும்.

9) கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

10) வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

English News

1) The University Grants Commission has announced that university and college degrees from states that do not accept the new education policy will be invalid.

2) The University Grants Commission has announced that the Governor will appoint the search committee for the Vice-Chancellor of universities.

3) The by-election for the Erode East constituency will be held on February 5. The counting of votes will be held on February 8.

4) The 49th exhibition has started at the Chennai.

5) A project to travel using a smart card in Chennai Corporation buses has been launched.

6) The Assembly Speaker Appavu has announced that the Legislative Assembly session will be held for five days.

7) The Prime Minister has announced that the bullet train will be operational in India soon.

8) The Delhi Assembly elections are scheduled to be held on February 5. The counting of votes will be held on February 8.

9) Canadian Prime Minister Justin Trudeau resigned from his post.

10) North Korea's missile test has created tension on the Korean Peninsula.